இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக திங்கட்கிழமை(7) ஆரம்பமாகியது.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில் இன்று (7)சம்பிரதாய பூர்வ ஆலவட்ட நிகழ்வுடன் ஊர்வலமாக ஆரம்பமாகியுள்ள பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை(10) ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன்படி நான்கு நாட்களுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் எட்டு அமர்வுகளாக நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இந்த பொதுப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமான 2621 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
1 ஆம் அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் , பொறியியல் பீடத்தினைச் சேர்ந்த 475 பேரும் 2 ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச் சேர்ந்த 219 பேரும், 3 ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச் சேர்ந்த 348 பேரும், 4 ஆம் அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடத்தினைச் சேர்ந்த 329 பெரும், 5 ஆம் அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 313 பேரும், 6ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 277 பேரும் 7 ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 348 பேரும்இ 8 ஆம் அமர்வில் கலை, கலாச்சார பீட மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடங்களின் 312 வெளிவாரி மாணவர்களும் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
அத்துடன், 4 பேர் முதுதத்துவமானிப்பட்டங்களையும், 23 பேர்வியாபார நிருவாக முதுமானிப்பட்டங்களையும், 2 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவினையும் பெறவுள்ளனர்.
இதேவேளை இப்பொதுப்பட்டமளிப்பு விழாவில், பேராதனை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.தில்லை நாதன், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ஜௌபர் சாதிக் ஆகிய இருவருக்கும் கௌரவ கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விழாவில் முதல் நாள் நிகழ்வில் இணையவழி ஊடாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஏனைய அதிதிகளான உயர் நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, றுகுணு பல்கலைக்கழக பேராசிரியர் காமினி சேனனாயக்க (முன்னாள் உபவேந்தர்) ஆகியோரின் சிறப்புரைகளும் அடுத்த நாள் நிகழ்வுகளில் இடம்பெறவுள்ளன.
அத்துடன் விழாவிற்கு வருகை தரும் பட்டம்பெறும் மாணவர்கள் குறைந்த அளவு குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தருமாறும், அனுமதி அட்டை, கொவிட் தடுப்பூசி அட்டை என்பவற்றுடன் வருகை தருவோர் மட்டுமே பட்டமளிப்பு விழாவளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவரெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment