அரசியல் என்பது சந்தர்பங்களை உருவாக்கிக் கொள்ளும் ஒரு கலை ( Politics is an art of creating opportunities) இப்படி யாரோ சொல்லிவைத்தார்கள். அதை தனது அரசியல் வாழ்க்கையில் சரியாக நிரூபித்துக் காட்டினார் 52 வயதில் திடீர் மரணத்தை தழுவிக்கு கொண்ட புத்தளம் நகர பிதா, KAB என்று புத்தளம் மக்களால் அழைக்கப்படும் கமருதீன் அப்துல் பாயிஸ்.
சுதந்திர இலங்கைக்கான முதல் சபாநாயகரை( இஸ்மாயில் ஐயா) பெற்றெடுத்த இடம், இலங்கைக்கு நீதி அமைச்சரையும், நிதி அமைச்சரையும் (நெய்னா மரிக்கார்) பெற்றுத் தந்த இடம்; என்ற விடயங்களுக்காக இலங்கை வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது புத்தளம். ஆனால் கால் நடை அபிவிருத்தி உதவி அமைச்சர் என்ற பதவியை விட புத்தளம் நகரத்துக்கு ஒரு செயற்திறன் மிக்க "நகர பிதா" என்ற அம்சம்தான் புத்தளம் வரலாற்றில் பாயிஸுக்கு தனியான ஓர் இடத்தை பிடித்துக் கொடுத்துள்ளது என்பது அனேகரின் கணிப்பு.
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியின் ஆரம்பம் இலங்கை முஸ்லீம்களின் அரசியல் வளர்ச்சியின் அஸ்தமனம் என்ற எனது தனிப்பட்ட நிலைப்பாட்டுக்கப்பால், அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் மறைந்த அஸ்ரப் அவர்களினால் கவரப்பட்டு இளவயதில் அரசியலில் கால் பதித்தவர் பாயிஸ். இளமை வேகத்தில் எல்லாருக்கும் உருவாகும் " உலகயே மாற்றியமைக்கும்", அதுவும் நமது சமய நம்பிக்கையால் தான் அந்த "அதிசயம்" நடக்கும் என்ற மனப் போக்கு அவரை ஸ்ரீ.ல.மு. காங்கிரஸில் கரை ஒதுங்க செய்ததில் வியப்பொன்றும் இல்லை. காரணம் அரசியலின் ஆழம் அகலம் தெரியாத இளமைப்பருவம், தனது தலைவர் என்ன தெரியாமலா செய்கின்றார், அவர் செய்வதில் எத்தனை அர்த்தங்கள் உள்ளன. என்னே ஒரு தூர நோக்கு அரசியல் என்றெல்லாம் தம் நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கும் பருவம் அது.
எது எப்படியோ சுமார் 30 வருடங்களைக் கொண்ட தனது அரசியலில் புத்தளம் தன்னால் முடியுமான எல்லா அபிவிருத்திகளையும் பெற வேண்டும் என்ற அவாவும், தாம் செல்லும் வெளிநாடுகளில் காணும், தன்னை கவர்ந்த விடயங்களை நம்மூரிலும் செய்தால் என்ன என்ற ஆர்வக் கோளாறும் அவரிடம் இருந்ததையும் மறக்க முடியாது. அந்த அடிப்படையில் அவரின் அடைவுகளை பறைசாற்ற போதிய விடயங்கள்
புத்தளத்தில் நிமிர்ந்து நிற்கின்றன.
கூடவே, பாதுகாப்பு என்ற விடயத்தில் புத்தளத்தைய் நோக்கி வந்த, வரவிருந்த ஆபத்துக்களை கண்டறிந்து அவைகளை முறியடித்த சந்தர்பங்களை மக்கள் இன்றும் நினைவு கூறுவர். இத்தகைய நிலைப்பாடுகளே புத்தளம்-நுரைச்சோலை ஆள் கொல்லி அனல் மின்நிலையம், புத்தளம்- அருவைக்காடு கழிவகற்றல் திட்டம் போன்றவை தொடர்பாக அவரின் அரச சார்பு நிலைப்பாடுகளை மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் செய்தது என்பது என் நிலைப்பாடு.
