கழுதை தேய்ந்து கட்டெறும்பானது! - sonakar.com

Post Top Ad

Saturday, 28 November 2020

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது!

 


மாற்றத்தைத் தேடாத சமூகத்துக்கு அந்த மாற்றம் வந்து சேரப்போவதுமில்லையென்பது இன்றைய தேதியில் ஒவ்வொரு இலங்கை முஸ்லிமும் களங்கண்டு பட்டறிந்துள்ள விடயம்.


சமூக மட்டத்திலான சிந்தனைப் புரட்சி என்று சொல்வது மிகையாக இருக்குமாக இருந்தால் அதனை மாற்றம் என்று அடக்கி வாசித்துக் கொள்ளலாம். அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக ஒடுக்கப்படும் சமூகம், அதுவும் நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள ஒரு நிலத்தில், சிறுபான்மையாக வாழும் சூழலில் காலத்துக்குக் காலம் தம்மைத் தாமே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் கட்டாயமுள்ளது.


ஆயினும், துரதிஷ்டவசமாக தனி மனித பொறுப்புகள் துறக்கப்பட்டு அவை வேறு யாருடையதோ தலைகளில் ஏற்றி வைக்கப்படுகிறது. இந்த வழக்கத்துக்கு இப்போது 20 வயது தாண்டி விட்டது. இதை மக்கள் மாற்றியாக வேண்டிய கால கட்டத்தில் கடந்த காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை இற்றையை விட வெகுவாகக் குறைவாக இருந்த 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், அதாவது இலங்கையில் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 197,800 (census 1891) ஆக இருந்த கால கட்டத்தில் சமூகம் தமக்கு தலைமை தாங்கும்படி யாரையும் கோரவில்லை. மாறாக அக்கால சோனக சமூகத் தலைவர்கள் தாமாக முன் வந்து, தன்நலமற்ற ரீதியில் இச்சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், சமூக அபிவிருத்திக்காகவும் கடுமையாக உழைத்தார்கள்.


முஸ்லிம் சமூகத்தின் கல்வி அபிவிருத்தியாக இருக்கட்டும், அரசியல் ரீதியாக சமூகம் எதிர் நோக்கிய பிரச்சினைகளாக இருக்கட்டும், அவற்றைத் தமது பொறுப்பாக உணர்ந்து அதற்கான தகுதியிருந்தவர்கள் தாமாக முன் வந்து உழைத்தார்கள். அவ்வாறான பெயர்களையே இன்றும் நமது சமூகம் நினைவில் வைத்திருக்கிறது.


இதனைத் தற்காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தோமாக இருந்தால், விஞ்ஞானம் என்ற போர்வையில் சமூகம் நோகடிக்கப்பட்டு, ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நாம் வைரலொஜிஸ்ட் எங்கே, ஹைட்ரலொஜிஸ்ட் எங்கே? என்று தேடிக் கொண்டிருக்கிறோம். நானறிந்த வரையில் சமூகத்துக்குள் அவ்வாறான நிபுணர்கள் தொடர்ந்தும் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


அக்காலத்தில், ஒரு பொன் இராமநாதன், இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதுவித தனித்துவமும் இல்லையென ஆங்கிலேயரிடம் ஆவணப்படுத்த முற்பட்ட போது, ஒரு ஐ.எல்.எம் அப்துல் அசீஸ் தானாக முன் வந்து இயங்கி அதை முறியடித்தார்.


இக்காலத்தில், அவ்வாறே மனமிருந்தாலும் கூட அதைத்தாண்டிய அச்சமும் தயக்கமும் இருக்கிறது. காரணம், இன்றைய அரசியல் சூழ்நிலை. தமக்காகப் போராடிய தலைமைகளை இந்த சமூகம் எத்தனை தூரம் நினைவில் வைத்திருக்கிறது அல்லது மதித்திருக்கிறது? என்பதன் கடந்த கால அனுபவமும் இன்றைய தயக்கத்தின் காரணமாக இருக்கக் கூடும்.


ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் மக்கள் தயவால் மாதாந்தம் சம்பளம் பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட அளந்தளந்தே பேசுகிறார்கள். பேசியே ஆக வேண்டும் எனும் சூழ்நிலையில் பேச வருபவர்கள் கூட, நாளை திடீரென அரசின் பக்கம் சென்று விடுவார்கள் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.


அக்கால தலைமுறையினரின் தேசப்பற்றும் சமூகப் பற்றும் தேய்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்க, இக்கால நிலை தேய்ந்து என்ன நிலையை அடையும் என்பதை எண்ணிப்பார்க்கக் கூச்சமாக இருக்கிறது.


இன மையக் கொள்கையில் இயங்கும் இலங்கை அரசியலில் இன ரீதியிலான அரசியலை முன்னெடுப்பதென்பது அதனூடான சமூக பாதுகாப்பு மற்றும் உரிமை பேணல்களின் அடிப்படைகளை கொண்டியங்க வேண்டியுள்ளது. எனினும், சமூக பாதுகாப்பு எதை வலியுறுத்துகிறது, உரிமை பேணல்கள் எவ்வாறு வலுவிழந்து போயுள்ளது என்பதை மக்கள் சிந்தித்தாக வேண்டும்.


காலத்துக்குக் காலம் இச்சமூகத்துக்குத் தேவைப்படும் சிந்தனைப் புரட்சி, இறுதியாக மர்ஹும் அஷ்ரபினால் முன் வைக்கப்பட்ட முஸ்லிம் தனித்துவ அரசியல் என்ற அத்தியாயத்தைக் கண்டு, அதனை வளர்த்தெடுத்தது. மக்களின் முழுமையான அர்ப்;பணிப்பு இருந்ததனால் அதனூடாக அஷ்ரப் தம்மைப் 'பேரம்' பேசும் சக்தியாக தேசிய அரசியலில் உருவகப்படுத்திக் கொண்டார்.


அந்த ஒற்றைக் கோணத்தை விட்டு மாற்றி யோசிக்கத் தெரியாத தற்காலத் தலைவர்கள், மேலாதிக்க அரசியல் கொள்கையாளர்களிடம் பேரம் பேசி தம்மை அடகு வைத்ததாகக் காட்டிக் கொள்ள படாத பாடு படுகிறார்கள்.


ஒரு பக்கத்தில் அபிவிருத்தி அரசியல் எனும் மாயையைக் காட்டி மக்களின் சிந்தனை எழுச்சியை மடக்கி வரும் இந்த அரசியல் சக்திகள் இப்போது காலாகாலமாக முஸ்லிம் சமூகம் அனுபவித்து வந்த அடிப்படை சமய உரிமை மறுப்பைக் கூடத் தடுக்க முடியாத கையறு நிலையில் இருக்கிறது.


அதனை விடவும் ஒரு படி மேலே சென்றுள்ள இன்றைய முஸ்லிம் சமூகம், கொரோனா பரவும் என மூடி வைத்திருக்கும் பள்ளிவாசல்களைத் திறந்து, மிம்பரில் உருவப் படம் பொறித்த பதாகை கட்டி துஆ கேட்கவும் செய்கிறது. அரசியல் தலைவர்கள் மீதான பற்றைக் காட்டுவதற்கு துஆ கேட்பது வேறு – ஆனால் அதனை பள்ளிவாசல்களுக்குள் சென்று தான் கேட்டாக வேண்டும், அதுவும் உருவம் பொறித்த பதாகை கட்டித்தான் செய்ய வேண்டும் என்று இந்த கேடு கெட்ட அரசியல் சென்றிருக்கும் நிலையைத் தவறென சுட்டிக்காட்ட முடியாத நிலையில் தான, இன்னும் நான்கு வருடங்களில், ஆரம்பித்து நூறு வருடங்களைத் தொடப் போகும் மார்க்க அறிஞர் சபையும் இருக்கிறது.


