கொவிட் 19 சடலங்களின் அரசியலும் இனவாதமும் - sonakar.com

Post Top Ad

Saturday, 2 January 2021

கொவிட் 19 சடலங்களின் அரசியலும் இனவாதமும்

 


இறந்தவர்களின் கௌரவம், அவர்களின் கலாசாரம் மற்றும் சமயப் பாரம்பரியங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டும்”  —கொவிட் 19 சூழமைவில் சடலங்களில் இருந்து தொற்றுப் பரவுவதைத் தடுத்துக் கட்டுப்படுத்தி பாதுகாப்பாகப் பேணல், உலக சுகாதார ஸ்தாபனம், இடைக்கால அறிக்கை (செப்டெம்பர் 4, 2020)

கொவிட் தொற்றுநோயினால் பீடிக்கப்படுவதை விட, கொவிட் தொற்றினால் இறப்பவர்களின் உடல்களைப் பலவந்தமாகத் தகனம் செய்யும் அவலமே இலங்கை முஸ்லிம்களின் மனதில் ஒரு பாரிய அச்சமாக உருவெடுத்துள்ளது. ஒருவரின் சமய நம்பிக்கையும் இனத்துவமும் எதுவாக இருந்தபோதிலும், இறந்த உடல்களை இறந்த ஆன்மாக்களுக்கேயுரிய (ஜனாசா) இறுதி கௌரவத்துடன் நல்லடக்கம் செய்வது நாம் வரலாறு நெடுகிலும் பேணிவரும் பண்பாடாகவும் பாரம்பரியமாகவும் இருந்து வருகின்றது. 


ஈமக்கிரியை செய்வதற்கான இந்த உரிமையினை அரசு ஈனத்தனமாக அதன் காலில் போட்டு நசுக்கிவிட முடியாது ஏனெனில் இது இறந்தவரின் அடிப்படை உரிமையாகும். உயிருடன் உள்ளவருக்கு இருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் சடலங்களுக்கும் உண்டு எனும் உண்மை அரசுக்குத்  தெரிந்தாலும் அரச இயந்திரத்தின் அச்சாணியே இனவாதத் துருவேறியுள்ள இன்றைய நிலையில் இந்த உண்மைகளை அரசு கண்டுகொள்ளாது சடலங்களை வைத்து அரசியல் செய்துவருகின்றது. உடல்களைக் கட்டாயத் தகனத்திற்குட்படுத்துவது கிறிஸ்தவர்களையும் பாதித்த போதிலும் இது குறிப்பாக முஸ்லிம்களுக்கு அதீத சோகத்தினையும் மனவலியையும் ஏற்படுத்தும் ஒரு பிறள்வாகும். ஏனெனில் முஸ்லிம்களைப் பொறுத்த அளவில் உடல்களை நல்லடக்கம் செய்வது சமரசம் செய்யவோ அல்லது பேரம் பேசவோ முடியாத ஒரு சமய நடைமுறையாகும். 


நல்லடக்கம் என்பது முஸ்லிம்களைப் பொறுத்த அளவில் சடங்கோ சம்பிரதாயமோ அல்ல. அது இறைவன் காட்டிய வழி. சடலங்கள் ஆன்மாக்கள் வாழ்ந்த கூடுகள். அதனால்தான் தனது எதிரியின் சடலம் கொண்டுசெல்லப்பட்டபோதும் முஹம்மது நபி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். தகனம் செய்வது என்பது சடலங்களுக்கு வழங்கப்படும் அதியுச்ச அகௌரவமாகும். முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டு நசுக்கப்படுகின்றார்கள் என்பது சிறுபான்மைச் சமுதாயங்களில் வலுப்பெற்றுவரும் கருத்தாக மாறிவருகின்றது. குறிப்பாக நல்லடக்கம் செய்வதைத் தடைசெய்வதற்கான எவ்வித அறிவியல் ரீதியான அடிப்படையும் இல்லாத நிலையிலும் உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்தும் நல்லடக்கத்தினை அனுமதித்துள்ள நிலையிலும் இலங்கை அரசின் இந்த முட்டாள்தனமான பிடிவாதம் அருவருப்பான  ஆச்சரியத்தினையே தெளிந்த சிந்தனையுடைய மக்களில் மனங்களில் ஏற்படுத்தி வருகின்றது. 2019 டிசம்பரில் கொவிட் தொற்று ஏற்பட்டதில் இருந்து பாரிய மனிதப் புதைகுழிகளில் சடலங்களைப் புதைத்த நாடுகளில் கூட அவ்வாறு புதைக்கப்படட் சடலங்களில் இருந்து தொற்றுப் பரவிய எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை. இலங்கையில் மட்டும் அவ்வாறு தொற்றுப் பரவும் எனப் பூச்சாண்டி காட்டப்படுவது அறிவியல் உலகில் நகைப்புக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.  


எவ்வித தர்க்கரீதியான காரணங்களுமின்றி அரசு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தெடுக்கையில் மக்கள் தங்கள் துயரத்தை முறையிட்டு நீதி கேட்கும் இறுதிப் புகலிடமாக இருப்பதோ நீதிமன்றங்கள். அந்த உச்ச நீதிமன்றமே கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி 11 மனுதாரர்களின் மனுவினையும் நிராகரித்துவி்ட்டது. கட்டாயத் தகனக் கொள்கைக்குச் சவால் விடுத்து கொவிட் தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை அவரவர் சமய முறைப்படியும் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு அமையவும் நல்லடக்கம் செய்யும் உரிமையினைப் பாதுகாக்கும் தீர்ப்பினைக் கோரியே இந்த மனுதாரர்கள் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். அப்பட்டமாக அநீதி இழைக்கப்படுகையில் நீதிமன்றம் மௌனம் காத்தமை பிரச்சினையின் அரசியல்மயமாக்கத்தினையே அதிகரித்திருக்கின்றது. 


நீதிமன்றத்தின் அனுமதியைக் கேட்ட நாங்கள் நீதிமன்றம் எங்கள் நியாயக் கோரிக்கையினைச் சகட்டுமேனிக்கு நிராகரித்த அதிர்வினால் இன்னும் தள்ளாடிக்கொண்டிருக்கின்றோம். உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்புக்கான காரணங்களைக் கூறாமல் இருப்பதற்கான உரித்தினைக் கொண்டுள்ளபோதிலும் பிரசைகளின் உரிமைகளின் நடுவர் தீர்ப்பாளர் என்கின்ற ரீதியிலும் குறிப்பாக, ஒரு நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கைக்கு அனுமதியளிப்பது பொருத்தமானது என நினைக்கின்ற சூழ்நிலையிலும் இவ்வாறான இனத்துவ ரீதியாக நுண்மைமிக்க விடயத்திற்கு அனுமதி மறுத்தமைக்கான காரணத்தினையாவது குறைந்தது தெரிவித்திருந்தால் அது பொது நலனிற்கு நன்மையளித்திருக்கும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது. இவ்வாறு செய்வதற்குப் பெரும்பான்மை தவறியமை இந்த விடயத்திற்கு அப்பாலும் நீட்சியடைகின்ற பாரிய விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதுடன் இலங்கைச் சிறுபான்மையினர் தேசிய மட்டத்தில் அற்பமான பாதுகாப்பினையே கொண்டுள்ளனர் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 


பிணங்களின் மீதேறி இனவாத அரசியல் நடத்துவதைப் பார்த்துப் பழகியவர்கள் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள். போரில் காவுகொள்ளப்பட்ட உயிர்களை நினைவுகூர்வதற்குக் கூட தமிழ் மக்களை அனுமதிக்காத அரசு விடுதலைப் புலிகளின் போராளிகளின் கல்லறைகளையும் தரைமட்டமாக்கியே தன் இனவாதப் பசியைத் தீர்த்துக்கொண்டது. காணமற்போன தமது சொந்தங்களுக்கு நீதி கேட்ட அன்னையரைப் பந்தாடிய அரசு இறந்தவர்களையும் மதிக்கவில்லை, போரில் காணமற்போனவர்களையும் கண்டுகொள்ளவில்லை, துயருறும் குடும்பங்களின் துயரைத் துடைக்கவுமில்லை. நேற்றுத் தமிழர்கள், இன்று முஸ்லிம்கள். தொடர்கிறது இனவாதத்தின் இந்த நச்சுச் சுழல். அரசின் குரூரத்தினால் இன்று வலி சுமந்து நிற்கும் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கான தம் கடமையினைச் செய்ய முடியாமற்போன குற்றவுணர்வினால் நிலைகுலைந்து போயுள்ளனர். இது நாம் கூட்டாக எமது வலியினை நிவர்த்திக்கும் எமது ஆற்றலைப் பாதித்து ஒற்றுமைக்கான அனைத்து நம்பிக்கைகளையும் குழிதோண்டிப் புதைக்கின்றது.


கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்த சிறுபான்மையினரின் உடல்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வது “ஒரு நாடு ஒரு சட்டம்” என்று அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள தொனிப் பொருளின் அடிப்படையில் சில அரசியல்வாதிகள் மற்றும் மதகுருமார்களினால் நியாயப்படுத்தி பேசப்பட்டு வருகின்றது. எனினும் சிறுபான்மை மதக் குழுக்கள் இதனை அரசும் அதன் முகவர்களும் தமக்கெதிராகத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பாகுபாடுமிக்க தாக்குதல்களின் ஒரு அங்கமாகவே நோக்குகின்றன. கிழக்கில் இந்து ஆலயங்கள் மற்றும் புனிதத் தலங்கள் பௌத்த மதகுருமார்களினாலும் அவர்களுடன் இணைந்த தீவிரவாதிகளாலும் பௌத்த தொல்லியல் பிரதேசங்களைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவ்வாறான தரப்புகளால் இவான்ஜெலிக்கல் மற்றும் அங்கிலிக்கன் தேவாலயங்கள் மற்றும் பாதிரிமார்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். முஸ்லிம் சமூகம் பல முனைகளிலும் மதகுருமார்கள் மற்றும் ஏனைய ,dthj FOf;fsளின் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இத்தாக்குதல்களை மேற்கொள்ள இஸ்லாமிய தீவிரவாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாத்தல் என்ற தந்திரமான கருத்தியல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஏப்ரல் 11  அன்று வெளியிடப்பட்ட தகனம் மாத்திரம் என்ற விசேட வர்த்தமானியும் இந்த அரசியலின் ஒரு பகுதியாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.


2021 ஆம் ஆண்டில் அரசாங்கம் தகனத்தினை நிறுத்தி உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு ஏற்ப பாதுகாப்பான நல்லடக்கங்களை மேற்கொள்ளும் 190 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் என எம்மால் எதிர்பார்க்க மாத்திரமே முடியும். அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் இலங்கை வைரஸ் பரவலைத் தடுக்க அறிவியல் அடிப்படையில் அமைந்த அணுகுமுறை ஒன்றை பின்பற்றுகின்றது என்பது நிரூபனமாகும். இந்நிலையில் மக்கள் அரசின் மீது நம்பிக்கை கொண்டு தொற்று நோய் அறிகுறிகள் ஏற்படும் நிலையில் மருத்துவ சிகிச்சையினை அணுகுவது பாதுகாப்பானது எனும் உணர்வைப் பெறுவர். இறந்த முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வதுடன் தொடர்புடைய நான்கு கடமைகளில் மூன்றை விட்டுக்கொடுக்க முஸ்லிம்கள் முன்வந்துள்ளனர் என்ற விடயம் அரசாங்கத்துக்கும் பொது மக்கள்க்கும் எத்தி வைக்கப்பட வேண்டும். குளிப்பாட்டுதல்,  உடலைத் துணியால் மூடுதல் (fgdpLjy;;) மற்றும் தொழுகை நடத்துதல் ஆகிய மூன்று கடமைகளும் மேற்கொள்ளப்படாமல் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லடக்கம் தொடர்பான வழிகாட்டல்களைப் கண்டிப்பாகப் பின்பற்றுவதுடன் அரசாங்கத்தின் சுகாதார வழிமுறைகளையும் நல்லடக்கத்தின் போது பேணுவதற்கு முஸ்லிம்கள் தயாராகவுள்ளனர். 


