கடந்த பொதுதேர்தல் காலத்தில் புத்தளம் தேர்தல் மாவட்டத்தின் (புத்தளம் புறநகர்) கிராமம் ஒன்றில் உதிர்த்து விடப்பட்ட இரண்டு வார்த்தைகள் முஸ்லீம் மக்களிடம் பிரதான பேசு பொருளாக இருந்ததை அனேகர் இன்று மறந்திருப்பர்.
இந்த வார்த்தைகள் ஒரு பாமர மனிதனால் சொல்லபட்டிருந்தால் அல்லது கூலிக்கு மேடையேறி பீரங்கி பேச்சி நிகழ்த்தும் ஒரு சராசரி வாக்காளனினால் சொல்லப்பட்டிருந்தால் அது அவ்வளவு தூரம் இன்றய பேசு பொருளாக இருந்திருக்காது. ஆனால் இந்த வார்த்தைகளை உதிர்த்தவர் சிறந்த கல்வியாளர், ஜனாதிபதி சட்டத்தரணி, இன்றைய நீதி அமைச்சர் அலி சப்ரி என்பதால் அந்த வார்த்தைகள் மீள்பார்வைக்கு உட்படுகின்றன.
கிறிஸ்தவரின் முக்கிய சமய நாளாகிய உயிர்த்த ஞாயிறு(Easter Sunday) தினத்தில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் பின் நாட்டிலே ஏற்ப(டுத்தப்ப) ட்டிருந்த அசாதரண சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தன்னால் மட்டுமே முடியும், ஆகவே தன்னையே நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்ற நியாயப்பாட்டை இன்றைய ஜனாதிபதி திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டபோதும் பாதிப்படைந்திருந்த கிறிஸ்துவ சமூகமோ, குற்றம் சுமத்தப்பட்ட முஸ்லீம் சமூகமோ இதை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இருந்தும் சிங்கள பெளத்தர்களுக்கு இது ஒரு முக்கிய சங்கதியாகியது, கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியானார்.
அந்த நிலையிலேயே தேர்தல் வேட்பாளர் அல்லாத இன்றைய நீதியமைச்சர் ஒரு ஜனநாயக பயமுறுத்தலை மேற்கொண்டார். அதுதான் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கரையோரம் எங்கும் கொழும்பு முதல் நீர்கொழும்பு, புத்தளம், மன்னார் வழியாக யாழ்ப்பாணம் கடந்து, முல்லைத்தீவு, திருக்கோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை வரை இன்றைய ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தவர்களில் முஸ்லீம்கள் மாபெரும் தவறொன்றை இழைத்துவிட்டதாகவும், ஜனாதிபதியின் வெற்றியில் பங்காளிகளாக மாறி அவரின் நன்மதிப்பை பெற கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டதாகவும், அதற்கு பிராயசித்தம் தேடுவதோடு ஸ்ரீ லங்கா முஸ்லீம்கள் என்றும் நாட்டுப்பற்றாளர்கள் என்பதை நிரூபிக்க கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமாகவே (கடந்த) பொதுத் தேர்தலை நோக்க வேண்டும் என்றும், ஆகவே இதை தவறவிட்டால் நாம் நஷ்டவாளிகள் மட்டுமல்ல "அம்பான" க்கு கிடைக்கும், அதாவது " நிறையவே வாங்கி கட்டுவீர்கள்" என்ற ஒரு நகைச்சுவை கலந்த பயமுறுத்தல்.
இந்த பயமுறுத்தலை கணிசமானவர் அப்படியே நம்பினர், அதன் பயனாக "பொஹட்டுவ" (SLPP) ஆட்சியை கைப்பற்றியது. அலி சப்ரி அவர்கள் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்டார், கூடவே பயமுறுத்தல் செய்து வாக்கு சேகரித்த கைங்கரியத்துக்காகவும், பின்நாளில் இவரை வைத்தே அனேக காயங்களை செய்ய வேண்டியிருப்பதாலும் நீதியமைச்சர் என்ற முக்கிய அமைச்சயும் கையில் கொடுத்தார். A.C.S ஹமீத் வெளியுறவு துறை அமைச்சராக, பதியித்தீன் முஹமத் கல்வி அமைச்சராக, கதிர்காமர் வெளியுறவு, ரிஷாத் பதியுத்தீன் வர்த்தக அமைச்சராக பொறுபேற்கச் செய்யப்பட்டதின் காரண காரியங்கள் யாவரும் அறிந்த விடயங்களே. இருந்தும் அலி சப்ரி அவர்களின் பிரச்சினை "நன்றாக வாங்கிக் கட்டுவதில்" இருந்து முஸ்லீம் மக்களை பாதுகாப்பாற்றுவது என்றிருந்திருந்தாதால் அது நடை பெற்றிருக்க வேண்டும். மாறாக அது தொடர்கிறது.
கால நேரமும், சந்தர்ப்ப சூழ்நிலையும் கூட எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே அமைந்து விடுகின்றன, கண்டங்கள் பல கடந்து உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் "கொரொனா" வும் சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு தீணிபோடும் விடயமாக ஆகியது, அதனால் நன்றாக வாங்கிக் கடிக்கொள்ள நேரிடும் என்று அச்சமூட்டப்பட்ட சமூகம் உண்மையாகவே நிறைய நன்றாக் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கின்றது..
வாங்கிக் கட்டிக் கொள்வதை வாய் திறந்து சொல்ல முடியாத "கொரொனா" இறப்பாளிகள் அல்லது அப்படியாக சோடிக்கப்பட்டவர்கள் வாழும் மனிதர்களின் மனசாட்சிக்கு முன்னால் சாம்பலாக்கப்படுகின்றனர். முழு உலகமே கூடி எதைச் சொன்னாலும் எமது முடிவே இறுதியானது என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீ லங்கா ஜனாதிபதியும் அவரின் அரசாங்கமும் சற்று எல்லை மீறிச் செல்வதை எதிர் கட்சிகள் காட்டமாக கூறினாலும், நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு எதிராக எரிக்கப்படுவது இறந்தவருக்கு இருக்கும் உரிமை மீறல் மாத்திரமல்ல உயிரோடிருக்கும் இறந்தவரின் உற்றார் உறவினருக்கு இருக்கும் உரிமையின் அப்பட்டமான மீறல் என்பதை உணர்த்தி சிறுபான்மையினர் உள் நாட்டின் பல பகுதிகளிலும், உலக நாடுகள் எங்கும் அமைதி ஆர்ப்பாடங்கள் செய்தாலும் எல்லாமே செவிடன் காதில் ஊதும் சங்கொலியாகவே தெரிகின்றது.
நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட நீதியை நிலை நிறுத்தத் தவறிவிட்டது. பக்கசார்பான, பழிவாங்கும் குணங்கொண்ட இந்த அரசியல் முடிவு, பல வடிவங்கள் எடுத்து சுகாதார முடிவாக, சட்டமுடிவாக, நாட்டின் பாதுகாப்பு முடிவாக காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருந்தும் ஜனநாயக வழி முறைகளில் தளராத நம்பிக்கை கொண்டோரின் தொடர் ஆப்பாட்டங்கள், வழக்கு தாக்கல்கள், உள்நாட்டாரின் முயற்சியில் செய்யப்படும் வெளிநாட்டு அழுத்தங்கள் எல்லாம் மக்கள் எதிர்பார்க்கும் முடிவை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை கேள்விக்குறியாக்குவது போலாகிவிட்டது ஜனாதிபதியின் பேட்டி ஒன்று.
அண்மையில் எதிர் கட்சி பாரளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ ஜனாதிபதியையும், அவரின் தலைமையிலான அரசாங்கத்தையும் விமர்சனத்துக்குள்ளாக்கியது ஏனோ ஜனாதிபதியை அதிகம் பாதித்துவிட்டது. ஜனநாயக பண்புகளின் ஒன்றான "விமர்சனம்", அதாவது, அரசியல் ரீதியான விமர்சனத்துக்கு யாரும் அப்பாற்பட்டவர் இல்லை என்ற அம்சம் ஜனாதிபதியினால் சகித்துக் கொள்ளமுடியாததாகி விட, தனக்கு இரு முகங்கள் உள்ளதாகவும் அதில் ஒன்றே தமிழ் புலிகளின் தலைவர் பிரபாகரனை தோற்கடித்து, நாய் போல் இழுத்து வந்து நத்திக் கடல் ஓரதில் போட்டதாகவும், அப்படியான தன் முகத்தை பார்க்க விரும்பினால் அதையும் காட்டிவிடலாம் என்ற எச்சரிக்கை சற்று பின்னோக்கி 1983 சூலை மாதத்தில் ஜே..ஆரினால் செய்யப்பட்ட " சண்டை என்றால சண்டை, சமாதனம் என்றால் சமாதானம்" என்ற எச்சரிக்கையை நினைவூட்டுகிறது. முன்னைய அறிக்கை சிறுபான்மை தமிழ் சமூகத்துக்கு எதிரானது. பின்னயது பெரும்பான்மை சமூகத்தின் தனிமனிதனுக்கு எதிரானது. என்றாலும் இரண்டும் இயலாமையின் வெளிப்பாடே. ஆனாலும் அவை சொல்லிய/சொல்லும் சங்கதிகள் ஆபத்தானவை, நீண்டகால எதிர்விளைவுகளைக் கொண்டவை. சிறுபான்மை சமூகங்களுக்கான மறை முறைமுக எச்சரிக்கை. துட்டகெமுணு (துஸ்ட காமினி) எலார( எல்லானுக்கு) கொடுத்த எதிரிக்குறிய மரியாதையைக் கூட ஜனாதிபதியால் தன் நாட்டு மக்களுக்கு கொடுக்க முடியாதுள்ள பரிதாப நிலை.
மேற்குலகிலும், நம் நாட்டுக்கு ஜனநாயகம் கற்றுத்தந்த இங்கிலாந்திலும் இத்தகைய நிலைமகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்று பார்க்கும் போது அரசாங்கமும், ஆட்சியாளர்களும், மக்களும் எவ்வளவு தூரம் நீதி நேர்மையின் மீதும், உரிமை என்ற விடயத்தின் மீதும் அக்கறையுடன் செயல் படுகின்றனர் என்பது புலனாகும். டோனி பிளயர் (Tony Blair) அரசாங்கத்தில் ஈராக்குக்கு எதிராக நேட்டோ (NATO) ஒப்பந்த நாடுகளினால் தொடுக்கப்பட்ட சட்டவிரோத யுத்தத்திற்கு எதிராக சில அமைச்சர்கள் பதவி விலகினார்கள். அன்றைய வெளிவிவகார அமைச்சர் ரொபின் குக் (Robin Cook), கிளயார் ஷோர்ட்(Clare Short) ஆகியோர் முக்கியம் பெறுகின்றனர். இதே போலவே சில ஆண்டுகளுக்கு முன் சிரியாவின் கொடுங்கோளன் அஸாத் அரசாங்கத்துக்கு எதிராக வான் தாக்குதல் செய்வது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றில் செய்யப்பட்ட 72 மனி நேர வாதப் பிரதிவாதங்களில் அன்றைய எதிர்கட்சியான தொழில் கட்சியின் தலைவர் ஜேரமி கோபின் ( Jeremy Corbyn) தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு அப்பால் சுயாதீனமாக முடிவெடுக்கும் உரிமையை வழங்க அந்த சந்தர்ப்பத்தில் தொழில் கட்சியின் நிழல் அமைச்சர் டோனி பென் (Tony Ben) தனது நியாயபூர்வமான, தத்துவார்த்த வாதத்தின் ஊடாக அஸாத் அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதலுக்கு முழு நாட்டையும் சம்மதிக்கச் செய்தார்.
அமெரிக்காவிலே கறுப்பின மனிதர் ஜர்ஜ ப்ளொய்ட் (Gorge Floyd) அமெரிக்க போலிசாரினாலே கழுத்து நெறிக்கப்பட்ட பரிதாபச் செயல் கறுப்பு உயிர்களும் (ஒரு) பொருட்டே (Black Lives Matter) என்ற கருதாக்கம் வெகுசன போராட்டமாக, வெள்ளை மேலாண்மை (White supremacy) க்கு எதிரான போராட்டமாக சமூக வலைத் தளங்களால் உலகெங்கும் பரப்பப்பட்ட போது அது பிரித்தானியாவில் வேறு விதமாக பரிணமித்தது. அதாவது அடிமை வியாபரத்தின் நினைவு சின்னமாக பிரிஸ்டல்(Bristol) நகரிலே நிறுவப்பட்டிருந்த அடிமை வியாபாரி எட்வாட் கொல்ஸன்(Edward Colson) னின் சிலை ஆர்ப்பாட்டக்காரர்களால் பலவந்தமாக உடைத்து கீழிறக்கப்பட்டு கடலுக்குள் வீசப்பட்டது. அரசாங்கமும், எதிர் கட்சிகளும் அடிமை வியாபாரத்தின் பிற்போக்குத் தனத்தின் மிச்ச சொச்சங்களை தாங்கள் இதுவரை கண்டு கொள்ளாமல் விட்டதும், அந்த மனித விரோத செயலுக்கு சிலை எழுப்பி அதையே தம் பெருமையாக வரலாற்றில் விட்டுச் சென்றதும் அநாரீகம் என்பதை ஏற்றுக் கொண்டு நாடெங்கிலும் அடிமை வியாபாரத்தோடு தொடர்புடைய அனைத்து பாதை பெயர்பலகைகளையும் கூட கழற்றி எறிந்துவிட்டு அந்த பாதைகளுக்கு புது பெயர்களும் சூட்டினர்.