இது ஆன்மீகப் பக்கத்திலும் இந்த சமூகம் எந்த அளவு தேய்ந்து போயுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.


மறுபுறத்தில், சமூகத்தின் இயல்பான சிந்தனை எங்கே நிற்கிறது என்று பார்த்தால், தேசத்துக்காகப் போராடி வெள்ளையர்களிடம் தேசத்துரோகிகளாகப் பட்டம் பெற்றோம், அதற்கு முந்தைய ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் சோனகர் படையணியென ஒரு படையாகவே இருந்து தேசத்தைக் காத்தோம், போர்த்துக்கீயர் நாட்டைப் பிடிக்க வந்தவேளையில் முழு மூச்சாக நின்று சண்டையிட்டு தேச எல்லையைப் பாதுகாத்தோம் ஆனால் இன்று நாமுண்டு நம் பாடுண்டு என மாறிப் போனோம்.


அந்த அளவு சுயநலம் மேலோங்கிப் போயுள்ள இந்த சமூகத்தைக் கூறு போடுவது ஒன்றும் அத்தனை கடினமான விடயமில்லை. அந்த செயற்பாட்டை செவ்வென செய்து நிறைவேற்ற அரசியல் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கொள்கை இயக்கப் பிளவுகள். வீட்டில் தொழும் போது கூட உருவம் பொறித்த ஆடைகளை அணிவதைத் தவிர்த்துக் கொள்ளும் சமூகம் எவ்வாறு இன்று பள்ளிவாசலுக்குள் உருவப் படத்தை வைத்து பூஜை செய்ய அனுமதித்துள்ளதோ அதற்கு மறு புறத்தில் ஏனைய மதங்களைப் பின்பற்றுவோருக்கிடையில் இருக்கும் சாதிப் பிளவுகளுக்கு சற்றும் குறையாத வகையில் கொள்கை இயக்கங்களால் பிரிந்து போய் நிற்கிறது.


சட்டிக்குள் போடப்பட்ட நண்டுகள் ஒன்றின் காலை மற்றது பிடித்திழுத்து, எந்த நண்டும் வெளிவராமல் தேங்கிக் கிடப்பது போல் இந்த கொள்கை இயக்கங்களின் வேசங்களையும் விளையாட்டுக்களையும் தெரிந்தும் அனுமதித்து வளர்த்துக் கொண்டுள்ளது இச்சமூகம். 'இலங்கை தேசத்தில் முஸ்லிம்கள்' என்ற வரலாறு தனித்துவம் மிக்கதாயினும் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் பிளவுகள் நாளை இந்த தேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்களா? என்ற கேள்வியை உருவாக்கப் போவது திண்ணம்.


இத்தனை நடந்தும், இன்றும் ஜுடாயிசம் ஒழிக என்று பேஸ்புக்கில் கோசம் போட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு கூட்டம், தப்பித் தவறியேனும் ராஜபக்ச அரசுக்கு எதிராக வாய் திறக்காது மௌனம் காக்கிறது. அவ்வளவு ஏன் எதற்கெடுத்தாலும் ஜனாதிபதிக்கு சிங்களத்தில் கடிதம் எழுதும் விற்பன்னர்கள் கூட பள்ளிவாசலுக்குள் உருவப்படம் வைத்து வழிபடுவதை அவர்களது பாசையில் 'பித்அத்' என வர்ணிக்கக் கூடத் தவறியுள்ளது. 


ஆக, அதிகார வர்க்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. சிதைந்து போயிருக்கும் இச்சமூகத்தை மேலும் உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்துவது மிகவும் இலகுவான காரியம் என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனை மார்க்கத்தின் பெயரால் நியாயப்படுத்துவதற்கு இருக்கவே இருக்கிறார்கள் எங்கள் ஞானிகள்.


நியாயக் கோட்டில் சிந்திக்க மறுக்கும் இச்சமூகத்தைக் கட்டியாள்பவர்கள் எல்லாம் எல்லா இடங்களிலும் வாழ்நாள் தலைவர்களாகத் தான் இருக்கிறார்கள். அரசியலுக்கும் - ஆன்மீகத்துக்கும் கூட அது பொருந்தும். அமெரிக்காவில் நான்கு ஜனாதிபதிகள் மாறி விட்டார்கள் ஆனாலும் இவனுகள் கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கிறானுகள் என்கிற உண்மை சமூகத்துக்குத் தெரியாமலில்லை. ஆனாலும், பேச மறுக்கிறது, சிந்திக்க மறுக்கிறது.


தெருவுக்கு ஒரு எம்.பி வேண்டும் என்ற சிந்தனையை அடைந்துள்ள சமூகம், எதையாவது பேசி, எதற்கு வீண் வம்பு என்று நினைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆனாலும், இன்றைய நமது செயற்பாடுகள் நாளைய நமது தலைமுறைகளின் இருப்பையும் பாதுகாத்தாக வேண்டும் என்ற அடிப்படைச் சிந்தனை அவசியப்படுகிறது.


ஆம்! எங்களுக்கு அரபுப் பெயர்கள் இருக்கிறது. அதற்காக எந்தவொரு அரபு நாடும் ஓடி வாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று 2 மில்லியன் இலங்கை முஸ்லிம்களுக்கும் தஞ்சம் தரப் போவதில்லை. அவ்வளவு ஏன்? இன்றைய நிலையில் கடமைக்காக கடிதம் அனுப்பியதை விடுத்து மேலதிகாக அரசுக்கு எந்த அழுத்தத்தைக் கொடுக்கவும் எந்தவொரு அரபு நாடும் விரும்பவுமில்லை.


இவ்வாறிருக்க, அரபு பெயர்களை வைத்துக் கொண்டாலும் இதுவே நம் தேசமாக இருக்கப் போகிறது. சில ஆயிரங்களில் எம் சமூகத்தார் தொழில்வாய்ப்பு நிமித்தம் மத்திய கிழக்கில் வாழ்கிறார்கள். மேலும் சில ஆயிரங்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு, தொழில் விருத்தி போன்ற இன்னும் சில காரணங்களுக்காக மேலை நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். இன்னும் சில ஆயிரங்கள் அவனாகப் பிடித்து அனுப்பும் வரை வாழுவோம் என தூர கிழக்கு நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றன. 


ஆனாலும், வெளிநாடுகளில் வாழும் எல்லோருக்கும் இருக்கும் பொதுப் பண்பு என்னவெனில், அவர்கள் உள்நாட்டில் வாழ்பவர்களை விடவும் அதிகமாக தேசத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு வகையில் அதிகம் கவலை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். உள்நாட்டில் இருப்பவர்களை விட அதிகம் செய்திகளைப் பார்க்கிறார்கள், அரசியல் நகர்வுகளை அவதானிக்கிறார்கள். ஊடகங்களை மேய்ந்து நாட்டின் நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.


இந்த பற்றின் பின்னணியில் 90 வீதமானவர்களுக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் நாமும் நாடு திரும்பியே ஆக வேண்டும். அதன் போது, நாம் வாழ்வதற்கு ஏற்ப நல்ல சூழ்நிலையில் நாடு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அக்கரைக்கு இக்கரை பச்சையெனும் அடிப்படையில் உள்நாட்டில் வாழும் சிலர் எப்போது இந்த நாட்டை விட்டுப் போவது என்றும் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 


அண்மைக்கால இனவாத நெருக்கடிகளினால் பாரிய அளவில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இச்சமூகத்திற்கான விடிவு காலத்தை நிர்ணயித்து, விமோசனத்தைத் தர வல்ல இறைவனிடமே நாம் தொடர்ந்தும் கையேந்த வேண்டும். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லையாயினும் கூட இந்தப் பிரபஞ்சத்தை நமக்காகவே மிக விரிவாகப் படைத்துள்ள இறைவன் இன்னும் நம்மை சிந்தித்துச் செயலாற்றவும் மாற்றத்தைக் காணவும் வழி விட்டிருக்கிறான். நமக்குத் தான் தயக்கம்!