இன்று வரை இலங்கையின் தேசிய வைத்தியசாலை கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட உடல்களைத் தகனம் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது. இவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்டவை முஸ்லிம்களின் சடலங்களாகும். சுகாதார அதிகார சபை நீதி அமைச்சரிடம் கோரிப் பெற்றுக்கொண்ட குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சடலங்களும் தகனம் செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உறவினர்கள் மேற்கொண்ட பொலிஸ் முறைப்பாடுகளில் அவர்களின் அன்புக்குரியவர்களின் இறந்த உடலங்களைத் தகனம் செய்வதற்கு நாம் சம்மதம் வழங்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார அதிகார சபை அவ்வாறு இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வதற்கு நீதவான் நீதிமன்றத்தின் ஆணையைக் கோரியது. மதக் காரணங்களுக்கு அப்பால் இப் போராட்டம் குடும்பங்களின் விருப்பங்களின் பகுதியாகவும் நோக்கப்பட வேண்டும். இறந்தவர்களின் உடல்கள் அரசுக்குச் சொந்தமானவை அல்ல.   


இறந்தவர்களின் குடும்பங்கள் வலிந்த தகனத்துக்கெதிரான போராட்டத்தின் ஓர் அங்கமாகத் தமது அன்புக்குரியவர்களின் உடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கான சம்மதக் கையொப்பத்தை வழங்க மறுக்கின்றன. நோய்த் தடுப்பு என்ற பெயரில் அரசாங்கம் மேற்கொள்ளும் இப்பாவத்தில் பங்குபெற அக்குடும்பங்கள் விரும்பவில்லை. இஸ்லாத்தில் நெருப்பினால் தண்டிப்பது நரகத்துடன் தொடர்புடையதாகும். ஒரு குடும்பத்தின் வலி மற்றும் வேதனைகளை அக்குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருடன் பேசும்போதுதான் உணர்ந்து கொள்ள முடியும். ஒருவரின் பெற்றோர், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் அல்லது உடன் பிறப்புகளின் உடலைக் கைவிடுவது என்பது இலகுவான விடயமல்ல. இறந்தவர்களின் நினைவுகளால் துயருறும் குடும்பங்களின் காயங்களை ஆற்றும் வகையில் நாம் ஒன்றிணைந்து இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தும் மற்றும் அவரின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளும் சிறந்த கலாச்சாரம் மற்றும் மரபினைக் கொண்டுள்ளோம். எனவே சில ஊடகங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் அவ்வுடல்களை கையேற்கப்படாத உடல்கள் என விபரிப்பது தவறானதாகும். 


இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வைத்தியசாலைகளில் நடத்தப்படும் விதம் மிகவும் கொடூரமானது. இரக்க குணம், கருணை மற்றும் ஒழுக்கம் என்பவற்றைக் காண்பிக்க வேண்டிய மற்றும் மனித நடத்தைகளை நன்கு புரிந்துகொள்ளும் தன்மை வாய்ந்த மருத்துவத் துறையினைச் சேர்ந்த சில அதிகாரிகள் இவ்வாறு அதிகார போதை மற்றும் வெறுப்பினால் கேவலமாக நடந்து கொள்வது கவலையளிக்கின்றது. அதே வேளை துணிச்சல்மிக்க சில மருத்துவர்கள் தமது பதவி பறிபோகும் மற்றும் சமூக அங்கீகாரத்தை இழக்கும் அபாய நிலைகளுக்கு மத்தியிலும் கடந்த சில வாரங்களாக உண்மையைப் பேசி வருவதை நான் இங்கு குறிப்பிடாவிட்டால் நான் அநீதி இழைத்தவளாக ஆகி விடுவேன். இது மாத்திரமே எமது மருத்துவ சேவையின் நற்பெயரை காக்க மற்றும் இத்தொற்றுநோயினை எமது நாட்டில் இருந்து எதிர்வரும் வருடத்தில் அகற்ற அனைவரும் சுகாதாரத் துறையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான நம்பிக்கைக் கீற்றாக பலருக்கும் தென்படுகின்றது. 




-சிரீன் அப்துல் சரூர் 

(மனித உரிமைகள் செயற்பாட்டாளர்)       

No comments:

Post a Comment