இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்த முஸ்லிம்களின் உடலங்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டு வருவதால் நாமடைந்த வேதனைகள் சொல்லியடங்காதவை. இருப்பினும், ஜனாஸாக்களை அடக்குவதை அனுமதிப்பதற்கு அமைச்சரவை இணங்கியிருப்பதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஊடாக தகவல் வெளியிடப்பட்டதை அறிந்து மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது என்று தெரிவிக்கிறார் முன்னால் மேல் மாகாண ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி .
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நேரத்தில், இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். ஆயினும், இந்த வார்த்தைகளினால் நாம் அடைந்துள்ள சந்தோசத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடுவதை விட அவதானம் தேவைப்படுகிறது. முன்னர், சாய்ந்தமருது பிரதேச சபைக்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டவுடன் இடம்பெற்ற கொண்டாட்டங்களையும் இரு தினங்களில் இரத்துச் செய்யப்பட்ட சம்பவத்தையும் பின் இரத்துச் செய்யப்பட்ட சம்பவத்தையும் நினைவு கூறுவது தகும்.
எங்கு மரணித்தாலும் வேறு எங்கோ கொண்டு சென்று அடக்கம் செய்வதென்பதும் இலகுவான காரியமோ எல்லோருக்கும் முடியுமான விடயமோ இல்லை. அதில் இருக்கும் சிக்கல்கள், பொருளாதார விடயங்களும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். பிரயாண நேரம், போக்குவரத்து வசதி என பல்வேறு விடயங்கள் இதில் உள்ளன. எனவே, அவதானத்துடன் இந்த விடயத்தை இன்னும் கையாண்டு, முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை, முன்னர் போன்றே இனியும் அனுபவிக்கும் சூழ்நிலையை மீளப்பெறுவதற்கு நாம் உழைக்க வேண்டியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment