பாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ள இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் மற்றும் சொத்து முடக்கம் போன்ற நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு.
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்த குற்றங்கள் போன்றவை தொடர்பில் தொடர்ச்சியாக நிலவி வரும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக அவ்வப் போது தெரிவித்த போதிலும் பத்து வருடங்கள் கடந்தும் இதுவரை இலங்கை அரசு நேர்மையுடன் செயற்படவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிச் சிங்கள அரசு எனும் பிரச்சாரத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய ராஜபக்ச அரசு மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதியிலிருந்தும் வாபஸ் பெற்றிருக்கும் நிலையில் தற்போது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. தற்சமயம் இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரமும் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குச் சென்றுள்ள நிலையில், இலங்கையில் பதில் கூற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக உதாசீனம் செய்யுமிடத்து சர்வதேச அளவிலான நடவடிக்கைகளை பேரவை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி 27ம் திகதிக்குள் இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவுள்ள இலங்கை, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்படாதவை எனவும் ஆதாரங்கள் அற்றவை எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment