வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் வருகை தந்த யானைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சத்த வெடி மூலம் காட்டுப் பகுதிக்கு துரத்தப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் தொடர்ச்சியாக யானைகளின் வருகையை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், இரவு நேரங்களில் வயல் காவல் செய்வதில் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
வயல் பகுதிக்கு பிரவேசித்த யானை வயல் நிலங்களை அழித்து விவசாயிகள் செய்கை செய்யப்பட்ட சோளம் மற்றும் கச்சான் என்பவற்றை அழித்து நாசம் செய்துள்ளதுடன், வயல் காவலாளியின் குடிசையையும் துவம்சம் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதிகளுக்கு யானைகள் தொடர்ச்சியாக வருகை தருவது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் விடுத்த பட்சத்தில் கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வருகை தந்து சத்த வெடி மூலம் யானையை காட்டு பகுதிக்கு விரட்டப்படுவதுடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்றதும் சிறிது நேரம் கழித்து மீண்டும் யானைகள் வயல் பகுதிக்கு வருகை தருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
யானை தொல்லையில் இருந்து விவசாயத்தினை பாதுகாப்பதா அல்லது வெள்ளம் மற்றும் நோய் என்பவற்றில் இருந்து விவசாயத்தினை காப்பாற்றுவதா அல்லது எங்களின் உயிரை காப்பாற்றுவதா என்ற கவலையில் எங்களது ஒவ்வொரு நாளையும் கழிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ச்சியாக வரும் நிலையில் வங்கிகளின் கடன் மற்றும் நகைகளை அடகு வைத்து விவசாய செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக கடன் சுமையுடன் கடன்காரனாக வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகவே இவ்வாறான பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு யானை பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment