மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சேக்களின் நண்பன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை,கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைக்கு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு 10.7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காலம் காலமாக இருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஏதாவது நலன்புரி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாட்டுக்கு அந்நிய செலாவணியை காலம் காலமாக ஈட்டித் தரும் பெருந்தோட்ட மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும்.
வர்த்தகத்துறை அமைச்சுக்கு கடந்த ஆண்டு 1.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வருடம் 5.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏதேனும் புதிய அபிவித்தி திட்டங்களை ஆரம்பிக்க அவதானம் செலுத்துங்கள். வாழைச்சேனை கடதாசி உற்பத்தி நிலையம், பரந்தன் கனியமணல் அகழ்வு தொழிற்துறை காணப்படுகின்றன.
பொறுப்பு வாய்ந்த தரப்பினர் இருக்கும் வளங்களை எவ்வாறு சூறையாடலாம் என அவதானம் செலுத்துகிறார்களே தவிர வளங்களை கொண்டு எவ்வாறு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவது என்பது குறித்து அவதானம் செலுத்துவதில்லை.
மட்டக்களப்பு மற்றும் திருக்கோவில் பகுதியில் உள்ள இல்மனைட் வளம் சூறையாடப்படுவதை தொடர்ந்து எதிர்ப்போம்.
ஆகவே இந்த பகுதியில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தினால் அதனை முழுமையாக வரவேற்போம்.
இந்த அமைச்சுக்கு சுமார் 15 பில்லியன் அளவு நிதி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் இடம்பெற்ற சீனி, தேங்காய் எண்ணெய் மற்றும் வெள்ளைப்பூண்டு மோசடியால் அரச வருமானம் பெருமளவில் இழக்கப்பட்டது.
இவ்வாறான மோசடிகளைகுறிப்பிட்டுக் கொண்டு செல்லலாம். ஆனால் நாட்டுக்கு வருமானத்தை தேடிக் கொடுக்கும் பெருந்தோட்டத்துறை மற்றும் கைத்தொழில் துறை அமைச்சுக்கு 15 பில்லியன் ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச நிதியை மோசடி செய்து நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளவர்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை என்ன? மோசடி செய்யப்பட்ட அரசுடமையாக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,?.
ஆனால் நாட்டை அபிவிருத்தி செய்யும் அமைச்சுகளுக்கு சொற்ப நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.
பிள்னைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது பிரச்சினைக்குரியதாக உள்ளது. முட்டையின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு முட்டை ஒன்றை வாங்கி கொடுக்க முடியாத நிலைக்கு இந்த நாட்டு மக்கள் உள்ளாகியுள்ளார்கள்.
கைத்தொழில் அமைச்சு ஊடாக நாட்டின் கைத்தொழில்துறையை விரிவுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தையும்,கொழும்பு துறைமுக நகரத்தையும் தனதாக்கியுள்ளது.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எந்த அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சீனாவின் முதலீடுகளில் இலங்கைக்கு எவ்வித நலனும் கிடைக்கப் பெறவில்லை.
சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் கடன்மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவாக செயற்பட வேண்டும்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கும் போது சீனா இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது. இதனை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சீனா இலங்கைக்கு சார்பாக செயற்படுகிறது என குறிப்பிடுகிறார்கள். இதனை பைத்தியகாரத்தனமாக பேச்சு என்று குறிப்பிட வேண்டும்.
சீனாவில் ஜனநாயகம், மனித உரிமைகள் இல்லை. மத சுதந்திரம் இல்லை. இவ்வாறான சூழலையா இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள். சீனா இலங்கையின் உண்மையான நட்பு நாடு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவினதும், அவரது குடும்பத்தினரது நண்பராகவே சீனா உள்ளது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment