புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் அனுசரணையில் முதன் முறையாக தேசிய ரீதியில் அல்-குர்ஆன் மனனப் போட்டியொன்றை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியினை எதிர்வரும் ஜுலை15 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்போட்டிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளை மையப்படுத்தி ஆண், பெண் இரு பாலாருக்கும் நான்கு பிரிவுகளாக நடாத்தப்படுவதுடன், மொத்தம் 08 பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறும். (ஆண்கள் பிரிவுகள் - 04, பெண்கள் பிரிவுகள் -04).
மேற்படி போட்டி நடைபெறும் காலம் மிகக் குறுகியது என்பதனால் திணைக்கள கள உத்தியோகத்தர்களின் ஊடாக விண்ணப்பம் தொடர்பான விடயங்கள் 'வட்ஸ்அப்' மூலமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் 05 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவதுடன், சவூதி அரேபிய தூதரகத்தின் மூலமாக வெற்றியாளர்கள் பெறுமதியான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- எம்.எஸ்.எம்.ஸாகிர்
No comments:
Post a Comment