கொரோனா பெருந்தொற்று வந்து 8 மாதங்கள் கடந்து விட்டது. இது வரை ஆகாயப்பரப்பிலிருந்து தடுப்பு மருந்து எதுவும் கொட்டவில்லை. மலையொன்றைக் குடைந்து எடுப்பதற்கு எந்த மந்திர மூலிகையும் இல்லை. கடல் தண்ணீர் எடுத்து, மந்திரித்து இடுப்பில் கட்டுவதற்கு எந்த நாடாவும் இல்லை, சுவர் மூலையில் தொங்க விடுவதற்கு இந்த இசுமும் இல்லை. மாறாக, மனிதர்கள் நமக்குத் தந்திருக்கும் அறிவைப் பயன்படுத்தித் தீர்வைத் தேடிக் கொள்ளும்படியே இறைவன் வழி விட்டிருக்கிறான்.


இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், பைசர் – பயோன்டெக் மற்றும் மொடேர்னா நிறுவனங்கள் தடுப்பூசிகளைத் தயார் செய்து பரிசோதித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அறிவியலில் நமது பங்கு என்ன இருக்கிறது என்றும் சிந்திக்கக் கடமைப்படுகிறோம். பயோன்டெக் தடுப்பூசிக்குப் பின்னால் துருக்கியர் இருக்கிறார்கள் என்று ஆறுதலடையாது உலக அறிவியலில் நமது விகிதாசாரம் என்னவென்றும் சிந்திக்கக் கடமைப்படுகிறோம்.


கொரோனா தனிமைப்படுத்தலில் தலைநகரில் வாழும் மக்கள் வாழ்வாதாரமிழந்து தவிக்கிறார்கள். இந்த வேளையில் சமூகமாக நமது கூட்டுப் பொறுப்பை எந்த அளவில் நிறைவேற்றியிருக்கிறோம் என்று சிந்திக்க நிர்ப்பந்திக்கப் படுகிறோம். கோடி கோடியாகப் பணம் வைத்திருக்கும் முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவை தம்மிடம் இருக்கும் நிதி வளத்தை அசைப்பதற்கு தயங்கிக் கொண்டுமிருக்கின்றன.


நாளை சூழ்நிலை வழமைக்குத் திரும்பி விட்டால், மறு தினமே நிதி திரட்டலுக்கு அதே நிறுவனங்கள் வந்துவிடும் என்பதிலும் ஐயமில்லை. ஒரு புறம் நிலைமை இவ்வாறிருக்க, மறுபுறம் கணக்கில் வைக்க முடியாத ஒழுங்கின்றி ஜனாஸாக்களின் எரியூட்டல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


தன் தந்தையின் - தாயின் - சகோதர – சகோதரியின் ஜனாஸாவுக்கு இறுதிக் கடமையொன்றைச் செய்ய முடியாது தவித்து தமது கவலைகளை சமூகத்தின்பால் ஏக்கமாக மக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசியல் மற்றும் மார்க்கத் தலைமைகள் ஒன்றுமே நடக்காதது போல் நமட்டு;ப் புன்னகையுடன் பேஸ்புக்கில் நேரலை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 


பெருந்தொற்றை விட்டாலும், கடந்த எட்டு வருடங்களாக சுற்றி வளைத்து நெருக்கிக் கொண்டிருந்த சூழலினால் ஏற்படக் கூடிய எதிர்கால விளைவுகளுக்குத் தயாராகாத நிலையிலேயே இன்று நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். இனியும் தயாராகா விட்டால் அடுத்தடுத்த தசாப்தங்களிலும் தவழ்ந்து கொண்டு தான் இருக்கப் போகிறோம். 


சமூகக் கட்டுமானம் - சிந்தனைப் பரிமாணம் மற்றும் அரசியல் செயற்திறன் என பல்வேறு தளங்களில் மாற்றம் கட்டாயம்!












- Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment