இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பிரிவின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் பேருவளை சனூஸ் முஹம்மத் பெரோஸ் அவர்கள் நேற்று தனது 61ஆவது வயதில் காலமானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
நீண்ட காலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பிரிவில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் ஒலிபரப்பாளராகவும் பணி புரிந்த சகோதரர் சனூஸ் முஹம்மத் பெரோஸ் அவர்களது இழப்பு இத்துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில் :-
சிறந்த குரல் வளம், தமிழ் மொழி உச்சரிப்பு, அவரது ஆற்றல் என்பவற்றின் காரணமாக ஒலிபரப்புத் துறையில் முன்னணி ஊடகவியலாளராகத் திகழ்ந்தார். ஊடகத் துறையில் விரிவுரைகள், வகுப்புக்களையும் நடத்தி தனது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
தமிழ் சேவையில் பகுதி நேர தொடர்பாளராக பணியாற்றியதோடு கட்டுப்பாட்டாளர் பதவியையும் வகித்தார். சிறிது காலம் முஸ்லிம் சேவையின் தலைவராகவும் பணியாற்றினார்.
இலங்கை ரூபவாஹினியில் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். சிறந்த செய்தித் தொகுப்பாளருக்கான ஜனாதிபதி விருதை இரண்டு முறை வென்றமை குறிப்பிடத்தக்கது. நாடகத் துறையிலும் பிரகாசித்து கலைத் துறையினரதும் பாராட்டைப் பெற்றார்.
எல்லோருடனும் இனிமையாக பழகக்கூடிய ஒருவர். ஆராவாரமின்றி, பெருமையின்றி நிதானமாக இத்துறையில் பணி புரிந்த சகோதரர் சனூஸ் முஹம்மத் பெரோஸ் அவர்களின் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறது. அவரது மறுமை வாழ்வு வெற்றி பெற பிரார்த்திக்கிறது.
வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து அவரது அத்தனை நற்கருமங்களையும் ஏற்று அங்கீகரித்து உயர்ந்த சுவனபதியை வழங்குமாறும் அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய பொறுமையை வல்ல இறைவன் வழங்கவும் பிரார்த்திப்போமாக!
என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான்
பொதுச் செயலாளர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
No comments:
Post a Comment