கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்போரின் உடலங்களை எரிப்பது மாத்திரமே தீர்வென இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஆறு மாதங்களில் மீள் பரிசீலனை செய்வதற்கு இணங்கப்பட்டதன் அடிப்படையில் அதனை மீள் பரிசீலனை செய்வதற்கான 'வேண்டுகோள்' முன் வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் விளக்கமளித்துள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.
இவ்விவகாரத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்தே கட்டாய எரிப்பு முடிவு எடுக்கப்பட்டதாகவும், நீதியமைச்சர் அலி சப்ரியின் மனசாட்சிக்குத் அது தெளிவாகத் தெரியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியிருந்ததன் பின்னணியிலேயே நீதியமைச்சர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
இதேவேளை, உடலங்கள் எரிக்கப்படுவது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியெனவும், ஏலவே 9 உடல்களை எரித்துள்ள நிலையில் இன்று தாம் இற்தாலும், நீதியமைச்சர் இறந்தாலும் எரிக்கப்படும் நிலையிருப்பதாகவும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் விசனம் வெளியிட்டிருந்ததோடு மீள் பரிசிலனை செய்ய குழுவொன்றை அமைக்குமாறு ஆறு மாதங்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பதிலளித்த சுகாதார அமைச்சர், மார்ச் அளவில் பல மருத்துவ நிபுணர்கள் கூடியே இம்முடிவை எட்டியிருந்ததாகவும் அதனை தற்போது மீள் பரிசீலனை செய்வதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கமளித்தார்.
இதேவேளை, மார்ச் மாத இறுதியில் உடலங்களை எரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் 'இனந்தெரியாத அச்சத்தினால்' மேற்கொள்ளப்பட்டதாக அப்போது விளக்கமளிக்கப்பட்டிருந்ததாகவும், ஆறு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என அப்போதே தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் நீதியமைச்சர் தனதுரையில் விளக்கமளித்திருந்ததோடு இவ்விடயத்தை அரசியலாக்குவது நியாயமில்லையெனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment