இலங்கையில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில் மாற்றங்களை உள்வாங்கி, எதிர்வரும் காலங்களில், இலகுவான, ஒரு பக்க பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஆட்பதிவுத் திணைக்களம்.
அடிப்படையில், இன ரீதியிலான அடையாளப்படுத்தலைத் தவிர்த்து, அனைவரையும் இலங்கையர் என குறிப்பிடுவதோடு தாய் - தந்தையர் விவாகஞ் செய்தவரா போன்ற விபரங்களும் தவிர்க்கப்படவுள்ளதாகவும், ஒருவருடைய தாய் மொழியிலேயே அவருக்கான பிறப்புச் சான்றிதழை வழங்கவுள்ளதோடு, எதிர்கால தேவைகளைக் கருத்திற் கொண்டு, ஏனைய மொழிகளிலான உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புகளும் கூடவே வழங்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் பரிசோதிக்கப்பட்டு வரும் நடைமுறையானது, எதிர்வரும் வருடத்தில் சுமார் 100 பிரதேச செயலகங்களில் அமுலுக்கு வரவுள்ளதாகவும், பின் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும், எதிர்வரும் காலங்களில் பிறப்பிலேயே தேசிய அடையாள இலக்கம் வழங்கப்படவுள்ளதுடன் அதுவும் பிறப்புச் சான்றிதழில் இணைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment