கடந்து செல்லும் காலமும் அகப்படாத கயிறும்! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 January 2021

கடந்து செல்லும் காலமும் அகப்படாத கயிறும்!

 



கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்துக்கு எதிராக, தமக்காக மற்றவர் போராடுவார் என ஒதுங்கியிருக்கும் சமூகத்தின் கூறுகளுக்கு இனி எதை எதிர்பார்ப்பது? யாரை நொந்து கொள்வது? என்று தெரியாமல் தத்தளிக்கிறது. நேற்றும் இரண்டு மாத குழந்தையொன்றை எரியூட்டியாகிற்று.


அதற்கிடையில் அவ்வப் போது நொந்து கொள்ளவும் நையாண்டி செய்யவும் யாராவது அகப்படாமலும் இல்லையென்பதால் பொழுது கழிந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், வடக்கில் ஒரு திடீர் சலசலப்பு.


யாழ் பல்கலைக்கழக வளாகத்தில், 2009ம் ஆண்டு யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட மக்களின் நினைவாகக் கட்டியெழுப்பப் பட்டிருந்த தூபியை துணைவேந்தரைக் கொண்டு இடித்துப் பார்த்த மத்திய அரசு, அவசர அவசரமாக மனம் மாறி இடித்த இடத்திலேயே அடிக்கல்லையும் நட்டு அது ஒரு தொடர் பிரச்சினையாக மாறாமல் தவிர்த்துக் கொண்டது.


நினைவுத் தூபி இடிக்கப்பட்ட தகவல் வெளியானதும் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கலாயின. விடுதலைப் புலிகளின் பரம எதிரியாக இருந்த அமைச்சர் டக்களஸ் தேவானந்தா கூட அங்கு நினைவுத் தூபி இருக்க வேண்டும் என்று தான் கூறினார். ஆதலால், அத்தூபி விடுதலைப் புலிகளின் நினைவாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒன்றல்ல, மாறாக கொல்லப்பட்ட மக்களின் நினைவுத் தூபியென வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்ளலாம்.


இந்நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றாகப் போராடக் களமிறங்கின. ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாணவர்கள் சிலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான திறந்த மனதுடனான ஒற்றுமையை எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிப்பது என்று காத்திருந்த முஸ்லிம் சமூகமும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உருவாக்கியுள்ள நன்மதிப்பின் கயிற்றைப் பலப்படுத்த விளைந்தார்கள். 


முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஆதரவாகக் குரல் கொடுத்தன. மக்களும் தம் வரலாற்றுக் கடமையுணர்ந்து செயற்பட்டார்கள். ஈற்றில், சிறுபான்மை சமூகங்களின் ஒன்றிணைந்த நடவடிக்கையாக ஹர்த்தால் மாறியது, அதற்கிடையில் துணைவேந்தரை மீண்டும் அனுப்பி உண்ணாவிரதத்தையும் முடிக்க வைத்து விட்டார்கள்.


இவ்வாறு ஒரு பந்தியில் வாசித்து முடிவது போன்றே திடீரெனத் தோன்றி மறைந்த இந்த சலசலப்பு பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குக் கிடைத்த பின்னடைவு என்று சொல்லிக் கொண்டாட முடியாது என்றாறும் சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமை அவர்கள் விரும்பாத ஒன்றென்பதை அடித்துக் கூறலாம். இந்த ஒற்றுமை மலையக மக்களையும் அது போன்று முற்போக்கான சிங்கள மக்களையும் இணைத்துப் பயணிக்குமானால் தேசம் நிச்சயமாக தற்போதைய இனமையக் கொள்கையுடனான அரசியல் கலாச்சாரத்திலிருந்து விடுபடுவது திண்ணம்.


ஆயினும், அது அத்தனை இலகுவான விடயமுமன்று. நமக்குள் திணிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளின் வடிவங்கள் அத்தனை பலமானவை என்றால் மிகையாகாது. எந்தவொரு விடயத்தையெடுத்துக் கொண்டாலும் கருத்து முரண்பாடுகளால் நமது சமூகம் முட்டிக் கொள்ளும் விதத்தினை கூர்ந்து அவதானித்தால் இந்த திணிப்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.


இலங்கையில் தற்போது நடைமுறையிலிருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பை ஒரு சமூகப் பிரச்சினையாக ஏற்றுக் கொள்ள மறுத்து அதற்காகக் குரல் கொடுப்பதை அரசியலாகப் பார்க்கும், ஆதலால் அரசியலில் ஈடுபட விரும்பாத தாம் இதிலிருந்து விலகியிருக்க விரும்புவதாக அதுவும் வெளிநாடுகளில் வாழும் ஒரு தொகுதி இலங்கை முஸ்லிம்கள் கருத்து தெரிவிக்கும் போது, நாம் தான் தவறாக சிந்திக்கிறோமா என தலையை முட்டிக் கொள்ளத் தோன்றும்.


இப்பின்னணியில் நாட்டில் இருக்கும் இன்னுமொரு தொகுதி அரசியல்வாதிகள் சார்ந்த தொண்டர்கள் இன்றொரு முடிவு வரும், நாளை வருமென்று சளைக்காமல் தம் ஆதரவாளர்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருப்பதையும் ஒப்பிடுகையில் சமூகப் பிரச்சினைகளை நேர் பார்வையில் சிந்திப்பதும் தவறோ? என்றும் சிந்திக்கத் தோன்றும்.


எங்கெங்கோ சுற்றியலைந்து வரும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகையெனும் விடயத்தில் வந்து நிற்கிறது. அன்னார், உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தம் இலங்கை வரவுள்ளார் என்ற தகவல் கசிந்த நிலையில், பிரான்சில் ஏற்பட்ட கார்டூன் சர்ச்சையின் போது, அந்நாட்டின் ஜனாதிபதியின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாகவே எதிர்த்துக் கருத்துக் கூறியதோடு முஸ்லிம் உம்மத் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள இம்ரான் கானிடம், அதுவும் அவர் இலங்கை செல்லும் நேரத்தில் இது குறித்து அரச உயர் மட்டத்திடம் கவலை வெளியிட்டு, தம் நட்பைப் பயன்படுத்தி எதையாவது செய்ய மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.


அத்தோடு நின்று விடாமல், இதனை அவருக்கே நேரடியாக எடுத்துச் சொல்லி, சமூகம் சார்ந்த கோரிக்கையை முன் வைக்கக் களமிறங்கியது புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம் சமூகம். துரதிஷ்டம். முஸ்லிம் சமூகத்தின் பெயரால் பல கோடி ரூபாய்களுக்குக் கட்டிடங்களை வாங்கி, அதற்கு இலங்கை முஸ்லிம் கலாச்சார மையம் என்று பெயரும் சூட்டி, அல்லது பள்ளிவாசல்களாக்கி நிர்வகிப்போர் மத்தியில், இது ஒரு சமூகப் பிரச்சினையே இல்லையென்ற வித்தியாசமான தெளிவு இருப்பது கண்டு ஆச்சரியமாக இருந்தது. 


ஆதலால், சமூக உணர்வு, போராட்டம் என்றெல்லாம் பேசுபவர்கள், அவர்களின் பார்வையில் சமூக விரோதிகளாகிறார்கள். மிகச் சிறிய எண்ணிக்கையானோரே இவ்வாறான எண்ணப்பாட்டில் நடந் கொண்டாலும், துரதிஷ்டவசமாக சமூகப் பெயரில் உள்ள நிறுவனங்களை நிர்வகிப்பவர்களாக அந்த சிறிய கூட்டம் இருப்பதனால் சமூகப் பிளவுகள் தானாகவே உருவாகின்றன. 


ஆயினும் கூட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், சுவீடன், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சார்ந்த 34 சமூக அமைப்புகள் சேர்ந்து இம்ரானுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்தன. அது இம்ரான் கானிடம் மாத்திரமன்றி பாகிஸ்தானின் முக்கிய அரசியல் புள்ளிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் , அமைச்சர்களையும் சென்றடைந்திருப்பதற்கு நான் சாட்சி.


கட்டாய ஜனாஸா எரிப்பைக் கூட அரசியல் எதிர்விளைவு என்ற வரையறைக்குள் வைத்துப் பார்க்கப் பழக்கிய திணிப்பைப் பற்றியே இங்கு பேசப்படுகிறது. இத்தனைக்கும் இக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில் பதிவாகியுள்ள 256 கொரோனா மரணங்களில் ஏறத்தாழ 80 வீதம் முஸ்லிம்கள். அந்த 80 வீதத்திலும் 98 வீதத்தினர் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தவர்கள். ஏழை மக்களை உணர்வூட்டிச் சூழ்நிலைக் கைதிகளாக்கியதனூடாகவே ஒரு கட்டத்தில் ஜனாஸாக்களை எரிப்பதற்கும் 58,000 ரூபா வரை அறவிடவும் முடிந்தது.


இது நமக்குத் தேவையில்லாத அரசியல் என்று எண்ணுபவர்களுக்கு இந்த புள்ளி விபரங்கள் அவசியப்படப் போவதுமில்லை. ஆதலால், பிரித்து வைக்கும் அரசியலை நொந்து கொண்டே கடந்து செல்ல வேண்டிய நிலை. மாற்றி யோசிக்கத் தெரிந்தவர்கள் வேண்டுமானால் நம் சமூகத்தின் மீதிருக்கும் அரசியல் திணிப்பையும் அதனால் வெளிப்படும் பிளவுகளையும் அலசி ஆராய்ந்து பார்க்கலாம். 


ஜனநாயகம் கொடிகட்டிப் பறப்பதாகக் கூறப்படும் நாடுகளிலேயே மக்கள் போராட்டங்கள் பல வடிவில் தொடர்ந்து கொண்டிருக்க, பேரினவாத நிகழ்ச்சி நிரலில் பயணிக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் அதற்குப் பஞ்சமிருக்க முடியாது. எனவே, சமூக இயக்கம் என்பது தொடர்ச்சியாக இருக்க வேண்டியுள்ளது. அதனை அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் பேசினால் போதும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேசினால் போதும், சாணக்கியன் உணர்வுபூர்வமாக பேசினால் போதும் அல்லது ரவுப் ஹக்கீம் பேசியவர்களுக்கு நன்றி சொன்னால் போதும், ரிசாத் பதியுதீன் நெஞ்சு புடைக்க ஒரு தடைவ பேசினால் போதும் என்று கைவிட்டுச் செல்ல முடியாது.


சிவில் சமூகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். அது வெறுமனே அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதாக மாத்திரம் இருக்க வேண்டிய அவசியமில்லை. சமூக மட்டத்தில் இந்த வரயறைக்கப்பாற்பட்ட தேவைகள் அதிகமிருப்பதால் அனைத்து விவகாரங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஆடைத் தொழிற்சாலை அதிபதிக்கு வேண்டுமானால் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அள்ளி வீசுவது ஒரு சாதாரண விடயமாக இருக்கலாம். ஆனால், மாதாந்தம் 5000 ரூபாவை தொடர்ந்து சம்பாதிக்க வழியில்லாது தவிக்கும் மக்களுக்கு அது சாத்தியமில்லை.


சமூக முன்னேற்றம் என்பது நாடாளுமன்றில் 20 பேர் அமர்ந்திருப்பதாலோ அல்லது அதில் சிலர் அமைச்சர்களாக இருப்பதாலோ நிறைவடையும் என்றால் கடந்த 30 வருடங்களில் கண்ட நிறைவென்ன? என்பதையும் மக்கள் சொல்லியாக வேண்டும். 2021ல் பேசும் போதும் கூட, நான் உங்கள் சமூகத்துக்கு என்ன செய்யவில்லை? எத்தனை அமைச்சுப் பதவிகள், பிரதியமைச்சு, இராஜாஙக அமைச்சு, பணிப்பாளர்கள், ஆளுனர்கள் எல்லாம் தந்தேன். என்னை முஸ்லிம் சமூகம் மறந்து விட்டதா என்று தான் மைத்ரிபால சிறிசேன கேட்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை, அவருக்கு நம் சமூகம் காட்டியிருக்கும் பிம்பம் அதுவே. ஆதலால், நாம் எல்லோருமே பொறுப்பாளிகள்.


ஜனாஸாக்களை அடக்கத்தான் வேண்டும் என்று அல்-குர்ஆனில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது, இரண்டு தடவைகள் வாசித்தும் காணவில்லையென உதய கம்மன்பில பேசும் போது அல்-குர்ஆனை மனதில் சுமந்ததாகக் கூறுவோரால் அதே சபையில் அப்போதும் - அதற்குப் பின்னும் கூட பதில் கொடுக்க முடியவில்லை. எப்போதுமே அதியுயர்ந்த இல்மோடு இருப்பதாகக் கூறுபவர்களும் 5 நாட்கள் கழித்தே அறிக்கை விடுகிறார்கள். கேட்டால், அதுவும் ஒரு டெக்னிக் என்று கூறுவார்கள். அதற்குள் கம்மன்பில பேசியது நாடெங்கும் பரவி மாற்று சிந்தனையை உருவாக்கி விடும், அவரிடம் கேட்டால் இவர்கள் இப்படித்தான் எனத் தெரிந்து அப்படிப் பேசியது தமது டெக்னிக் என்று கூறுவாhர்.


இதில் எந்த டெக்னிக் அதிக விளைவை ஏற்படுத்தியிருக்கிறது? என்று கேட்டால் எம்மவரிடம் வாதப் பிரதிவாதங்களுக்கு மாத்திரம் பஞ்சமிருக்காது. ஆக, நடந்ததைக் கடந்து செல்வதும் கட்டாயமாகிறது. ஒவ்வொரு நாள் விடியலிலும் ஓராயிரம் பிரச்சினைக எதிர் நோக்கும் சமூகம் நேற்றைய சிக்கல்களில் தரித்து நிற்கவும் முடியாது. ஆதலால், இன்றைய பிரச்சினையை மறந்து நாளைய பிரச்சினையைப் பற்றிப் பேசுவதும் இன்னொரு ரகம்.


அதற்கிடையில், தேவைப்பட்டால் ஓய்விலிருக்கும் அடுத்த முகத்தைக் காட்டுவதற்கும் தயங்க மாட்டேன் என்று ஹரினின் பெயரால் ஜனாதிபதி சொல்லி விட்டாரர். ஹரின் பெர்னான்டோ அச்சப்பட்டாரோ இல்லையோ முஸ்லிம் சமூகத்துக்குள் அச்சப் பிரதிபலிப்பு காணப்படுகிறது. யாரும் வாக்களிக்காமல் நட்பினால் நாடாளுமன்ற உறுப்பினராகி, நம்பிக்கைக்காக அமைச்சுப் பதவி தரப்பட்ட போதிலும் சமூகத் தொடர்பை துண்டாக அறுத்தெறிய முடியாத நீதியமைச்சருக்கும் இவ்வாறு பல முகங்கள் அவசியப்படுகிறது.


இருந்தாலும் அவருக்கும் மன அழுத்தம். முஸ்லிமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, முற்போக்கான நிலைப்பாட்டை வெளிக்காட்டியும் - திடமாகப் பேசியும் கூட கட்டாய ஜனாஸா எரிப்பு எனும் அநீதிக்கு, அதுவும் நீதியமைச்சராக இருந்து கொண்டே தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போன அழுத்தம் அவருக்கு. ஒரு கட்டத்தில் பதவி விலகினால் என்ன? என்று அவரும் சிந்தித்தார், எம் சமூகப் பெருந்தகைகளோடு உட்கார்ந்து கடந்த வாரம் இதனை ஆலோசித்தும் பார்த்தார்.


விலகி விடாதீர்கள், இருந்தால் சாதிக்கலாம் என்று வழங்கப்பட்ட அறிவுரைகளையும் வாங்கிக் கொண்டார். ஆனால், போகிற போக்கில் எத்தனை காலம் தாக்குப்பிடிப்பார் என்பது கேள்விக்குறியே. கொடுத்துக் கொண்டேயிருந்த மைத்ரிக்கும், கொடுப்பதைக் கொடுத்து எடுப்பதை எடுத்துக் கொள்ளத் தெரிந்த ராஜபக்சக்களுக்கும் வித்தியாசமிருப்பது அவருக்கும் முன் கூட்டியே தெரியும். இருந்தாலும் முயற்சி செய்து பார்த்தார் என்று சொல்லிக் கொள்ளலாம்.


ஒவ்வொரு நெருக்குதலைத் தான் உணரும் போதும், தனக்கு வர முன்பதாக ஏன் நமக்கு? என கேள்வி கேட்கத் தவறும் சமூகப் பிரதிநிதி ஏன் எனக்கு? என்று கேள்வி கேட்கிறான். அப்போது மாத்திரமே தன்னைப் போல் வேறு யார் இருக்கிறார்கள் என்று தேடுகிறான். இன்றைய காலத்தின் ஆகக்குறைந்த நடவடிக்கையாக அடுத்தவர் எழுதியிருக்கும் ஏதாவதொரு சமூக நீதிக்கான பதிவுக்கு பேஸ்புக்கில் ஒரு லைக்கை போடுகிறான் அல்லது வட்சப்பில் போர்வட் செய்கிறான்.


இத்தோடு சுருங்கியிருக்கும் சமூக இயக்கத்தினை இன்னும் வளர்த்துப் பெருக்கி வழிப்புணர்வை மேலோங்கச் செய்வது சிவில் சமூகத்தின் பொறுப்பாக இருக்கிறது. ஆனாலும் யாரைக் கேள்வி கேட்பது? எதற்கெதிராக சிந்தனையைத் தூண்டுவது என்பதிலும் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் அரசியல் மயப்பட்டுள்ள சூழலில் விளக்கடும் விரிசலாகி விடும்.


சமய ரீதியிலான ஒற்றுமையும் இல்லாத நிலையில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். இதில் நாம் என்ற வார்த்தைக்குப் பலம் சேர்ப்பது மிகக் கடினமான போராட்டம். இருந்தாலும் நாம் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வோம். கேட்டால், ஒற்றுமையெனும் கயிற்றைப் பிடித்த உம்மத்துக்கள் என்று பெருமை பேசிக் கொள்வோம்.


முதலில் கயிற்றையாவது தேடிப் பிடிப்போம்!











Irfan Iqbal

Chief Editor, Sonakar.com





2 comments:

IBNU said...

I always Read your Valuable Articles with respect. Why don't you try to UNITE ALL MUSLIMS IN THE UK under your or some one Leadership ?

Suhood MIY said...

Very recently only, I started reading Sonakar.com news. The contribution of the readers not that much enough, but the news from the editors are very well versed. Muslims are persecuted all over the world. But in Sri Lanka alone, such atrocities have taken a different form. The reason is that with the help of the government many new-faced scientists and intellectuals have emerged. The most important thing is that it is strange that the government and the people forget the proverb "The king will kill of the day. The god will stand and kill". We need to unite rather than say that Muslims will not unite. Older politicians, such as Hakeem, need to step up to the plate in public welfare projects.

Post a Comment