இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் கட்டாய எரிப்புக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் சமூகம் அதைத் தடுப்பதற்கு தொடர்ச்சியாக போராடி வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் மாதம் நிபுணர்களின் கருத்தறியும் நிமித்தம் சுகாதார அமைச்சினால் பிரத்யேக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களிடம் இது தொடர்பிலான அபிப்பிராயம் கோரப்பட்டிருந்தது.
பேராசிரியர் ஜெனிபர் பெரேராவின் தலைமையிலான குழுவினர் இதனை நன்கு ஆராய்ந்து தமது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளனர். அதில், அடக்கம் செய்ய அனுமதிப்பதால் எதுவித ஆபத்துமில்லையென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இவ்வறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லையென அரசாங்கம் மழுப்பி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதேவேளை, முன்னதாக கட்டாய எரிப்பை வலியுறுத்தி அரசுக்கு ஆலோசனை வழங்கிய முன்னைய நிபுணர்கள் தொடர்ந்தும் அரசுக்கு இது தொடர்பில் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், இவ்விடயத்தில் இரு வேறு அபிப்பிராயங்கள் நிலவுவதாக காட்டிக்கொள்ள அரசு முயல்வதாகவும் சோனகர்.கொம்முக்கு அறியக் கிடைத்துள்ளது. பாதுகாப்பான முறையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்போரின் உடலங்களை அடக்கம் செய்வதற்கான பரிந்துரைகள் ஏலவே கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment