மூத்த ஊடகவியலாளர் எஸ். சண்முகராஜாவின் மறைவு இலங்கை தமிழ் ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவு குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுமார் 5 தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் ஊடகப் பரப்பில் சுறுசுறுப்புடன் பணியாற்றிய சண்முகராஜா அவர்கள், தனது 85 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமான செய்தியை அறிந்து ஆழ்ந்த கவலையடைகிறோம்.
இலங்கையின் தமிழ் ஊடக ஜாம்பவான்களுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிய எல்லோராலும் ‘ஷண் அங்கிள்‘ என அன்பாக அழைக்கப்படும் சண்முகராஜா அவர்கள், தமிழ் ஊடகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படும் எஸ்.டி. சிவநாயகம் ஐயாவின் கீழ் பல பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய அனுபவமிக்கவராவார். இலங்கை விவகாரங்களுடன் மாத்திரமன்றி இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியல் மற்றும் இலக்கிய விவகாரங்கள் குறித்தும் அவர் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார்.
அரசியல்வாதிகளுடனும் ஊடகவியலாளர்களுடனும் நட்புடன் பழகும் அவர், பத்திரிகைகளில் வெளிவரும் சக ஊடகவியலாளர்களின் ஆக்கங்களைப் படித்துவிட்டு அது தொடர்பில் தனது ஆலோசனைகளையும் பாராட்டுக்களையும் உடனுக்குடன் தெரிவிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்.
முழு நேர ஊடகத்துறை வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் மரணிக்கும் வரை அவர் வீரகேசரி பத்திரிகையில் வாராந்தம் பல்வேறு ஆக்கங்களை எழுதி வந்தமை இளம் ஊடகத்துறையினருக்கு முன்மாதிரியானதாகும்.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், ஊடகவியலாளர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
No comments:
Post a Comment