ஆனாலும், 2020ம் ஆண்டின் பொதுத்தேர்தலில் பாயிஸின் தனிப்பட்ட தோல்வியானது அவருக்கு ஒரு புதிய அரசியல் பாடத்தை கற்பித்துக் கொடுத்தது. அந்த பாடத்தின் ஊடாக எதிர் வரும் 2025 பொதுத் தேர்தலை( அப்படி ஒன்று நடந்தால்) எப்படி எதிர் கொண்டிருப்பார் அல்லது மாகாணசபை ( அதுவும் நடக்குமானால்) தேர்தலில் என்ன நிலைப்பட்டை எடுத்திருப்பார் அல்லது அரசியலில் தன்னோடு நெருங்கியிருந்து சில மாதங்களுக்கு முன் தன்னுடனான அரசியல் உறவை நேரடியாகவும், முறைமுகமாகவும் முறித்துக் கொண்ட சபை உறுப்பினர்ளை வைத்துக் கொண்டு இன்னும் சுமார் 9 மாதங்களில் ( நிச்சயமாக) நடை பெற இருக்கும் நகர சபை தேர்தலை எவ்வாறு முகங்கொண்டிருபார் என்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான விடை ஒன்றை சொல்லி சென்றுள்ளது அவரின் இந்த திடீர் மரணம். பாயிஸ் அவர்களின் அரசியலை மாதிரியாக (modle) யார் கையில் எடுக்க போகின்றார், அப்படி எடுப்பவர் அதன் விளைவுகளை எந்த நேரத்தில் எப்படியாக எதிர் கொள்ள வேண்டிவரும் என்ற விடயம் இனி அரசியலுக்கு வரவிருப்போருக் போதிக்கும் மறைமுகப் பாடமுமாகும்.
அரசியல் ஆடுகளத்தின் மறு முனையில் இருப்பவர்தான் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம். தேசிய அரசியலில் கால் வைக்க முன்பே நகரசபைத் தேர்தலில் தன் வட்டாரத்தில் தோற்றுப் போனவர், கலப்பு தேர்தல் முறையின் தயவால் நகர சபை சென்று அங்கே "நகரபிதா" வாகும் தன் திட்டத்திற்கு அதிக (பண) முதலீடு செய்து (என்ற குற்றம் சாட்டப்பட்டு) மீண்டும் தோல்வியை தழுவிக் கொண்டவர் ரஹீம் அவர்கள்.
புத்தளம் கடந்த சும்மார் 33 வருடங்களாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெறவில்லை. காரணங்கள் பல இருந்த போதும் பிரதிநிதி ஒருவரை பெறுவதற்கு செய்யப்பட்ட பிழையான பரீச்சார்த்த திட்டங்கள் எதுவுமே எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. மீண்டும் ஒரு பிழையான திட்டம் 2020 தேர்தலில் அதிஸ்டவசமாக ஒரு வெற்றியைக் கொடுத்தது. அந்த அதிஸ்டத்தை பெற்றவர்தான் அவரின் ஆதரவாளர்களால் ASR என்று அழைக்கப்படும் அலி சப்ரி ரஹீம். இவர் இந்த அரசியலை சந்தர்ப்பங்களை உருவாக்கும் ஒரு கலையாக கையாள்கிறாரா என்ற கேள்விக்கு விடை காண விழையும் முயற்சியே இது.
ரஹீம் புத்தளம் பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்து விட்டது. தேர்தல் பிரச்சார மேடைகள் தோறும் அவர் சொல்லி வந்த செய்திதான் தான் " பணத்துக்கோ, பதவிக்கோ விலை போகாதவன். தன் முன்னால் பணமா, பதவியா, அபிவிருத்தியா என்ற கேள்விகள் எழுந்தால் இவை ஒன்றுமே எனக்கு தேவையில்லை, எமது சமூகத்தின் உரிமையே என் தெரிவாக இருக்கும்" என்றார். அத்துடன் நிறுத்தி விடவில்லை. தன் கட்சியின் சக போட்டியாளரான பாயிஸ் அவர்கள் பணத்துக்கும், பதவிக்கும் பின் கதவால் சரணடைய காத்திருக்கின்றார் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
பாயிஸ் அவர்களின் கடந்தகால அரசியல் நகர்வுகள் எமக்கு ஒன்றை மிகத்தெளிவாகக் காட்டியது, அதாவது கடந்த தேர்தலில் பாரளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பாரேயானால் பாராளுமன்றம் செல்ல முன்னே தனக்கான உதவி அமைச்சர் பதவி ஒன்றுக்கான ஏட்பாடுகளை செய்துவிட்டு செல்வார் என்ற நமது கணிப்புக்காகவே நாம் அவரை மிகவும் காரசாரமாக விமர்சித்தோம். அவரின் தோல்வியில் அது நியானமான பங்களிப்பை செய்தது என்பதை அனேகர் ஏற்றும் கொண்டனர். எமது எதிர்ப்பானது அவர் அமைச்சராகவோ பா.ம பிரதிநிதியாகவோ வரக்கூடாது என்பதல்ல, அப்படியான குறுகிய நோக்கம் இருந்திருக்க 2010ல் அவருக்காக மேடை ஏறியிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால் சிங்கள பெளத்த பேரினவாதிகளின் காரணாகருத்தாக்களாக் செயல்படும் ராஜ பக்ச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சியில் சங்கமித்து சிறுபான்மை இனங்களின் இருப்புக்கும், நாட்டின் ஐக்கிய வாழ்வுக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இவர் காரணமாகிவிடக்கூடாது என்ற ஒரு அம்சமே அந்த எதிர்ப்பின் ரகசியம். ஆனால் அதையே தன் அரசியல் மூலதனமாக்கிக் கொண்டார் ரஹீம், இது சமூக நலனுக்காக சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும் கலை அல்ல மாறாக தனக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்ட சுயநலம்.