கடந்த நான்கு வருட அதிபர் பதவியில் இருந்து தனக்கு எதிரான அனைத்தையும் "உண்மையற்றவை" (Fake) என்ற ஒற்றை வார்த்தைக்குள் வைத்து உலகத்தை அடக்க முற்பட்டு, நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தன் தோல்வியையும் "பொய்" என்று உரக்கக் கூறி தன் ஆதரவாளர்களை உசுப்பேற்றி அமெரிக்க வரலாற்றில் வன்முறையில் ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் வெள்ளை மாளிகையில் ஐந்து உயிர்கள் காவு கொள்ளப்பட காரணமயிருந்த டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) அமெரிக்க வரலாற்றில் இரண்டாம் முறையும் முறைகேட்டு குற்றத்தில் பதவி நீக்கப்பட்டவராக்கப்பட (impeached) அவரின் கட்சிக்காரர்களும் மேல்/கீழ் சபைகளில் ஆதரவளித்து சனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளனர்.
இப்படியாக உலகெங்கிலும் மக்களை முதன்மை படுத்தும் விடயங்களை மக்கள் பிரதிகள் செயல் படுத்தும் போது நம் நாட்டில் மட்டும் அரசியலுக்கு பெருந்தொகை பணத்தை முதலிட்டு, அரசியலை இலாபம் பார்க்கும் வியாபாரமாக்கி, இலாப நஷ்டத்தை கணக்கு பார்த்து அதை சூதாட்டமாக்கி, இந்த சூதாட்டத்தின் ஹாலால், ஹராம் தொடர்பாக மார்க்க தீர்ப்பு பெறும் திணைக்களமாக ஜம்மியத்துல் உலமா சபை வைத்து, வருவாய் உள்ள திணைக்களத்தின் அதிகாரத்தை கைப்பற்ற நூற்றுக் கணக்கான ஜமாத்துக்களை உருவாக்கி அதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலைக்காக காத்திருப்பதும், காய் நகர்த்தலிலும் அதிகம் நேரமொதுக்குவதால் சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்கள் காலக் காற்றால் அடித்துச் செல்லப்படுகிறது. அதனால் அதன் நீண்டகால விளைவுகளும் சரியாக உள்வாங்கப் பட்டாமல் இருக்கின்றன.
இதில் இருந்து நம் அரசியல்வாதிகள் குறிப்பாக நீதியமைச்சரும், இறந்தவரின் உரிமை மீறலுக்கு திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று எரிப்பு நிறுத்தலுக்கு முன்நிபந்தையாகவே 20ம் திருத்தத்திற்கு கையுயர்த்தினோம் என்று இன்றும்கூட மக்களை நம்பவைக்க முயற்சிக்கும் அறுவரும் உடனடியாக தம் பதவிகளை துறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற பாடத்தை படித்துக்கொள்ள வேண்டும். இது ஒரு ஜனநாயக வழியும் கூட.
இதை அவர்கள் மறுப்பார்களேயானால் அவர்கள் செல்லும் பாதை மிக ஆபத்தானது என்பதை நினைவு படுத்துகிறார்கள் மக்கள். காலம் கடக்க முன் மக்களுடன் சேருங்கள், அல்லது மக்களின் அதிரடி தீர்ப்புகளுக்காக காத்திருப்பதும் கூட உங்கள் உரிமை என்பதையும் நினைவு படுத்துகிறார்கள் மக்கள், ஆனால் அந்த தீர்பு இதமாக இருக்கப் போவதில்லை என்றும் அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.
Mohamed SR Nisthar
Co-Editor, Sonakar.com
No comments:
Post a Comment