பிரதேச சபை தேர்தல் கேட்க வேண்டிய என்னை விமர்சித்து பாராளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது இன்று என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று எனக்கு தெரியாமல் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி இராசமாணிக்கம் அமைப்பினால் மாதிரிப் பரீட்சை வினாத்தாள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் வியாழக்கிழமை(6) நடைபெற்ற போது அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு தனது கருத்தில் தெரிவித்ததாவது
மாகாண சபை முறைமையினை பலவீனமாக்க வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் அக்கறையாக கிழக்கு மாகாண ஆளுநர் தொடக்கம் அதிகாரிகள் சிலரும் இருப்பது நிதர்சனமான உண்மையாகும்.இவ்வருடம் கிழக்கு மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி நிலைமையினை நோக்குவோமாயின் கவலையாகவே உள்ளது.இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிகளில் நிர்வாகத்திற்கே நிதிகள் வழங்கப்பட்டுள்ளதே தவிர மேலதிகமாக வேலைத்திட்டங்களை செய்வதற்கான நிதிகள் வந்து சேரவில்லை.இவ்வாறு உள்ள நிலையில் மாகாண பாடசாலை விடயத்தில் எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்வது என்பது சவாலான விடயமாகும்.அத்துடன் எமக்கான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்காமல் விட்டால் முழுமையாக எமது வேலைத்திட்டங்களை செய்ய முடியாது.கடந்த 74 ஆண்டுகளாகவே தீர்வு நிலைமை தொடர்ந்து வருகின்றது.எமக்கென அதிகாரங்கள் எமது கைகளில் இருக்க வேண்டும்.இன்று கல்முனை என்றாலே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மட்டும் தான் பேசப்படும் விடயமாகும்.கல்முனை என்று இன்று நான் சொன்னால் கூட எனக்கு எதிராக விமர்சனங்கள் வரும்.மாணவர்களின் கல்வி தொடர்பில் அக்கறை யை நாம் செலுத்த வேண்டுமாயின் நிரந்திர அரசியல் தீர்வினை அடைய வேண்டும்.
இதை விட நான் தமிழ் மக்கள் என கூறுவது தமிழ் இஸ்லாம் கிறிஸ்தவ மக்களையே நான் கூறுகின்றேன்.இதனை 3 ஆக பிரித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.எமக்கு மாகாண சபையின் ஊடாக நிதி அதிகாரமிருந்தால் நாங்கள் ஆளுநரிடம் பிச்சை கேட்பது அவசியமில்லை.சில விடயங்களை நாம் காலில் விழுந்து கேட்டால் கூட கிடைக்கப்பெறாத நிலைமையிலே உள்ளது.தற்போது கூட வந்த வளங்கள் அனைத்தும் உகண தமண தெஹியத்த கண்டிய பதியத்தலாவ அந்த பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை நாங்கள் வெளிப்படையாக சொன்னால் இவர் துவேசமாக கதைப்பதாக கூறுவார்கள்.எனவே தான் இவ்வாறான வளங்களை பெறுவதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றாக வாழ்வதற்கு இணங்க வேண்டும்.
அப்படி இல்லாமல் நாம் சண்டைபிடித்து கொண்டு இருப்போமாயின் எமது வளங்கள் வேறு இடங்களுக்கு போய் விடும்.எதிர்வரும் மாகாண சபை தேர்தலாக இருக்கட்டும் அல்லது அரசியல் தீர்வாகவும் இருக்கட்டும் இரு சமூகமும் ஒன்றாக இருக்காவிடின் தமிழ் பேசாத ஒரு முதலமைச்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.அது ஒரு சதித்திட்டமாகும்.இந்த இடத்தில் இவ்விடயத்தை கூறுவதற்கு காரணம் கல்வியலாளர்களாகிய நீங்கள் சமூகத்தில் பல்வேறு கருத்துக்களை கொண்டு செல்லக்கூடியவர்கள்.ராஜபக்ச குடும்பத்தினுள் அடிபிடி பிரச்சினைகள் உள்ளது.அந்த வகையில் இரு சமூகங்களுக்கு இடையில் பிரச்சினை எழுவது தவிர்க்க முடியாத விடயமாகும்.
ஆகவே இவற்றை எப்படி பேசி தீர்க்கலாம் என்பதை ஆராய வேண்டும்.இதற்கு உங்களை போன்ற புத்திஜீவிகளின் ஆதரவு எமக்கு தேவையாகும்.எமக்கு நிதி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதிகளை பெற்று கொள்ள கூடியதாக இருக்கும்.இலங்கையில் சாப்பிட கூட வழி இல்லாமல் மக்கள் இருக்கின்றார்கள்.
அரசியல் தீர்வில் தான் எமது மக்களின் பொருளாதார அபிவிருத்தியும் தங்கி இருக்கின்றது .எனவே எதிர்காலத்திலாவது நாம் சிந்தித்து செயற்பட வேண்டும்.தமிழ் மக்களை கடந்த காலங்களில் அடித்தமையினால் களைத்துவிட்டார்கள் என்பது தான் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு.40 வருடங்களாக தமிழர்களுக்கு அடித்து விட்டோம் இனி அவர்களுக்கு அடித்தால் சிங்கள மக்களிடம் எடுபடாது என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது.அடுத்த 20 வருடங்களுக்கு இஸ்லாமிய மக்களை தான் குறி வைக்க போகின்றார்கள்.இதனை அம்மக்கள் உணர்ந்து விட்டார்கள்.இதனால் மொட்டிற்கு அவர்கள் தேர்தலில் வாக்களிக்க வில்லை.எனவே கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை மறந்து எதிர்காலத்தில் பயணிப்பதற்கு நாங்கள் தயார்.ஒரு சிலர் இருக்கலாம் ஏனைய மக்களுடன் வாழலாம் என நினைக்கலாம்.இன்று தமிழ் சமூகம் உணர்ந்துள்ளது இரு சமூகமும் ஒன்றாக சேரந்து வாழ வேண்டும் என வந்திருக்கின்றார்கள்.இதற்கும் எனக்கு விமர்சனங்கள் வரலாம்.எனக்கு விமர்சனம் தான் எனது வளர்ச்சியில் கூட பாதை அமைத்து தந்திருக்கின்றது.
பிரதேச சபை தேர்தல் கேட்க வேண்டிய என்னை விமர்சித்து பாராளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது இன்று என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று தெரியாது.எனவே இனிவரும் காலங்களில் இரு சமூகமும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும்.அம்பாறை மாவட்டத்தில் குடியேற்ற திட்டங்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.ஒரு நாளுக்குள் 10 ஆயிரம் ஏக்கர்கள் ஒரு இரவுக்குள் பறிக்கப்படுகின்றன.இனியாவது இவ்வாறான விடயங்களுக்கு இடங்கொடுக்காது இரு சமூகமும் பார்க்க வேண்டும்.2022 ஆண்டு நாட்டில் பொருளாதார சிக்கல்கள் வரலாறு காணாத வகையில் வரும். 4 மற்றும் 5 ஆம் மாதங்களில் உணவு பஞ்சம் வரும்.தெற்கில் மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளார்கள்.எனவே அவர்களில் சிலரை இணைத்து நாம் புதிய அரசியல் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எனது அவாவாகும் என தெரிவித்தார்.
இவ் நிகழ்வில் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டு குறித்த மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்ததுடன் நிகழ்வில் பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் வலய ஆசிரியர்களும் இலங்கை தமிழரசு வாலிபர் முன்னனி துணைச் செயலாளர் நிதான்சனும் கலந்து கொண்டனர்.
- பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment