முன்னாள் ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதுவித அடிப்படைக் காரணங்களுமின்றி தன்னைத் தடுத்து வைத்திருப்பதாகக் கூறி அசாத் சாலி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் இன்றைய விசாரணையின் போதே சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றுக்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், வழக்கின் விசாரணை ஜுலை 29ம் திகதி தொடரவுள்ளது. கைது செய்யப்பட்டு 100 நாட்களின் பின்னர் முதற்தடவையாக அசாத் சாலிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி அவர் நடாத்தியிருந்த ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும், குறித்த விவகாரம் தொடர்பில் இரு தினங்களுக்குள் அசாத் சாலி மேலதிக விளக்கமளித்திருந்ததுடன் தவறான புரிதல் உருவாவதைத் தடுக்க முயன்றிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
முஸ்லிம் சமூகத்துக்கு முஸ்லிம் தனியார் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசியிருந்த அவர், இதன் போது அதன் முக்கியத்துவத்தை முன் நிறுத்தி பேசிய கருத்துக்கள், நாட்டின் சட்ட திட்டத்துக்கு எதிரானவையாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது(சோனகர்.கொம்).
No comments:
Post a Comment