20க்கு வாக்களித்த முஸ்லிம் MPக்கள் பாவிகள்: மு.கா செயலாளர் - sonakar.com

Post Top Ad

Saturday, 13 February 2021

20க்கு வாக்களித்த முஸ்லிம் MPக்கள் பாவிகள்: மு.கா செயலாளர்

 



கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான பிரதமரின் அனுமதியை அமைச்சர் ஒருவர் நிராகரித்தமைக்கு காரணம் 20ஆவது திருத்த சட்டத்தின் பின்னர் அமைச்சரவையின் முழு அதிகாரமும் கட்டுப்பாடும் ஜனாதியின் வசம் சென்றிருப்பதே என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்


இந்நிலையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த பாவத்தை சுமக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;


கடந்த புதன்கிழமையன்று பாராளுமன்றத்தில் கொரோனாவால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவற்றை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்போம் என்று உறுதியாகக் கூறியிருந்தார்.


ஆனால் பிரதமரின் அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரம் கடப்பதற்குள் நேற்று வியாழன் அதே பாராளுமன்றத்தில் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை, பிரதமரின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக கருத்து வெளியிட்டிருக்கிறார். இது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.


20ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் பிரதமர் என்பவர் எவ்வித அதிகாரமும் அற்ற ஒருவராக மாற்றப்பட்டு, அமைச்சரவையின் அனைத்து அதிகாரங்களும் கட்டுப்பாடுகளும் ஜனாதிபதிக்கு சென்றிருப்பதே இதற்கு காரணமாகும். இதனால் ஜனாஸா விடயத்தில் பிரதமர் மூலம் கிடைக்கவிருந்த தீர்வு கைநழுவிப்போயுள்ளது.


குறித்த திருத்த சட்டத்தில் உள்ளடங்கியிருக்கின்ற இவ்வாறான பாரதூரமான விடயங்களை நாங்கள் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால் சில முஸ்லிம் எம்.பி.க்கள் இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள். அதன் விளைவுகளையே நாங்கள் இன்று அனுபவிக்க நேரிட்டிருக்கிறது.


ஆகையினால், இத்திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த பாவத்தை சுமக்க வேண்டும்- என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.


- அஸ்லம் எஸ்.மௌலானா

No comments:

Post a Comment