“ஜுனைதா ஷெரீப் - கரிசல் இலக்கிய ஆளுமை” - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 October 2021

“ஜுனைதா ஷெரீப் - கரிசல் இலக்கிய ஆளுமை”

 



கிழக்கிலங்கை வட்டார இலக்கியத்தின் கதாநாயகன், ஈழத்து எழுத்துலகின் ஜாம்பவான், மிகச்சிறந்த கதைசொல்லி, மட்டக்களப்புக் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் “ஜுனைதா ஷெரீப்”, வயது முதிர்வு காரணமாக காத்தான்குடியில் இன்று காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது எண்பத்தி ஒன்று (81).

 

1940.09.15 யில் காத்தான்குடியில் பிறந்தார். காத்தான்குடி என்பது அவர் பிறந்த காலத்தில் சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் பிறந்தே அத்தனையும் சாதித்தார் ஜுனைதா ஷெரீப். அவரது இயற்பெயர் கச்சி மொஹமட் மொஹமட் ஷெரீப். அவரது தந்தை கச்சி மொஹமட், தாய் யூசுப் லெவ்வை கஜீதா உம்மா. அல் - நஸார் வித்தியாலயமெனப் பெயர் கொண்ட காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பாடசாலை மற்றும் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

 

1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியராக இணைந்து பின்னர் இலிகிதராக நியமனம் பெற்று மட்டக்களப்பு கச்சேரியில் பல வருடங்கள் கடமை புரிந்து ஈற்றில் சிலோன் நிர்வாக சேவை (Ceylon Administrative Service) யில் இணைந்து 1999 யில் ஓய்வு பெறும் வரை பல உயர் பதவிகளை வகித்தார். ஓய்வு பெற்ற பின்னரும் UNHABITAT போன்ற அரச சார்பற்ற நிறுவனத்தில் பல வருடங்கள் பணி புரிந்தார்.

 

இயந்திரத்தனமாக மாறிய உலகில் இதயங்களுக்கு வேலை இல்லாமல் போன கால கட்டத்தில், நிர்வாக சேவை அதிகாரியாகவும், பொறுப்புள்ள குடும்பஸ்தனாகவும் இருந்து கொண்டு உணர்வோடு ஊறிப்போன மண்சார்ந்த கதைக்களங்களை உருவாக்கிய எழுத்தாளர் ஜுனைதா ஷெரீபினை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். அவரது ஒரு மகன் வைத்தியர். பலரும் அவரைப் பெண் எழுத்தாளர் என்றே நீண்ட காலம் நினைத்திருந்தனர். அவரது புனைப் பெயரில் தனது மனைவியின் பெயரையும் (ஜுனைதா) இணைத்திருந்தார்.

 

நிர்வாக சேவை அதிகாரியாக இருந்தமையினால் அவரது சொந்தப் பெயரில் கருத்துக்களை அல்லது படைப்புக்களை வெளியிடுவதில் இருந்த சில மட்டுப்பாடுகளை மையமாக வைத்தே மனைவியின் பெயரை சேர்த்து புனைப்பெயர் உருவானமையும் ஈற்றில் அதுவே அவருக்கு சர்வதேச அளவில் தர அடையாளமாக (Brand Name) மாறியமையையும் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ஜுனைதா ஷெரிப், காத்தான்குடி என விலாசமிடப்பட்டாலே தனது வீட்டிற்கு கடிதம் வந்து சேர்ந்துவிடும் அளவுக்கு அந்த புனைப்பெயர் பிரபல்யம் அடைந்தமையினையும் கூறி அவர் நெகிழ்ந்திருந்தார்.

 

கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் வாழ்வியல் தனித்தன்மை கொண்டதாகும். இங்குள்ள மக்களின் வாழ்வியலில் நெய்தலும் மருதமும் முல்லையும் இரண்டறக் கலந்தவை. இப்படிப்பட்ட பன்முகப் பூமியிலிருந்து விளைந்த வட்டார மண் சார்ந்த இலக்கியப் பரப்பில் கரிசல் இலக்கியத்தினை அள்ளி வழங்கிய பெருமை மறைந்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் அவர்களையும் சாரும்.


ஜுனைதா ஷெரீபைப் பொறுத்தவரை பேச்சுத் தமிழ் மிக முக்கியம் எனக் கருதினார். நாட்டுப்புறப் புனைவு இலக்கியங்கள் பேச்சுத் தமிழில் அமைந்தவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். கடைசிவரை அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். வாசகர்களை சென்றடைவதில் வட்டார வழக்கு இலகு தன்மை கொண்டது என்பதனை அவரது படைப்புக்களில் தாராளமாகக் காண முடியும்.

 

ஜுனைதா ஷெரீப் மட்டக்களப்பு கச்சேரியில் பணிபுரிந்த காலத்தில் அங்கு இயங்கி வந்த நாடகக்குழு ஒன்றின் தலைவரான அவரது நண்பரிடம் மேடை நாடகமொன்றினை எழுதிக் கொடுத்திருந்தார். கதை பொருத்தமற்றது எனக் கூறித் தட்டிக் கழித்த நண்பர் மறைமுகமாக அதன் பிரதியை வானொலிக்கு அனுப்பி ஒலிபரப்பப்பட்ட பின்னர் குறித்த இலக்கியத் திருட்டினை ஜுனைதா ஷெரீப் அறிந்து வருந்தினார். இருப்பினும் தனக்குள் ஒரு எழுத்தாளன் இருப்பதனை அறிந்து கொண்டு தனது எழுத்துலப் பிரவேசத்தை ஆரம்பித்தார்.

 

பேனா எடுத்தார். பிரபஞ்சம் துடைத்தெறிந்தார். “சந்தூக்கு” எனும் நாடகம் ஒன்றினை முதன் முதலில் வானொலிக்கு அனுப்பி அது ஒலிபரப்பப்பட்டது. பின்னர் அவரது ஏராளமான நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன. அத்துடன் நின்றுவிடாமல் தினகரன, வீரகேசரி, தினபதி போன்ற பத்திரிகைகளுக்கு சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவரது நாமம் எழுத்துலகில் நிலைபேறாக மாறிவிட்டது. இலங்கைத் தமிழ் இலக்கிய வெளியில் தவிர்க்க முடியாத ஆளுமையாக ஜுனைதா ஷெரீப் மிளிர்ந்தார்.

 

அவரது நாவல் இலக்கியப் பிரவேசம் சற்று வித்தியாசமானது. அவரது தந்தையை கண் சத்திர சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலை ஒன்றில் பத்து (10) நாட்கள் வைத்திருந்து இரவு பகல் விழிக்க வேண்டி அவருக்கு ஏற்பட்டது. அப்போதுதான் நீண்ட இரவுவேளைகளில் ‘அவன் ஒன்று நினைக்க’ என்ற நாவலை எழுத ஆரம்பித்தார். 1971 யில் அது மித்திரனில் தொடர்கதையாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

 

இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இருபது (20) நாவல்கள் ஆகியனவற்றைப் படைத்திருக்கிறார். “சாணைக்கூறை”, “பெரிய மரைக்கார், சின்ன மரைக்கார்”, “ஜனநாயகம்”, “சூனியத்தை நோக்கி” என்பன மிகவும் பிரபலமான அவரது படைப்புக்களுள் சில. அவரது பல நாவல்கள் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையின் அனுசரணையுடன் எழுதப்பட்டுள்ளன. தேசிய ரீதியாகவும், வட கிழக்கு மாகாண ரீதியாகவும் நான்கு சாகித்திய விருதுகள், இலங்கை அரசின் கலாபூசண விருது, 2019 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது, இலக்கிய வித்தகர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

 

“சாணைக்கூறை” எனும் நாவல், 1980 களிற்குப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்து அறியக் கிடைக்கும் பிரதான இலக்கிய படைப்புக்களுள் ஒன்றாகும். இந்நாவலில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் சமூக, கலை, கலாச்சார, பண்பாட்டு அம்சங்கள் அனைத்தும் விரிவாக விளக்கப்படுவதாகவும் அக்கால மக்களின் மூட நம்பிக்கைகள், அறியாமை என்பவற்றினை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இதன் மூலம் ஜுனைதா ஷெரீபின் படைப்பாளுமை, சாணைக் கூறை நாவலின் தனித்துவம், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்தும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இந்நூலானது பல்கலைக்கழக ஆய்வுக்காகவும் பயன்படுத்தப்பட்டமை சிறப்பம்சமாகும். “சாணைக்கூறை” நாவல் ஏற்படுத்தும் உணர்வு ரீதியான தாக்கம் வார்த்தைகளில் வரையறுத்து விட முடியாதது.

 

பழகியவர்கள் எல்லோரும் “மிகவும் பண்பானவர்” என்று போற்றக்கூடிய இத்தகைய மிகச் சிறந்த இலக்கிய ஆளுமையின் சாதனைகளை நினைவு கூர்தலும் அத்துடன் அவரைப்பற்றிய அறிமுகமொன்றினை இளைய தலைமுறைக்குப் பகிர்தலுமே இக்கட்டுரையின் பிரதான நோக்கங்களாகும். எழுத்துலக நண்பர்கள் அனைவரும் அவரது நினைவுக் கூட்டத்தொடர்களை நடாத்துவது இலக்கியத் துறைக்குச் செய்யும் கைங்கரியமாக அமையும். அவரது நூல்கள் மறுபிரசுரத்திற்குட்படுத்தப்படுவதும் காலத்தின் தேவையாகும்.

 

அன்னாரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காகவும் அவரது குடும்பத்தினரினது ஆறுதலுக்காகவும் பிரார்த்திப்போம்.


- எப்.எச்.ஏ. அம்ஜாட்


No comments:

Post a Comment