இரத்த உறவில்லாத இருவர் சேர்ந்து குடும்பமாகி பிள்ளை குட்டிகளுடன் கூடி வாழ்ந்தாலும் அங்கே பிரச்சினைகள் என்பது பலவடிவங்களிலும் நிலை கொண்டிருக்கும், தந்தைக்கும் தாய்க்கும் இடையில், பிள்ளைகளுக்கைடையில், பிள்ளைகளுக்கும் பெற்றொர்களுக்கும் மிடையில் என்று அதன் பரிணாமங்கள் பலதாக இருக்கும். இத்தைகைய குடும்பங்கள் பல விவாகரத்தில் முடிவதும் கூட கண்கூடு. ஆனால் இரண்டு குடும்பங்களுக்கு கிடையே ஏதோ ஒன்றென்றால் பிரச்சினைகளால் நிறைந்து வழியும் குடும்பங்கள் கூட தம் உள்வீட்டு பிரச்சினைகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு தன் குடும்ப நலனுக்காக பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதும் சாதாரண நிகழ்வு. இந்த குடும்ப நிலவரங்களின் பெரிப்பித்த பிரதிகள்தான் சமூக, இன, நாட்டு நடப்புகளிலும் பிரதிபலிக்கும் என்பதை நாம் பல கட்டங்களில் உணரத்தவறுகிறோம்.
இந்த அடிப்படையில் தன் மனைவிக்கு சதா பிரச்சினைகளை உண்டுபண்னும் கணவன் நாளை எமது திருமணநாள் சிறப்பாக கொண்டாடி நினைவு கூறுவோம் என்ற கணவனின் யோசனை மனைவியைப் பொருத்தவறை எவ்வளவு பெறுமதியற்றதோ அதை ஒத்ததே பல் இன நாடொன்றில் எல்லாரும் கூடி பெற்ற சுதந்திரத்தின் சுகங்களை சிறுபான்மையினர் அனுபவிக்கவிடாது, அதிக சந்தர்ப்பங்களில் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும், புதிய புதிய காரணங்களின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டும், எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையீனமும், அச்சமும் சூழ்ந்துள்ள நிலையில் நாமும் முழு மனதுடன் சுதந்திர(மில்லா) தினம் கொண்டா எதிர்பார்க்கப்படுவது ஏற்புடையதாகாது.
ஸ்ரீ லங்கா தமிழ், சோனக இனங்களின் சமூக, அரசியல், சன்மார்க்க விடயங்கள் யாவும் 1970 களின் பிற்பகுதிகளில் இருந்து பாரிய ஒரு மாற்றத்தை நோக்கி சென்றது எமது வரலாற்றில் கோடிட்டு காட்டப்பட வேண்டிய அம்சம் மாத்திரமல்ல அதன் சரி, பிழைகளை, சாதக, பாதகங்களை விமர்சனத்துக் குள்ளாக்கி நமது முன்னோக்கிய பயணத்துக்கு தயாராகுவது காலத்தின் தேவை. நாம் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்பதையும் ஆகவே இன்நாடின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் நமக்கிருக்கும் கடமைகளையும், சாதாரண சூழ்நிலைகளில் நமக்கிருக்கும் உரிமைகளையும் சரியாக இணங்காணுவதற்கு இந்த சுய விமர்சனம் மிக முக்கியமானது.
தமிழர்களின் நீண்ட அரசியல் பயணமும், ஆயுத போராட்டதின் தோல்வியால் ஏற்பட்ட சிறு மெளனிப்பும், அனுபவமும் புதிய சிந்தனைகளும் கலந்த அரசியல் முன்னெடுப்புகளும் இப்போது நடைபெறுவது ஒப்பிட்டு ரீதியில் நம்பிக்கை தரும் விடயம் என்றாலும் சோனகர்(முஸ்லீம்) அரசியலை பொருத்தவரை தெளிவில்லாத நிலை ஒன்று காணப்படுவது தெளிவாகத் தெரிகின்றது. அரசியலுக்காக கொலை செய்யப்பட்ட ஸ்ரீ.மு.கா(SLMC)சின் ஸ்தாபக தலைவர் அஸ்ரப் அவர்கள் அரசியல் மாற்றத்திற்கான "விழிப்புணர்" வை ஏற்படுத்தினார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையாயினும் அவர் முக்கியமாக முஸ்லீம் அரசியல் "கொழும்பு" (பொதுவாக தெற்கு) தலைமைகளில் தஞ்சம் அடையக் கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்தினாரே ஒழிய, பொதுவாக நாட்டு (முஸ்லீம்) மக்களுக்கோ, குறிப்பாக கிழக்கு சோனக, தமிழினங்களுக்கோ அரசியல் "தெளிவை" ஏற்படுத்தவில்லை. அதன் காலம் கடந்த ஞானம் தான் "தேசிய ஐக்கிய கூட்டணி" (NUA) என்ற கட்சியின் உருவாக்கம், ஒரு முற்போக்கு நகர்வு. ஆனால் அவருக்கு 2000களில் ஏற்பட்ட அந்த "தெளிவு" மிக நீண்டகாலமாக நம் அரசியல்வாதிகளுக்கோ, அரசியல் கட்சி நடத்தும் தலைவர்களுகோ புரியவில்லை என்பது ஒரு புதிரே. ஆகவேதான் நடந்து முடிந்த பொது தேர்தலிலும் கூட "சினிமா தனமான" கட்சி பாடல்களும், உசுப்பேற்றும் சினிமா "பஞ்ச்" (punch dialog) வார்த்தைகளும் பாவிக்கப்பட்டது நம் சமூகத்தை எவ்வளவு தூரம் "முட்டாள் சமூகம்" என இந்த அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை கண்டு கவலை படுவது மாத்திரம் நம் நாளாந்த விடயமாகிவிட்டது
இதே நிலைதான் நம் சமூகத்தின் மார்க்க தலைமைகளும் என்றால் அதை யாரும் இல்லை என்று கூறிவிட முடியாது. போதாததிற்கு அரசியல்வாதிகள் தேவைப்படும் போது தம் அரசியல் சார்ந்த நலங்களுக்காக இந்த மார்க்கத் தலைமைகளை பாவிப்பதும், மார்க்கத தலைமைகள் தம் அமைப்பு சார்ந்த அல்லது தமது இயக்கம் சார்ந்த நலங்களுக்கு அரசியல்வாதிகளைப் பாவிப்பதுமாக சமூகத்தை ஒரு இருளுக்குள் வைத்திருப்பதை மாத்திரம் வெளிச்சத்தில் வைத்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அதைத் தொடர்ந்த பொது தேர்தலிலும் நாடு எதிர் நோக்க இருக்கும் ஆபத்துக்குகளை எவ்வளவுதான் உரக்க சொன்னாலும் அதற்கான ஆணித்தரனமான ஆதாரங்களை பல தரப்பும் முன் வைத்தாலும் அவற்றை எல்லாம் ஒரு சிறிய "மந்திர" வார்த்தைக்குள் அடக்கி, அதாவது "ஆட்சியை கொடுப்பதும், அதை பறிப்பதும் இறைவனே" என்ற ரீதியில், இலாபம் அடைய முனைந்தவர்களும், நம்பிக் கொட்டவர்களும் இன்று என்ன செய்வது, எப்படி மக்களை முகங்கொள்வது என்று திணரும் நிலையில் இன்னுமொரு " சுதந்திர தினம்".
இது நாட்டிற்கான தினம். நாமும் இன் நாட்டவர்களே, ஆகவே " நமோ நமோ மாதா அபே ஸ்ரீ லங்கா" என்று உணர்வு பூர்வமாக இல்லாவிட்டலும் பரவாயில்லை, சம்பிரதாயத்துக்காக செய்வது நமக்கு நல்லது என்று சில சமய அமைப்புக்குள் முந்திக் கொண்டு முன்வருவதென்பது 2012 ல் தமிழர் அரசியல் பிரச்சினையின் ஆழ அகலம் தெரியாமல் ஜெனிவா சென்று அநீதிக்கு சாமரம் வீசிய " உலமா சபை" யின் அதி மேதாவிதனத்தை நினைவூட்டுகின்றது. தேசிய கீதம், தேசிய மொழி ஒன்றின் மூலம் மாத்திரம்தான் இசைக்கப்பட வேண்டும் என்ற கட்டளையும், சுதந்திர சதுக்கமெங்கும் பெளத்தக் கொடிகள் தான் பறக்கவிடப்பட வேண்டும் என்ற நிலைப்பாடும் எதை உணர்த்துகின்றது என்பதை புரிந்து கொள்ள சராசரி அரசியல் அறிவுள்ள எவருக்கும் கஸ்டமான காரியமல்ல. இருந்த போதிலும் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பள்ளிவாயல்களில் சிங்கக் கொடியேற்றி திடீரென்று நாட்டுபற்றை பறைசாற்றியவர்களின் கன்னத்தில் அறைந்தாற் போல் இன்று சுதந்திர சதுக்கம் எங்கும் பெளத்த கொடிகள்?
அரசியலமைப்பின் 20ம் திருத்ததிற்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல், அரசியல் சிந்தாந்தவாதிகள், கடந்தகால, நிகழ்கால அரசியல் அனுபவத்தினூடாக எதிர்கால அரசியலை சரியாக எதிர்வு கூற வல்லவர்கள் எவரின் வேண்டுகோள்களையும், எச்சரிக்கைகளையும் கருத்தில் எடுக்காது தம் சொந்த நலத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்தின் கடைசி உரிமைகளை விற்றவர்கள் எப்படி எம்மை சுதந்திரதினத்தை கொண்டாட எதிர்பார்ப்பது, இது முற்றும் முழுதான மடமை.
எதிர்பார்க்கப்படும் உத்தேச அரசியலமைப்பு மாற்றங்களில் ஒன்றாக (பொது) தேர்தல் வெற்றிக்காக நிர்ணயிக்கப்பட்ட 5% வெட்டுப்புள்ளி மீண்டும் முன்னைய 12% அல்லது அதற்கு மேலாகவும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சிறுபான்மையினரின் கூடவே பெரும்பன்மையினரை பெரும்பான்மையாகக் கொண்ட சிறு கட்சிகளின் இருப்பை கேள்விக்குறியாக்க முஸ்தீபுகள் நடைபெறுகின்றன. இதில் முஸ்லீம்களின் (ஹலால்) கட்சிகள் காணமல் போகும். அப்படி போவது எம் சமூகத்துக்கான அரசியல் ரீதியான வெற்றி. இந்த கட்சிகளை நம் சமூகமே நீண்டகாலத்திற்கு முன்பே புறந்தள்ளியிருக்க வேண்டும், அனால் அதை அரசாங்கம் தன் நலனுக்காக செய்ய முன்வந்திருப்பது சிறுபான்மை இனங்களின் மேலுள்ள அக்கறையில் அல்ல என்பதையும் நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே நமது பாரளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முற்போக்கு கட்சிகளுடனும் அல்லது ஆகக் குறைந்தது ஒப்பிட்டு ரீதியில் நாட்டுமக்கள் அனைவரையும் அணைத்துக் கொண்டு செல்லும் திட்டம் கொண்ட கட்சிகளினூடாகவும் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதே நேரத்தில் இன்றைய அரசாங்கத்தின் திட்டமிட்ட அரசியல் நகர்வுகளால் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி(கள்) மூலம் அவர்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்து இல்லை என்பதையும் அல்லது அவர்களின் அரசியல் குரல் நசுக்கப்பட முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் ஆகவே அதற்கமைய எமது எதிர்கால அரசியல் நகர்வுகள் அமைவது முக்கியமாகும்.
இது போக எமக்கு முன்னுள்ள நாமாக மாத்திரம் பரிகாரம் தேடவேண்டிய பாரிய விடயம்தான் நமது மார்க்க வழிகாட்டல் தலைமை என்ற ரீதியில் (தன்னிச்சையாக) செயல்படும் " உலமா சபை". இந்த சபையின் அவசியம் ஒன்று நம் சமூகத்தில் முக்கியமாக உணரப்பட்டாலும் இதுகாலவரையில் இருந்துவரும் அதன் கடமைப்பு சமூகத்தின் காரசாரமான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றமை கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இந்த வகையில் "உலமா சபை" புனர்நிர்மாணிக்கப்பட வேண்டிய காலம் கட்டம் இது. இந்த புனரமைக்கப்படும் சபை மார்க்க வல்லுனர்கள் ( குர்-ஆன், பிக்ஹு, ஹதீஸ் என்ற பரப்புக்குள் மாத்திரம் உலா வருபவர்கள்) மாத்திரமன்றி துறைசார் நிபுணர்களை கொண்ட அமைப்பில் இந்த சமயம்சார் வல்லுனர்கள் சேர்க்கப்பட வேண்டுமே தவிர சமய நிபுணர்களின் கட்டுப்பாட்டில் இந்த அமைப்பு கட்டமைக்கப்படலாகாது.
ஆகவே நாளை சுதந்திர தினம் நம் சமூகதிற்கான, சிறுபான்மை இனத்தினருக்கான, நாட்டை நேசிக்கும் நன்மக்களின் விடிவிற்கு அடித்தளம் அமைக்கும் நாளாக் கருதி அதற்கான ஆக்கபூர்வமான திட்டமிடலுடன் செயல்பட அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்பதை அனைவரும் உணர்வோமாக.
Mohamed SR. Nisthar
Co-Editor, Sonakar.com
No comments:
Post a Comment