கட்டாய ஜனாஸா எரிப்பு உலகளாவிய ரீதியில் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், குவைத், கட்டார் என பல நாடுகளில் அமைதி வழியில் உணர்வுகளைக் கொட்டியாகி விட்டது.
இலங்கையிலும், கொழும்பு, காலி, புத்தளம், அக்குறணை, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, யாழ்ப்பாணம், மலையகம் என நாட்டின் பல பாகங்களில் எதிர்ப்புணர்வுகள், மனித நேயக் குரல்களைப் பதிவு செய்தாகிவிட்டது.
திஸ்ஸ விதாரன, மலிக் பீரிஸ், நிஹால் அபேசிங்க போன்ற படித்துத் தேர்ந்த புத்திஜீவிகளும் சொல்லியாகி விட்டது. ஆனாலும் இன்றளவிலும் மெத்திகா விதானகே என்கிற ஒரேயொரு அரச அங்கீகாரம் பெற்ற நிபுணரின் நிலைப்பாட்டுக்கு முன் எதுவும் எடுபடுவதாயில்லை.
உச்ச நீதிமன்றம் சென்றாயிற்று, மஹர சிறைக் கைதிகள் விவகாரம் வத்தளை நீதிமன்றிலும் பேசப்பட்டாயிற்று. இன்னும் எங்கு பேசினாலும் எரிக்கும் கொள்கையிலிருந்து அரசாங்கம் விட்டு விலக முடியாதபடி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தேரர்கள் படையெடுத்தாயிற்று, மாற்று அரசியல் சக்திகள் குரல் கொடுத்தாயிற்று. ஆனாலும், எல்லாமே வேலி தாண்டாத சத்தமாகவே இருக்கிறது.
இப்படித்தான் மாவனல்லையில் புத்தர் சிலை உடைப்பில் ஆரம்பித்து ஈஸ்டர் தாக்குதல் வரை வந்து தனிச்சிங்கள அரசு எனும் மாயையை உருவாக்கி மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்று மனுச நானாயக்கார புதன்கிழமை குற்றச்சாட்டொன்றை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் வெற்றிக்காக அயராது உழைத்த வியத்மக குழுவினர் '2020 குண்டுவெடிப்பு இல்லாத ஆண்டு' என விளம்பரம் செய்து களிப்படைகிறார்கள்.
20 மாதங்களாகியும் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் அம்பலத்துக்கு வரவில்லை, வைத்தவர்களுக்குத் தான் அதன் பின்னணியும் தெரியும், தடுக்கவும் தெரியும் என எதிர்;க்கட்சிக்காரர்கள் ட்விட்டரில் இதற்குப் பதிலளித்துக் கொண்டுமுள்ளனர். இப்படி பல முனைச் சிக்கல்களைச் சமூகம் பேசிக் கொண்டிருக்கையில், கூடிப் போனால் 7 – 8 மாதங்கள் கூட இந்த அரசால் தாங்க முடியாது. நாடு திவாலாகி விட்டதென்று ஜே.வி.பி பகிரங்கமாக ஆரூடம் வெளியிட்டுள்ளது.
நாட்டைச் சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடியை மறைக்க மாகாண சபைத் தேர்தல் என்கிறார்கள், அதன் முடிவைக் காட்டி மக்களை மீண்டும் திசை திருப்பப் பார்க்கிறார்கள், இனவாதத்தை விதைக்கிறார்கள் என்று எல்லாப் பக்கமும் கூக்குரல்கள். அதற்கிடையில் மாகாண சபைத் தேர்தலுக்காக தேதியை நிர்ணயிப்பது தள்ளிப் போடப்பட்டு விட்டது. ஆனாலும், விரக்தியை மறைக்க முடியாத அரசாங்கம் அடுத்தடுத்து சிக்கல்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறது.
நாட்டின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை மிக முக்கியமான அம்சம். ஆனாலும், அதனை வலுக்கட்டாயமாக மீள ஆரம்பிக்கும் முயற்சியிலும் இடி விழுந்துள்ளது. ரஷ்யாவுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் அங்கிருந்து சில நூறு சுற்றுலாப்பயணிகளைக் கொண்டு வந்து எங்கள் நாடு பாதுகாப்பானது என்று உலகுக்குப் பறைசாற்ற எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
வந்ததில் சிலருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட சுற்றுலாத்தளங்களுக்கே அழைத்துச் செல்லப்படுவதாக இருந்தாலும், கூட வந்தவர்களுக்கு கொரோனா எனும் போது கூட வந்தவர்களால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? அரசாங்க செலவிலேயே வந்திருந்தாலும் அவர்களுக்கும் அச்சம் இருக்கவே செய்யும். இருந்தாலும் இதையெல்லாம் எதிர்பார்;த்திருந்தோம் ஆதலால் நிலைமையை சமாளிக்கத் தயாராகவே இருக்கிறோம் என்கிறது அரசு.
மறுபுறத்தில் கேகாலை தம்மிகவின் கொரோனா பானியைக் குடித்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள போதிலும், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலையின் அங்கீகாரமும் இனவாதத்தை ஊதிப் பெருப்பிக்கும் அரச சார்பு தொலைக்காட்சியின் ஏக விளம்பரமும் உலகமே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் வைரசுக்கு இலங்கையில் மருந்திருப்பதாகக் காட்ட எடுக்கும் முயற்சியும் கூட தள்ளி வைத்துப் பார்க்க முடியாதவை.
பல கோணங்களில் பல நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கையில் முஸ்லிம் சமூகத்தின் மீதான அடக்குமுறை தனியாகத் தெரிகிறது. எந்த அளவில் இது முடிவுக்கு வரும்? என்கிற துடிப்பும் தவிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கையில் அரசியல்வாதிகள் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை.
முழு அளவிலான மௌன சூனியங்களாகிப் போயுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் திரும்பவும் பேசுவதற்கு ஏதாவது நடந்தாக வேண்டும். அதுவும் ஜனாஸா எரிப்பு எனும் கொடுமைக்கு முடிவொன்று வந்தால் தான் உயிரற்றுப் போயுள்ள இந்த ஜடங்களுக்கு மூச்சு வரும். ஆனாலும் அவர்கள் விடவில்லை. அவ்வப்போது தமது ஆதரவாளர்கள் மத்தியில் நாளை தீர்வு வரப் போகிறது, நாளை மறுநாள் தீர்வு வரப் போகிறது, நிபந்தனையுடன் நல்ல முடிவு வரப்போகிறது என்று காலத்தைக் கடத்தத் தவறவில்லை.
இதற்கிடையில், நிபுணர்கள் குழு நியமிக்கப்படுவதும் மீள நியமிக்கப்படுவதும் அறிக்கை கொடுப்பதும், தரப்பட்ட அறிக்கை ஆராயப்படுவதும், அதிலிருந்து முடிவு வருவதும் காணாமல் போவதுமென்றும் ஏகப்பட்ட அரங்கேற்றங்கள். இத்தனைக்கும் மத்தியில் முஸ்லிம் சமூகத்திடம் எஞ்சியிருப்பது நம்பிக்கையொன்று தான்.
இறைவன் நம்மைக் கைவிட மாட்டான் என்கிற நம்பிக்கையில் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை. அரசியல் ஒரு வர்த்தகம் என்றாகி விட்டதால் சமூகப் பிரச்சினைகளைத் தூக்கிப் பிடித்துப் பேசும் அரசியல் சக்திகளும் நமக்கில்லையென்றாகி விட்டது. இதற்குள் இந்த சமூகத்தின் ஆன்மீக தலைமைத்துவமும் சிக்கித் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
மக்கள், மாற்றம் பற்றி குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உணர்வு எத்தனை வீதம் சாதுர்யம் எத்தனை வீதம் என்பதைப் பிரித்தறிவது அவரவரைப் பொறுத்தது. ஆனாலும் இலங்கை முஸ்லிம்களை அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகப் பலவீனப்படுத்தப்படுத்தியாக வேண்டும் என்ற திட்டம் கையளவு வெற்றியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
முஸ்லிம் அரசியல் இதை விட அசிங்கப் படுவதற்கு எதுவுமில்லையெனும் நிலையில் படு குழியில் வீழ்ந்து விட்டது. இந்த சந்தப்பர்த்தை முதலீடாக்கி, மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கியாக வேண்டும் எனும் ராஜபக்ச சிந்தனையும் வெற்றியளிக்கவில்லை. அலி சப்ரியெனும் மாயையை அவர்களே தூக்கிப் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் மீறி அவருக்காக – அவரது முயற்சியில் என்று இனியும் சொல்லப் போகும் எதுவும் எடுபடப் போவதில்லையெனும் அளவுக்கு காலத்தைக் கடத்தியாயிற்று.
எனவே, இனி அலி சப்ரி ஊடாக ஜனாஸா எரிப்புக்குத் தீர்வு கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் அதனூடாக ராஜபக்ச குடும்பம் எதிர்பார்த்த மாற்றுத் தலைமைத் திட்டம் நிச்சயமாக நிறைவேறப் போவதில்லை. கல்முனை ஹரீசையும், நிந்தவூர் பைசல் காசிமையும், பொத்துவில் முஷரபையும், அநுராதபுர இஷாக் ரஹ்மானையும் கூட கேள்வி கேட்கத் தயங்கும் இந்த சமூகம் நிச்சயமாக அலி சப்ரியை ஒரு நாள் கொண்டாடிவிட்டு மறந்து போய் விடும். ஆதலால் அந்தத் திட்டம் தவிடு பொடியாகி விட்டது என்பதே நிதர்சனம்.
இவர்களில் யாரைக் கேட்டாலும் தாம் ஊருக்கு நடக்கப் போகும் நல்லதுக்காகக் காத்திருப்பதாகச் சொல்வார்கள். அவர்கள் ஊருக்கு செய்த நன்மையென்ன? செய்யப் போகும் நன்மையென்னவென பார்த்தால், போட வேண்டிய ரோட்டைப் போட்டுக் கொடுத்திருப்பார்கள், அதற்கு வரிப்பணம் செலுத்தியவர்கள் என்ற வகையில் அமைதியாக இருக்க வேண்டிய மக்கள் இவர்களுக்கு மாலையிட்டுக் கொண்டாடியிருப்பார்கள். சாதனைகள் - எதிர்பார்ப்புகளின் அளவு கூட இத்தோடு சுருங்கிக் கொள்வதால் அரசியல்வாதிகள் அடுத்த தலைமுறையிலும் நிம்மதியாக இருக்கலாம்.
அடுத்த இலக்கு ஆன்மீகத் தலைமை. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமைத்துவத்தை சிதைத்தாக வேண்டும் என்ற முயற்சி பல கோணங்களில் இடம்பெறுகிறது. இதன் ஆழமறியாதவரன்று அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி. ஆனாலும் அவரும் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார். சமூகக் கேலிகளை உருவாக்கப் பங்களிக்கிறார், எனவே சமூகமும் கேலிச் சித்திரம் வரைந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
அங்கும் மாற்றுத் தலைமையின் அவசியம் குறித்து பேசப்படுகிறது. சிங்கள மக்களோடு அன்யோன்யமாக உரையாடக் கூடிய, மொழிவளமுள்ளவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது. எனக்குத் தெரிந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவில் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்தத் தகுதியனைத்தும் தலைவரிடம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது. கால மாற்றத்தினால் ஏற்படும் இந்த எதிர்பார்ப்பில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை. தொடர்பாடல் ஊடான புரிந்துணர்வுக்கு 'மொழி' ஒரு தடையாக இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.
சிங்கள மொழியை சரளமாகப் பேசுவதும் சிந்தனை மாற்றத்தை உள்வாங்கி அதற்கேற்ப சமூகத்தை வழி நடாத்துவதும் கூட அவசியப்படுகிறது. நாமென்னவோ இன்னும் 1400 வருடங்களுக்கு முன்னுள்ள சூழ்நிலையில் தரித்து நிற்கிறோம் என்பதாகவே உணர்வு சொல்கிறது. அதிலிருந்து விடுபடக்கூடிய முற்போக்கு சிந்தனை முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகமாக வாழும் இந்நாட்டிற்கு கட்டாயம் அவசியப்படுகிறது. அதைச் சொல்ல வேண்டியதும் கடமை.
ஏனெனில், இங்கு முஸ்லிம் சமூகத்தின் தேசத்தோடான தொடர்பும் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. அண்மையில் சமூக வலைத்தளத்தில் ஒரு கடும்போக்குவாதியின் பின்னூட்டம்: நீங்கள் எல்லாம் 1800ம் ஆண்டு அரேபியாவிலிருந்து வந்தது போன்று திரும்பிச் சென்று விடுங்கள் என்றிருந்தது. அதற்கு பதிலளித்தவர், ஆம்! நீங்களும் வேடர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு இந்தியாவிலிருந்து வந்தது போன்று அங்கேயே திரும்பிச் சென்று விடுங்கள் என்று காணப்பட்டது. இருப்பினும் அவர்களும் - நாங்களும் சேர்ந்து வாழும் தேசம் என்ற அடிப்படையில் தேசத் தொடர்பும் - பிணைப்பும் இன்னும் ஆழமாக ஆராயப்பட வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தேசத்தோடான தொடர்பை வேறுபடுத்தி நம்மை நாமே அன்னியப்படுத்துவதில் கொள்கை இயக்கங்கள் பங்களித்தன என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதையும் தாண்டிய நிலையில் சந்தேகத்தோடு பார்க்கப்படும் எம் தேசப்பற்றுக்கும் நாம் பொறுப்பு சொல்லியாக வேண்டியவர்களாக இருக்கிறோம்.
அவர்கள் தம்மை இலங்கையர் என்கிறார்கள், நாமும் சொல்கிறோம் ஆனால் நாம் சொல்லும் போது அது சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படுகிறது. நமக்கும் இந்த தேசத்துக்குமான தொடர்பு தொடர்பறுந்து போயுள்ளது. நம்மை ஓரங்கட்டியாக வேண்டும் என்ற ஆழ் நோக்கோடு நம்மைத் தாக்கி வரும் இனவாதத்துக்கு வெறும் அரசியல் தளத்தில் மாத்திரம் முடிவைக் காண முடியாது. அரசியலால் வழி நடாத்தப்படும் சமூகத் தளத்திலும் அதற்கான ஆவன செய்தாக வேண்டும். அதுவும் எமது சமூகத்தின் ஆன்மீகத் தலைமைகள் இதனை முன்னெடுத்தாக வேண்டும்.
துரதிஷ்டம், இன்று எம் ஆன்மீகத் தலைமைகளும் வெளியில் தலை காட்டவோ, தைரியமாக வெளி வந்து எதையும் பேசவோ முடியாத நிலையில் இருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் சர்வாதிகாரத்தின் மீது அதீத பற்றுக்கொண்ட, மாற்றி சிந்திக்க முடியாத அரசியல் தளத்தில் எம் பிரதிநிதிகள் அடிமைகளாகித் தலை குனிந்து தவிக்கிறார்கள். ஒரு கோணத்தில் இரு புறத்திலிருந்தும் ஒரே விளக்கமே வருகிறது.
நாம் பேசினால் இனவாதமாகி விடும் என்று இரு தளத்திலிருந்தும் பதில் வருகிறது. உண்மை! இனவாதமாகி விடும் அளவுக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். அதுவும் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதனை உணர மறுத்து, இப்போது முனையிலிருக்கும் கால கட்டத்தில் முடங்கிக் கிடக்கிறோம். அதீத நம்பிக்கையின் பால் கடந்த காலங்களில் விட்ட தவறுகளிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று எத்தனை பேர் வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அது சொல்லப்பட வெண்டிய தளத்திலிருந்து சொல்லப்பட்டாக வேண்டும். எம் மக்கள் அதற்குத் தான் பழகிப் போயுள்ளார்கள்.
நாட்டில் இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த சூழ்நிலை அரசியல் சூழ்ச்சியென்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த சூழ்ச்சியை அதே தளத்தில் வெல்ல முடியாத அளவுக்கு ஊமையாகிப் போயிருப்பதற்கு வேறு யாரும் காரணமில்லை. வாக்களித்து மூன்று மாதங்களுக்குள் ஏமாற்றிச் சென்றவர்களை விரல் நீட்டிக் கேட்க முடியாது தவிப்பதைக் கொண்டு ஒவ்வொரு வாக்காளனும் வெட்கப்பட வேண்டும். அந்தக் கோபத்தை அவ்வப்போது தானாக வந்து சிக்கிக் கொள்ளும் பலியாடுகளிடம் கொட்டித் தீர்ப்பதால் நமக்கும் சமூகத்துக்கும் எந்த மாற்றமும் கிடைக்கப் போவதில்லை.
ஏனெனில் அரசியலில், ஒரு பக்கத்தில் வாங்கும் திட்டுக்கள் இன்னொரு பக்கத்தில் முதலீடாகும். இதையெல்லாம் நன்கறிந்தே சிலர் தானாக முன் வந்து திட்டு வாங்கிக் கொள்கிறார்கள். இந்த வட்டத்திற்கு வெளியில் வந்து செயற்பட மக்களும் தயாராக இல்லை. எனவே, பலிக்கடாக்கள் தானாக மாட்டும் வரை காத்திருக்கிறார்கள். தப்பித் தவறியும் தாம் வாக்களித்து அனுப்பிய ஏமாற்றுக் காரர்களை வைய மறுக்கிறார்கள். இப்படி இரட்டை வேடம் போடும் சமூகத்துக்கு அதை விட வேடமிடத் தெரிந்த தலைவர்கள் அமைவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனாலும். சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் அப்பாவிகள். நாட்டில் என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாது. அவர்களுள் பலருக்கு ஜனாஸாக்களை எரிக்கிறார்கள் என்ற சிறு தலைப்பைத் தவிர விளக்கம் தெரியாது. இப்படியான அப்பாவி மக்கள் அவ்வப்போது எங்காவது தம் உணர்வுகளைக் கொட்டும் போது அதைக் கண்டு மனம் துடிக்கும். அவர்களுக்காகவும், அவர்கள் போன்ற அடிமட்ட சமூகப் பங்காளிகளின் நாளைய இருப்புக்காகவும் எம் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. சத்தங்கள், வேலி தாண்டிப் பயணிக்க வேண்டியுள்ளது.
இதையெல்லாம், யாரோ செய்வார்கள் என்று தரித்து நின்று விடாமல் அவரவர் தம் பொறுப்புணர்ந்து செயற்பட ஆரம்பிக்கும் போது சமூகம் கூட்டாகப் பயன் பெறும்!
Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
No comments:
Post a Comment