நேர் கொண்ட பார்வையும் நெளிவு சுழிவுகளும்! - sonakar.com

Post Top Ad

Friday, 4 December 2020

நேர் கொண்ட பார்வையும் நெளிவு சுழிவுகளும்!

 


ஜனாஸா எரிப்புக்கு நீதிமன்ற தலையீட்டில் ஒரு முடிவு வரும் என்று தவமாய்க் காத்திருந்த முஸ்லிம் சமூகம் இப்போது மௌனித்து விட்டது. ஒரு புறத்தில் இலங்கையில் ஜனாஸா எரிப்பு என்ற ஒரு விடயமே இல்லையென்று மறந்து போன வகையில் புதன்கிழமை மயான அமைதி நிலவியது.


இலங்கை முஸ்லிம்களைக் காப்பாற்றுவோம், ஜனாஸா எரிப்பைத் தடுப்போம், அடக்கும் உரிமைகளை மீட்போம் என்றெல்லாம் தலைப்பிட்டு வட்சப் குழுமங்களை ஆரம்பித்து விடிந்தது முதல் இரவு வரை கருத்துப் பரிமாறல்கள், வாத – விவாதங்களில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இன்னொரு புறத்தில் பகிரங்கமாக எதிலும் பங்கெடுக்காவிடினும் கூட தேவைப்படும் உதவிகளை மறைமுகமாக செய்பவர்கள் செய்து கொண்டிருந்தனர்.


வழக்காடப் பணம் சேகரித்து, பல முக்கிய சட்டத்தரணிகளை நமக்காகக் பேச வைத்து, பல மாதங்கள் காத்திருந்து ஈற்றில் அப்படியொரு வழக்கினை விசாரிப்பதற்கான அடிப்படையே இல்லையென நிராகரித்து விட்டது உச்ச நீதிமன்றம். இது தான் நாட்டின் உச்ச நீதிமன்றம் என்பதால் இதற்கு மேல் வேறெங்கும் செல்லவும் முடியாது.


மீளாய்வு, வேறு மாதிரி வழக்காடலாம் என்றும் ஆங்காங்கே பேச்சு நடக்கும் அதேவேளை, போன வாரம் இருந்த நீதிபதிகள் குழு இருந்திருந்தால் செவ்வாயன்று வழக்கை தொடர அனுமதி கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்படுகிறது. அது முற்றாகத் தவறானதா? இல்லையா? எனக்கூற முடியாது. ஏனெனில் மனுதாரர்களின் அடிப்படையை ஆகக்குறைந்தது ஒரு நீதிபதி ஏற்றுக் கொண்டார்.


மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் பெரும்பான்மை நிலைப்பாடு அடிப்படையிலேயே வழக்கின் அடிப்படை நிராகரிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், மாற்று அடிப்படை பற்றி நாம் போதிய கவனம் செலுத்தவில்லையென்பதும் இங்கு சொல்லப்படும் விடயம். பொது மக்கள் சுகாதார – பாதுகாப்பு என்று வரும் போது, சமூகங்களின் சமய உரிமைகளுக்கு முக்கியத்துவமில்லையென பிரதி சட்டமா அதிபர் நெரின் புள்ளே வாதாடிய போது இது குறித்து ஏற்பட்ட சலசலப்பு பலரால் கவனிக்கப்படவில்லை.


தொடர்ச்சியாக, மெத்திகாவின் விஞ்ஞானம் தவறென நிரூபிக்கப்படுவதன் அவசியத்தை கடந்த காலத்தின் அனைத்து கட்டுரைகளிலும் நானும் வலியுறுத்தி வந்திருக்கிறேன். ஜனாஸா எரிப்பு வழக்குத் தொடுனர்களை இணைத்திருந்த வட்சப் குழுமத்திலும், நானறிந்த மனுதாரர்களிடமும் இது பற்றி தனித்தனியாக பேசியிருந்தேன். ஆனாலும், நமது தரப்பு அடிப்படை உரிமை மறுப்பு மற்றும் மனித உரிமை என்ற தளத்திலேயே உணர்வு பூர்வமாக பயணித்தது.


இது தொடர்பில் சோனகர்.கொம் நேரலை நிகழ்வொன்றில் என்னோடு கலந்து கொண்ட, வழக்கில் ஆஜரான இரு சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளான என்.எம். ஷஹீதும், பைசர் முஸ்தபாவும் நீதிமன்றில் ஆஜரான வழக்கறிஞர்கள் தமது வாதங்களை மிகச் சிறப்பாகவே முன் வைத்ததாக சாட்சி பகிர்ந்தனர். அது போலவே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியும் நேரலையில் வைத்து இதற்குச் சாட்சி கூறியதோடு அனைத்து வழக்கறிஞர்களும் சிறப்பான முறையில் பங்களித்ததாகக் கூறியிருந்தார்.


தீர்ப்பு எவ்வாறு வந்திருப்பினும், இவ்வழக்கில் ஆஜராகி சமூக உரிமைக்காகப் போராட முன் வந்த எம்.ஏ. சுமந்திரன் முதல் என்.எம்.ஷஹீத், பைசர் முஸ்தபா, நிசாம் காரியப்பர், விரான் கொரயா, சாலிய பீரிஸ், தவராசா என எல்லோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்தாக வேண்டும். அத்துடன், சூனியமான சூழ்நிலையில் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் வழக்குகளைத் தொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்கள், மனுதாரர்கள் என அனைவருக்கும் சமூகம் நன்றி தெரிவித்தாக வேண்டும்.


ஒரு புறத்தில், அது சமூகக் கடமையும் கூட! ஆயினும், யாரெல்லாம் இவ்வாறான சூழ்நிலைகளில் தம் மீதான கூட்டுப் பொறுப்பையுணர்ந்து, தமது சமூகக் கடமையை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள் என்பது கேள்விக் குறி. ஆதலால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இவ்வாறு தைரியமாக முன் வருபவர்களை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.


சரி, இனியென்ன? என்ற கேள்விக்கு விடை தேடிய போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தலையீடொன்றே தீர்வு தரும் என்று அடித்துக் கூறினார். அதில் பல கேள்விகள் இருக்கின்றன. 


அரசியலால் அதைச் செய்ய முடியும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி முயற்சி செய்தார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். அதனூடாக அமைச்சரவையில் எதிர்ப்பில்லாத சூழல் உருவாகினாலும் கூட அமைச்சரவை திரும்பக் கூறியது இது தொடர்பில் நிபுணர்கள் முடிவெடுத்தாக வேண்டும் என்றாகும்.


நிபுணர்கள் குழுவோ, தாம் முஸ்லிம்களுக்கு எதிராக 20 லட்சம் பேரை வீதிக்கு இறக்க முடியும் என்று சவால் விடும் இனப்பிரிவினை சிந்தனை கொண்டவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். உலகமே அனைத்து சமூகங்களின் சமய உரிமைகளையும் மதிக்கும் போது இலங்கை மாத்திரம் தனித்து நின்று உடலங்களை எரியூட்டி வருகிறது. அது சீனாவைத் திருப்திப் படுத்துவதற்காகவா? அல்லது முஸ்லிம்களை நோகடிப்பதற்காகவா? என்ற கேள்விகள் இரண்டுமே ஒரே பதிலைத் தரக்கூடியவை என்பதால் இனியும் அந்த நிபுணர்கள் குழு மனம் மாறுமா? அல்லது மனம் மாறுவதற்குரிய காரணங்கள் தான் இருக்கின்றனவா? என்றொரு கேள்வியெழும்.


அதற்கடுத்ததாக, நாட்டின் பௌத்த தலைமைத்துவம் விரும்பினால் அல்லது இணக்கம் தெரிவித்தால் இந்த விடயம் சுமுகமாக நடந்து முடிந்து விடும் என்றும் நம்பிக்கை வெளியிடப்படுகிறது. முஸ்லிம்களின் உடலங்கள் எரிக்கப்படுவது அவர்களுக்குத் தெரியாது என்றும் முறைப்படி விளக்க வேண்டும் என்றும் கூட எம் சமூகத்தினர் ஏழு மாதம் கடந்தும் நம்புவதை நினைக்கும் போது அந்த நம்பிக்கையை விமர்சிப்பதில்லையென்றுமாகிறது.


இதற்கிடையில், ஜனாஸாக்களை பொறுப்பேற்க முடியாது என்ற நூதன, அஹிம்சாவழி போராட்டம் ஒன்றை சமூகம் முன்னெடுக்க ஆரம்பித்திருந்தது. விளைவு, கொழும்பில் உடலங்கள் குவிந்தன அது போல கண்டியிலும் ஒரு ஜனாஸா கை விடப்பட்டது. அவை செய்திகளாகின, மறுபுறத்தில் இரு வேறு விடயங்கள் நடந்தேறின. ஒன்று, இறக்கும் அனைவருக்கும் தாமே இலவசமாக பெட்டி தரப் போவதாக ஒரு முஸ்லிம் நபர் கிளம்பியிருந்தார். இரண்டாவது, அரசாங்கமே செலவைப் பொறுப்பேற்கும் என ஜனாதிபதி நேரடி அறிவிப்பைச் செய்தார்.


ஆக, ஜனாதிபதி பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் தான் இருக்கிறார். முஸ்லிம்களின் நூதன போராட்டத்தை அதிகாரத்தால் முறியடிக்க முடியும் என்று அவர் நம்புகிறாரே தவிர மக்களின் உணர்வுகளுக்கு செவிமடுக்க ஆயத்தமில்லையென்பதையே அந்த அதிரடி அறிவிப்பு புலப்படுத்தியது. 2014 அளுத்கம வன்முறை நடந்தது கூட தமக்குத் தெரியாது என்று ராஜபக்ச சகோதரர்கள் சில நாட்கள் அமைதியாக இருந்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கும் போது இந்த அறிவிப்பின் வேகம் முன் சொன்னதை நிரூபிக்கிறது.


இந்நிலையில், இலவச பெட்டி கொடுக்கப் போவதாக முன் வந்த நபரோடும் உரையாடியிருந்தேன். ஒரு மணி நேர உரையாடலில் புரிந்து கொண்டது என்னவென்றால், வாழ்க்கையில் பல வற்றை இழந்த நிலையில் தனக்குமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது, அதைக் கட்டியெழுப்பி அதனூடாக தமது பொருளாதார தேவைகளை நிறைவேற்றக் கூடிய வாய்பாகவே அவர் இந்த சந்தர்ப்பத்தைப் பார்க்கிறார். என்றாலும் கூட, சமூகம் மீதான கூட்டுப் பொறுப்பு நிமித்தம் உங்கள் யோசனையை சற்றுத் தள்ளி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.


தனது அறிவிப்பின் பின், அது தொடர்பில் சிங்கள ஊடகங்களில் தகவல் வெளியானதும் பாதுகாப்புத் துறை, பௌத்த பீடங்கள் என உயர் இடங்களிலிருந்து தாம் தொடர்பு கொள்ளப்படுவதாக ஆனந்தப்பட்டுக் கொண்ட அவர், அதனை மீள் பரிசீலிப்பார் என்றே நம்புவோம். ஆயினும் கூட, அரசியல் பிரிவினையில் அவரை முஸ்லிமாக மாத்திரம் பார்க்காமல் சராசரி குடிமகன் என்ற அடிப்படையில் பார்க்குமிடத்து இந்த கலாச்சாரம் மாறப்போவதில்லையென்பதையும் உறுதியாகச் சொல்லலாம்.


தமக்கொரு 'வாசி' (பலன்) கிடைக்குமென்றால் தனி மனிதனாக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது சமூகம். 2012 காலத்தில் என்னோடு நல்ல நட்புடன் பழகி, தம்புல்ல பள்ளிவாசல் தாக்குதல் விவகாரத்தை ஆவணப்படுத்துவதற்கும் உதவியிருந்த ஒரு அரசியல்வாதி, மஹிந்தவின் மேடையில் ஏறி 'இந்நாட்டில் சிங்களவர்களே பேரினம், முஸ்லிம்கள் அடங்கி வாழப் பழகிக்கொள்ள வேண்டும்' என்று கூறியதை என் மனம் ஏற்க மறுத்தது. அன்றிலிருந்து அவரது தொடர்பை அறுத்துக் கொண்டேன்.


பௌத்த – சிங்கள அடையாளமில்லாததால் ஏனையவர்கள் உணர்வுகளை அடக்கி, உரிமைகளை விட்டுக் கொடுத்துத் தான் வாழ வேண்டும் என்ற அடிப்படையை ஊட்டி வளர்க்க முயற்சிப்பவர் தன்னை ஜனநாயக சோசலிச குடியரசின் குடிமகன் என்று சொல்லவே தகுதியற்றவராகிறார். அவ்வாறான ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப, பல நூற்றாண்டுகளாக அன்னிய ஆட்சிக்குட்பட்டிருந்த தேசத்தில் எத்தனையோ பேரின் தியாகங்கள் அடங்கியிருக்றிது. ஆயினும், மேலாதிக்கவாத சிந்தனையை ஆதரிப்பதே தம் பிழைப்புக்கான வழியெனவும் சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.


இவ்வாறான சூழலிலேயே சேர்ந்திருப்பதும் தருவதைக் கொண்டு பயனடைவதும் என்ற வட்டத்திற்குள் இன்று முஸ்லிம் சமூகம் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போதைய நீதியமைச்சர் ஒரு கட்டத்தில் 'அம்பானைக்கு கிடைக்கும்' என்று சொன்ன போது அவரின் மன நிலையும் அவ்வாறே இருந்தது. ஆயினும், பொதுத் தளத்தில் அதுவும் நீதியமைச்சரான பின்னர், சர்வதேச பார்வையும் விழும் நிலையில் தன்னை ஜனநாயகவாதியாகக் காட்டிக் கொள்வதற்கு அவர் பெரும் சிரத்தையெடுத்து வருகிறார்.


நாடாளுமன்றில் எழும் குற்றச்சாட்டுகளுக்கு அரசு சார்ந்து பதிலளிக்கும் அவர், ஜனாஸா எரிப்புக்கான முடிவு அரசியல் பின்னணியில் எடுக்கப்படவில்லையெனவும் அது விஞ்ஞான ரீதியாகவே எடுக்கப்பட்டது எனவும் கூறுகிறார். எனினும், தனது பேஸ்புக் பக்கத்தில் சர்வதேச நடைமுறைக்குப் புறம்பாக அடக்குமுறை திணிக்கப்படுவதாகவும் சுதந்திரமாக கருத்து வெளியிடுகிறார். இவற்றை சரியான முறையில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, யார் – யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது இவாந்கள் ஏன் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியெழும்.


அதற்காக, நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோருவதும் அதிகப்படியான நிர்ப்பந்தம். ஏனெனில், அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியில்லை. அவர் விலகி விடுவதால் எந்த மாற்றமும் வரப் போவதுமில்லை. இது தொடர்பில், வழக்கில் ஆஜராகி வாதாடிய முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபாவிடம் கேட்ட போது, நீதிமன்ற தீர்ப்பொன்றின் பின் அவ்விடயத்தைப் பற்றி ஆய்வு செய்ய முடியாத சூழ்நிலையிருப்பதாகவும் அரசியல் தலையீட்டை நிரூபிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.


எனினும், முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களின் ஒற்றுமை அவசியம் என தெரிவித்த அவர், அதற்கான முயற்சியில் ஈடுபடப் போவதாகவும் என்னிடம் வாக்குறுதியளித்தார். அவ்வாறே நம்புவோம்! ஆனாலும் எந்த முஸ்லிம் தலைமைகளை அவரால் இணைக்க முடியம் அல்லது யாரால் தான் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியிருக்கிறது.


உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் போது பட்டப்பகலில் தௌ;ளத் தெளிவான நம்பிக்கைத் துரோகிகளாகக் காட்சியளித்த, கட்சி தாவிய ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் தான் தம்மை நியாயப்படுத்தக் காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஜனாஸா எரிப்பை நீதிமன்றம் ஊடாகத் தடுத்தாலும் கூட அதற்கு பசில் ராஜபக்சவினாலேயே அது நடந்தது என்றும், அதற்காகவே தாம் கட்சி தாவியதாகவும் சொல்லிக் கொள்ளவும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.


அதுவும் நடக்கவில்லை, அரசியல் தீர்வொன்றாவது கிடைத்தால் அதுவும் தாம் கட்சி தாவியதால் தான் நடந்தது என்று சொல்லிக் கொண்டாடவும் தயாராக இருந்தார்கள், அதற்கும் சாத்தியமில்லாத சூழ்நிலையில் பெரும்பாலனர்வகள் தமது ஊர்ப் பக்கம் போகாமல், கொரோனாவின் உபயத்தால் கொழும்பில் முகாமிட்டுள்ளார்ள். அவர்களுக்கு வாக்களித்த மக்களோ தம்மை ஏமாற்றிய அரசியல்வாதிகளுக்கு எதிராகக் கூட கேள்வி கேட்பதைத் தவிர்த்துக் கொள்கிறார்கள்.


யாரோ – எவரோ போராடி ஏதாவது தீர்வு வரட்டும் அதனைத் தம் தலைவனின் சாதனையாக்கிக் கொள்ளலாம் என்று அவர்களின் சமூக வலைத்தள தொண்டர் படை காத்திருக்கிறது. இதுவெல்லாம் நடப்பது முஸ்லிம் சமூகத்துக்குள் என்கின்ற நிலையில், இங்கு நாம் எந்த ஒற்றுமை, எந்த அடைவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் சந்தேகம் எழும். அந்த அளவுக்கு சமூகம் தன் வகிபாகத்தைச் சுருக்கிக் கொண்டுள்ளது. அதனால் கள்ள மௌனமே நல்லதென்றும் நினைக்கிறது. இதில் அவ்வப்போது, துருக்கி தொப்பி போராட்டத்தை நினைவு படுத்திப் பேசிக் கொள்வதும் ஒரு ரகம்.


எது எவ்வாறாயினும், முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு அவசர முடிவொன்று இல்லை. ஏனெனில், இது ஒரு நிகழ்ச்சி நிரலின் அங்கம் மாத்திரமே. இந்நாட்டில் சிறப்புச் சலுகைகளையும் உரிமைகளையும் கொண்டிருந்த இச்சமூகம் தமக்குத் தாமே தேடிக் கொண்ட அழிவுகளுள் இதுவும் ஒன்றெனக் கூறுவது மிகையாகாது. அதற்கு யார் பொறுப்பென்று ஒரு தனி நபரிடம் கேட்டால், அவர் ஒரு அரசியல்வாதியை விரல் நீட்டித் தப்பிக் கொள்வார். ஆனால், ஒவ்வொரு முஸ்லிம் குடிமகனும் இன்றைய நிலைக்குப் பொறுப்பேற்றாக வேண்டும்.


யுத்த காலத்தில் நமக்கு நாம் உருவாக்கிக் கொண்ட வாழ்க்கைக் கலாச்சாரம் எந்த அளவில் மற்றவர்களைப் பாதித்தது என்பது பற்றி இன்றும் நாம் சிந்திக்கத் தவறுகிறோம். நமது சமய உரிமைகள் என்கிற பெயரிலும், முஸ்லிம் தனித்துவ அரசியல் என்கிற போர்வையிலும் நாம் செய்து கொண்ட அரசியல் வியாபாரத்தின் வடிவங்களை மறந்து போகிறோம். 


தலைவர்களை மிஞ்சிய சிஷ்யர்களாக ஒரு சிலர் கட்சி தாவி விட்டார்கள் என்று முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சொல்வதையும் நம்புகிறோம். அடிப்படைவாதிகளை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்கிற வாக்குறுதிக்கமைவாக ஹக்கீமையும் - ரிசாதையும் சேர்க்கவில்லையே என்று கெஹலிய சொல்லும் போது அதில் நியாயமிருப்பதாக சிங்கள மக்களும் நம்ப வைக்கப்படுகிறார்கள். போதாததுக்கு, நீதிமன்ற தலையீட்டை நிறுத்தி விட்டு அமைச்சரவையில் அனுமதி வழங்குவதற்காகவே அரசாங்கம் இப்படிச் செய்துள்ளது என்று சொல்வதையும் மக்கள் நம்புகிறார்கள்.


இப்படி நம்பக்கூடாத பலவற்றை நம்பும் நாம், ஒற்றுமையே பலம் எனம் நம்ப வேண்டிய விடயத்தை நம்ப மறுக்கிறோம்!


 










Irfan Iqbal
Chief Editor - Sonakar.com

No comments:

Post a Comment