கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் ஏறத்தாழ ஒரு வருடத்தை அண்டியுள்ளது. முஸ்லிம் சமூகம் தம்மாலான எல்லா வழிகளிலும் போராடிப்பார்த்தது, போராடிக் கொண்டுமிருக்கிறது. போதாக்குறைக்கு புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும், பிரத்தானியாவின் முஸ்லிம் கவுன்சிலும் கூட பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.
சர்வதேச அளவில் அழுத்தங்கள் வந்து குவிந்த போதிலும் எவ்வித அசைவுமின்றி மெத்திகாவும் சன்ன பெரேராவும் சொல்லும் வரை இலங்கையின் விஞ்ஞான நிலைப்பாடு மாறப் போவதில்லையென மிகத் திடமாக தெரிவித்து வந்த அரச உயர் மட்டம், கடந்த புதன் கிழமை திடீரேன அதுவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் முன் வைத்த கேள்வி, சபாநாயகரினால் அறுவெறுப்புடன் அவசியமற்ற கேள்வியென நிராகரிக்கப்பட்ட கேள்விக்கு திடீரென எழுந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலிந்து பதில் சொன்னார், அது தலைப்புச் செய்தியாகி விட்டது.
செவ்வாயன்று (9) அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே நிலத்தடி நீரூடாக கொரோனா வைரஸ் பரவாது எனும் உலகமே ஒரு வருடத்திற்கு முன் சொன்ன உண்மையை இலங்கை நாடாளுமன்றில் பிரஸ்தாபித்திருந்தார். அதனை எஸ்.எம். மரிக்கார் தற்செயலாகக் கேட்டாரா? அல்லது கேள்விக்கும் பின்னணியிருக்கிறதா? என்பது இன்னும் ஆழமாக அலசப்பட வேண்டியது. கேள்வியையும் பதிலையும் வெளிக் கொண்டுவருவதில் மகராஜாவின் ஊடகங்கள் காட்டிய அளப்பரிய அக்கறையும் வேகமும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது.
எப்படியோ தான் வாய் உளறிவிட்டதாக இதுவரை பிரதமர் சொல்லாதது ஆறுதல். ஆயினும், கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை அனுமதிக்க இனியாவது வாய்ப்பளிக்கப்படுமா இல்லையா என்ற தெளிவான கேள்விக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரது கேள்விக்கான பதில், ஆம்! அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று சொன்னதைக் கூட, பிரதமர் அடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படும் என்று கூறினாரே தவிர கொரோனா உடலங்கள் என்று அவரது வாயால் கூறவில்லையென பேரினவாத ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தும் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மஹிந்த ராஜபக்சவின் பெரமுன மற்றும் தனிச்சிங்கள அரசுக்கான திட்டத்தின் அடிப்படையில் கோட்டாபே ராஜபக்சவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த பௌத்த மகா சங்கத்தினரைத் திருப்திப்படுத்தாமல் மஹிந்த ராஜபக்ச பதிலளித்திருந்தால் இனி அவர்களைத் திருப்திப் படுத்துவ்தற்காக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி நேரிடும். அதிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையொன்று முன் வைக்கப்படவுள்ள நிலையில் அதனை எதிர்ப்பதற்கு சீனா – ரஷ்யாவுக்கு அப்பால் இதர நாடுகளின் உதவிகள் தேவைப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் கடன் வலைக்குள்ளும் கைப்பிடிக்குள்ளும் அடங்கிப் போயுள்ள பாகிஸ்தான் பல கோணங்களில் சிறந்த தெரிவாகிறது. முஸ்லிம் நாடுகளிடம் இலங்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கும் அவர் சிறந்த கருவியாக இருக்கின்ற அதேவேளை சீனாவின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கும் பாகிஸ்தான் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடாகவே அந்தத் தளத்திலுள்ள சக்திகளால் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் சின்னஞ்சிறிதாக பேசிய விடயம் இத்தனை பூதாகரமானதன் பின்னணியில் இருக்கும் சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தும் விதமாக தனது அமைச்சரவைக்கும் தெளிவான பதிலைத் தர மறுத்து சற்று அடக்கி வாசித்து வந்த இம்ரான் கான், தனது ட்விட்டரில் இல்ஙகை பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாக உடனடியாக பதிவொன்றை மேற்கொண்டதைப் பார்த்த போது மகாராஜா நிறுவனத்தை விட பாகிஸ்தானி;ன் தொலைக்காட்சி சேவை இந்த வார்த்தைக்காக விடிய விடிய காத்திருந்ததை உணர முடிந்தது.
எதற்குமென்று, பாகிஸ்தான் ஊடகப் பரப்பில் பணியாற்றும் முக்கிய நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்டிருந்ததேன். தற்சமயம், மத்தியகிழக்கில் இடம்பெறும் கடற்படை ஒத்திகையொன்றில் தான் இருப்பதாகவும் இருந்தும் நிலைமையை அவதானித்து வருவதாகவும் பதில் தந்தார். அத்துடன் அந்த பயிற்சியில் இலங்கைக் கடற்படையும் பங்கேற்றுள்ளதாகவும் கூறிய அவர், உள்நாட்டில் உள்ள ராஜதந்திர விவகாரங்களில் தொடர்புள்ள இன்னுமொரு ஊடகத்துறை நண்பரை அறிமுகப்படுத்தினார்.
அவரோடு உரையாடிய பொழுது, பாக் பிரதமரின் இலங்கை விஜயத்தை நியாயப்படுத்துவதற்கு அங்குள்ள ஊடகங்கள் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அறியமுடிந்தது. அத்துடன், என்னதான் வெளியில் இம்ரான் கான் ஒரு புரட்சியாளராகப் பார்க்கப் பட்டாலும், பாகிஸ்தானில் ஊடகங்கள் இயங்க வேண்டுமாயின், அதுவும் அரசாங்கத்தின் விளம்பரங்கள் மற்றும் வருவாய் கிடைக்க வேண்டுமானால் ஏதோ ஒரு வகையில ஊதுகுழலாக செயற்பட வேண்டிய கட்டாயமிருப்பதையும் விளக்கிக் கூறினார்.
மேற்சொன்ன விடயம் புரியாதவர்கள், இலங்கையில் இனவாதம் பரப்பும் இரு தொலைக்காட்சி சேவைகளை நினைவில் நிறுத்திக் கொள்வது தகும். இந்நிலையில், நீண்ட நாட்கள் தொடர்பிலிருந்த பாகிஸ்தானின் முக்கிய அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு, என்னானது? என்று இலகுவான ஒரு கேள்வியை மாத்திரமே முன் வைத்திருந்தேன். அவர் மிகவும் காரசாரமாக 'நாங்கள் கை விட்டால்' இலங்கையைக் காப்பாற்றும் வீரனாக மோடி உருவெடுத்து விடுவார். அதை அனுமதிக்க முடியாது என்றார்.
முஸ்லிம் நாட்டுத் தலைவராக, உலக முஸ்லிம் விவகாரங்களில் குரல் கொடுக்கும் நபராக இலங்கை முஸ்லிம்களைத் தட்டிக் கழிக்கவும் முடியாத இம்ரான் கானுக்காக மிகக் கச்சிதமாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி, 22ம் திகதி இலங்கை வந்து, அதுவும் நாடாளுமன்றில் உரையாற்றி விட்டுச் செல்லும் வரை உள்நாட்டில் முஸ்லிம்களை அமைதிப் படுத்துவதும் ஒரு வகையில் ராஜதந்திரமே.
இந்த இடைவெளியில், 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து விட்டு வெளியில் தலை காட்டித் தம்மை நியாயப்படுத்தக் காத்திருந்த இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடுகள் அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளவும் பாய்ந்தடித்து வருவதற்குத் தயங்கவி;லலை. தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்குக் கூட ஊர்ப் பக்கம் செல்ல முடியாமல் பதுங்கியிருக்கும் இவ்வகை சாபக் கேடுகள் தாம் ஜனாஸா எரிப்பை நிறுத்துவதற்கு எதை எதையோ தியாகம் செய்ததாக கதையளக்கவும் செய்தன.
ஆனாலும், இந்த கபடதாரிகளை நன்குணர்ந்துள்ள சமூகம், இன்டர்நெட் என்றும் பார்க்காமல் காறித் துப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு கணம் தரித்து நின்று சிந்தித்துப் பார்த்தால், எப்பேற்பட்ட வேடதாரிகளை மக்கள் தம் பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள் என்று உணர்ந்து கொள்ளலாம். இது நாம் பெருமைப்பட வேண்டிய விடயமன்று, மாறாக கவலைப்பட்டு விழித்தெழ வேண்டிய தருணம்.
சமூக அரசியல் என்ற மாயை முற்றாகத் தகர்த்தெறியப்பட்டு விட்டது. இந்த சமூகத்துக்கான பிரத்யேக அரசியல் என்பது வெறும் வியாபாரம் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள இதை விட சரியான தருணம் இல்லை. எனவே, மக்கள் மாற்று வழி நோக்கி சிந்திக்கும் அவசியம் உருவாகியிருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்து 73 வருடங்களாவதாகக் கூறிக் கொள்கின்ற போதிலும் நமது சிந்தனைச் சிறைகள் இன்னும் விடுபடவில்லை. நம்மால், ஒரு எல்லையைத் தாண்டிச் சிந்திக்கவும் முடியவில்லை.
80களில், குறிப்பாக தமிழ் ஈழம் என்றொரு பகுதி பிரிந்து விடுமெனில் முஸ்லிம்களின் நிலை என்னாகும்? என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில் ஆகக்குறைந்தது கிழக்கு மாகாண அரசியலில் முஸ்லிம் தனித்துவம் என்ற கோஷம் வலுவானதாகவும் காலத்தின் அவசியமாகவும் இருந்தது. அதனைப் பேரினவாத சக்திகளும் ஆதரித்தன, விரும்பின. ஆயினும், 2009க்குப் பிற்பட்ட காலம் அந்த நிலையிலிருந்து மாறி பேரினவாதம் தலையெடுப்பதற்கு நாமே கருவியாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதே கசப்பான வரலாறு.
ரவுப் ஹக்கீமுக்கும், அலி சப்ரிக்கும் நீதியமைச்சர் பதவிகளைக் கொடுத்து எதைச் சாதிக்க முடியும் என்கிற கணக்கு இல்லாமல் அவர்கள் அப்பதவிகளில் அமர வைக்கப்பட்டு அழகு பார்க்கப்படவில்லையென்பது ஒவ்வொரு குடிமகனும் அறிந்த பரகசியம். அதற்கு மேல், முஸ்லிம் சமூகத்திடம் இருக்கும் அரசியல் அடிமைத்தனத்தையும் பேரினவாத சக்திகள் நன்கு புரிந்து வைத்துள்ளன.
2012ல் பிரச்சினை வந்த போது தம்புள்ள பள்ளிவாசலில் விNசுட துஆ கேட்டு விட்டு, மனித உரிமை பேரவை கூடிக் கலைந்ததும் அதே பள்ளிவாசலை புண்ணிய பூமிக்குள் அத்துமீறிக் கட்டப்பட்ட கட்டிடம் என்று தகர்ப்பதற்கு முயற்சி நடந்தது. இப்போது, கட்டாய எரிப்பும் கொரோனாவும் இருப்பதால் எந்தப் பள்ளிவாசலிலும் துஆ கேட்க முடியாது என்றாலும் கூட சர்வதேச அளவில், அதுவும் இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் புறக்கணித்து தம்மால் காரியங்களை சாதித்துக் காட்ட முடியும் என்பதில் நடைமுறை அரசு திடமாக உள்ளது.
சீனாவும் ரஷ்யாவும் இரு புறம் காவலாக நிற்க, இந்தியாவின் அரசியல் எதிரிகளின் நிழலில் தம்மால் பயணிக்க முடியும் என்று இலங்கை அரசு வகுத்த பாதையும் அரசியல் ரீதியில் தற்சமயம் வலுவாகவே இருக்கிறது. எனவே, இம்ரான் கான் எனும் அரசியல் கருவி இலங்கை முஸ்லிம்களுக்குப் பொருட்டில்லை.
ஆயினும். இலங்கையில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் இருப்பது உலகுக்கே தெரியும். அதில் ஒரு சிலர், மத்திய கிழக்கு நாடுகளின் வற்றாத எண்ணைக் கிடங்குகளிலிருந்து அள்ளியள்ளி எடுத்து, வைக்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் அவ்வாறு அள்ளிச் சுருட்டிய பணத்தை தேர்தலுக்காக செலவு செய்து விட்டு அதைக் கறக்க வழியில்லாமல் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிலைமை இப்படியிருக்க, இலங்கையில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற வியாபனம் உலக நாடுகளின் பார்வையில் மிகவும் துச்சமானதாகவே இருக்கிறது. கூடிப் போனால் ரவுப் ஹக்கீமுக்கு இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில் இயங்கும் அரசியல் மற்றும் சமூக இலக்கிய வட்டத்தோடான தொடர்புகளுக்கப்பால் கடல் கடந்து, எம்மவர்கள் தலைவர்களாகக் கூறிக் கொள்ளும் யாருக்கும் எந்த மரியாதையும் இல்லை.
இவர்களின் கூக்குரல்கள் இன்றளவில் சமூக வலைத்தளங்களைத் தாண்டி எங்குமே சென்றடைவதில்லை. சமூக வலைத்தளங்ளில் கிடைக்கும் லைக்குகளும் ஷெயார்களும் கூட வாக்குகளாக மாறுவதில்லை. ஏனெனில், உணர்வால் உந்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் குவியும் வாசகப் பெருமக்கள் ஒரு ஊரையோ, தொகுதியையே பிரதிபலிக்கும் வாக்காளப் பெருமக்கள் இல்லை. மாறாக, பெரும்பாலும் சமூக அக்கறையுடன் சமூக வலைத்தளங்களில் இயங்கு நிலையில் இருப்போர் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களாக அல்லது புலம் பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்களாவே இருக்கிறார்கள்.
சிலவேளைகளில், இவ்வாற சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பரபரப்பு நாடகங்களைப் பற்றி உள் நாட்டில் மக்கள் அறிந்திருப்பதுமில்லை. அப்படியெதுவும் நடந்ததா? என்று கேள்வி கேட்போர் போக இன்னும் பலர் அடுத்த தேர்தலுக்குத் தான் நாட்டு நடப்பைப் பற்றி ஏதோ ஒரிரு நாள் பார்த்து அதற்கடுத்த ஐந்து வருடங்களுக்கான தமது பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இதன்போது, இன்னும் அபிவிருத்தி அரசியல் பற்றிப் பேசுகிறார்கள். எதிர்ப்பரசியலால் எதைச் சாதிக்க முடியும் என்று கேட்கிறார்கள். இவர்கள் சரியில்லையென்றால் ஏன் சீனா வாரி வழங்குகிறது, நாடெங்கும் முதலிடுகிறது என்றும் அப்பாவித்தனமாக கேள்வி கேட்பார்கள். அந்தக் கடன் சுமையென்ன? அதனூடாக நாடு செல்லும் வழியென்ன? அதன் வலியென்ன என்பதை முழுமையாக உணர நாட்டுக்கு வரி செலுத்தும் நல்ல குடிமகனாகவும் இருக்க வேண்டும்.
அன்றாட வாழ்வியலில், வாழ்க்கைச் செலவில் திணிக்கப்படும் மேலதிக செலவீனங்களை சமாளிக்கத் தெரிந்த மக்கள் தொகுதி இந்த வலியின் ஆழத்தை உணரப் போவதில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களால் அதை உணராமல் வாழ முடியாது, ஆயினும் அவர்கள் குரலுக்கு என்ன மரியாதை இருக்கிறது? அவர்கள் தேடும் சமத்துவம் - சமவுரிமையைச் சொல்லும் சிவப்புக் கொடிகள் இன்னும் தாழ்ந்தே பறப்பதால் முதலாளித்துவ உலகின் மாயத் தீவில் அவர்கள் குரல்கள் கேட்பதில்லை.
அதிகார வர்க்கத்தைத் தாண்டியும் போராட்டங்களை நடாத்தப்பட்டுள்ளது. அண்மைய பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான சிவில் சமூக போராட்டமும் அதன் ஒரு பங்கே. ஆயினும், அவற்றின் குரல்கள் தட்ட வேண்டிய கதவுகளைத் தட்டி விட்டனவா? எனும் கேள்வி தொக்கு நிற்கிறது. இப்படி சமூகப் போராட்டங்கள் பல கோணங்களில் இருக்க நமது சமூகம் மிக இலகுவாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து, தேர்தல் காலத்தில் மாத்திரம் தமது தேசப் பற்றை வெளிக்காட்ட, அதுவும் தமக்குத் தொழில்வாய்ப்பையும் தமதூர் வீதியைத் திருத்தித் தந்தால் மாலையிட வசதியானவரையும் தெரிவு செய்து விட்டு அடங்கி விடுகிறது.
பின், ஒட்டு மொத்த சமூகமும் உணரும் ஒடுக்குமுறைகளின் போது மிகக் கவனமாக வேறு யாராவது தமது உணர்வுகளைப் பிரதிபலித்தால் அவர்களைப் பாராட்டி விட்டு விமர்சனங்களிலிருநதும் தம்மைத் தூப்படுத்திக் கொள்கிறது. இது தாண்டிய சுயநலம், தனிமனித எதிர்பார்ப்புகளால் உருவான சிதைவுகள் என்று பல கூறுகளாக் கசங்கிப் போயுள்ள இச்சமூகத்தை இன்னுமொரு அரசியல் எழுச்சியால் தட்டியெழுப்புவதில் எவ்விதப் பயனும் இல்லை. மாறாக, அந்த எழுச்சி சிந்தனை ரீதியிலான எழுச்சியாக இருக்க வேண்டும்.
அந்த சிந்தனா ரீதியிலான எழுச்சியை ஒவ்வொரு தனி மனிதனும் உணர்ந்து வருவதற்குள் காலம் கடந்து விடுமென்றாலும் கூட, அதற்கான தொடர்ச்சியான போராட்டம் அவசியப்படுகிறது. மக்களின் சிந்தனைகளை யாரோ ஒரு அரசியல்வாதியிடம் குவிப்பது காலத்தின் தேவையன்று, மாறாக நிகழ்கால – எதிர்கால அரசியலின் பயணப்பாதையை ஆராய்ந்து அதற்கேற்ப அடுத்த தலைமுறையினரை சிந்திக்கத் தூண்டுவதே அவசியமாகிறது.
நாளை அவனும் தன்னை சுயநல அரசியலிடம் அடகு வைக்கலாம், ஆனாலும் அவனுக்கடுத்த தலைமுறைக்காகவும் போராடியாக வேண்டியது சமூக ஆர்வலர்கள் - எழுத்தாளர்கள் - பேச்சாளர்களின் கட்டாயக் கடமையாகிறது.
- Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
No comments:
Post a Comment