"பொஹட்டுவ" (PP) கட்சியை வெளிப்படையாக விமர்சித்து, கொரொனாவினால் மரணங்களை தழுவியவர்கள் எரியூட்டபட்டுக் கொண்டிருந்த வேளையிலே பாராளுமன்றம் சென்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ரஹீம் அவர்களின் செயலானது சந்தர்ப்பங்களை உருவாக்கும் அரசியல் கலையை தன் சொந்த நலத்துக்குக்கான கலையாக மாற்றியமைத்ததை வெளிப்படையாகக் காட்டியது. அவரின் தொடர் நடத்தைகள் ஒவ்வொன்றும் தன் சொந்த நலனுக்காக ஒட்டு மொத்த புத்தள மக்களையும் தலைகுனிய வைத்தது என்பதும் இன்று புத்தளம் மக்களால் சகித்துக் கொள்ள முடியுமான விடயமாக அமையவில்லை.
அரசியலமைப்பின் 20ம் திருத்தம் என்பது 19ம் திருத்தத்தினால் ஏற்பட்டுத்தப்பட்ட அனைத்து நல்லம்சங்களையும், சனநாயகத்தை நோக்கி நாடு செல்ல கிடைத்த சிறு, சிறு சந்தர்ப்பங்களையும் நசுக்கி எறிந்தது. எமது உடல்கள் எரியூட்டப்பட போது, மனித நேயம் கொண்ட மொத்த உலகமும் இந்த மனித உரிமை மீறலை, சமய நம்பிக்கை மீறலை காட்டமாக கண்டித்த போது "ரகசியமாக பேசுகிறோம் கிட்டடியில் நல்ல தீர்ப்பு" என்று சுமார் 300 உடல்கள் எரிக்கப்பட பின் "காகம் குந்தி பனம்பழம் விழுந்த கதை" யாக நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏற்பட்ட அழுத்தங்கள், சர்வதேச நிறுவனங்களின் அழுத்தங்கள், பன்நாட்டு இராஜரீக செயற்பாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நமது (சிறுபான்மையின்) உரிமையை பெற்றுத்தந்தது. ஆனால் தமது சுயலாபத்துக்காக 20ம் திருத்தத்திற்கு கையுயர்த்தியவர்களில் ஒருவரான ரஹீம் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற நிலையில், "தமது திரைமறைவு பேச்சுவார்த்தை கைகொடுத்துள்ளதாகவும், இதுவரை எரிந்தவை எல்லாம் வெறும் பெட்டிகளே (அவை இறந்த உடல்கள் அல்ல)" என்ற நசீர் அஹ்மதின் சுய இன்பம் காணும் பேச்சை ஆமோதித்ததும் இவரின் அரசியல் வங்குரோத்து நிலையை மேலும் தெளிவாகக் காட்டியது.
ரஹீம் போன்றோரின் அற்ப ஆசையை ( பிரதி அமைச்சராவது) நன்கு அறிந்தகொண்ட அரசாங்கம் எட்டி எட்டி பாயும் நரியின் வாய்க்கு மேலால் திராட்சையை காட்டி தாம் விரும்பும் தூரம் வரை கொண்டு செல்லும் திட்டத்தை கூட அறிந்து கொள்ள முடியாத இவர் தனக்கு மிக விரைவில் பதவி கிடைக்கும் என்ற ரீதியில் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவாகவும் கையுயர்த்தியுள்ளார். இப்படித்தான் செய்வேன் என்பதை திட்டவிட்டமாக அவர் புத்தளம் பொதுக் கூட்டம் ஒன்றில், "தான் ஒரு வியாபாரி, எப்போது எதில் முதலிட்டால் என்ன லாபம் கிடைக்கும் என்பதை அறிந்தவன் நான்" என்ற கூறியதே அவரின் சுயலாப அரசியல் நிலைப்பாட்டை படம்பிடித்துக் காட்ட போதுமான சான்றாகும்.
இந்த சுயலாப அரசியலின் அடுத்தக் கட்டம் தான் எதிர்வரும் ஜுன் மாதம் வாக்ககெடுப்புக்காக வரவிருக்கும் " புர்க்கா தடை" சட்டமூலம். அண்மையில் நீதி அமைச்சர் அலி சப்ரி "கோட் ஸூட் , கழுத்துப்பட்டி" அணிந்து கொண்டு "புர்க்கா" அணிவது இலங்கை கலாச்சாரம் இல்லை என்றார், ஸார்! நீங்கள் அணிந்துள்ள உடுப்பு எந்த நாட்டு கலாச்சாரம் என்று யாரும் கேட்கவில்லை. காரணம் நீதி அமைச்சர் நீதி தெரியாமல் பேசும் போது அவரிடம் என்ன கேள்வி வேண்டி கிடக்கின்றது. இவர்கள் இருவரின் பெயர் பொருத்தமோ என்னவோ நீதி அமைச்சரைவிடவும் மிக ஆழமான கருதொன்றை எழுத்தில் விட்ட அலி சப்ரி ரஹீம் அவர்கள் மீண்டும் கீழே விழுந்து மீசையில் நிறையவே மண்ணை ஒட்டிக்கொண்டார்.
இதோ ரஹீம் அவர்களின் கூற்று " இந்த புர்க்கா என்பது இஸ்லாம் சமயத்தில் கட்டாயம் இல்லை (ஏற்றுக் கொள்கிறோம்). சுமார் 10% முஸ்லீம்களே இதை அணிகின்றனர் ( ஒரு விவாதத்திற்காக ஏற்றுக் கொள்கிறோம்). விபச்சாரிகள் கூட தங்கள் அடையாளத்தை மறைக்க இதை அணிகின்றார்கள் (வன்மையாகக் கண்டிக்கின்றோம்). ஆகவே நாட்டின் பாதுகாப்பு (மக்கள் விடுதலை முன்னணி கால கலவரங்களிலோ, தமிழ் புலிகளின் நீண்ட போராட்டத்திலோ, ஈஸ்டர் தின பயங்கரவாத நடவடிக்கை எதிலுமே இந்த "புர்க்கா" சம்பந்தப்படவில்லை என்பதையும் ரஹீமுக்கு நினைவுபடுத்துகிறோம்)" தொடர்பாக இந்த புர்க்கா தடை சரியனதே."
இதையே 30.05.21 சக்தி தொலைகாட்சி நிகழ்விலும் இந்த உத்தேச புர்க்கா தடையை நியாயம்படுத்தியதோடு, கொரோனாவினால் எரியூட்டப்பட்ட சம்பவங்களை மக்கள் மறந்துவிட்டார்கள் ஆகவே அதை நினைவூட்ட வேண்டாம் என்று தொலைகாட்சி நிகழ்வில் கலந்து கொண்ட சக பாராளுமன்ற கண்டி பிரதிநிதியை குற்றசாட்ட முயன்று பிரதமர் வீட்டுக்கு பேரித்தை பழம் சாப்பிட சென்ற அசிங்கத்தை மக்கள் மீள் நினைவு படுத்த காரணமாகியும்விட்டார்.
ஆக ரஹீமின் சுயநல (உதவி அமைச்சர் பதவி) அரசியலை கடந்த ஒரு வருடத்தில் மிகத் தெளிவாக மக்கள் கண்டுகொள்ள முடிகின்றது.. ஒரு வருடத்துக்குள் இத்தனை "சுயநல" செயல்பாடுகள் என்றால் இனி மீதமுள்ள நான்கு வருடங்களில் சமூகத்துக்காக, நாட்டுக்காக சந்தர்பங்ககளை ஏற்படுத்திக் கொள்ளுக்கூடிய இந்த அரசியல் என்ற "கலை" யை எப்படி பாவிப்பார் என்ற கேள்விக்கு கிடைத்த விடைகளின் மூலம் காலம் சென்ற நகரபிதா KAB யிடம் பாராளுமன்ற பிரதிநிதி ASR படு மோசமாக தோற்றுவிட்டார் என்பதை புத்தளம் வாக்காளர் அறிவார்களா? அதற்கு மாற்றீடு ஒன்றை தேடுவார்களா?
Mohamed SR. Nisthar.
Co-Editor, Sonakar.com
No comments:
Post a Comment