பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஜும்ஆத் தொழுகைக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு முஸ்லிம் எம்.பிக்கள் சிலர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், இம்ரான் மஹ்ரூப், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம், ரவூப் ஹக்கீம், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் ஒப்பமிட்டு சபாநாயகருக்கு கையளித்துள்ள கடித்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சகல முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை தினத்தில் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டியது சமய ரீதியான கடமையொன்று என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
இதனடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ளும் பொருட்டு நேர ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதுவரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதை தாங்கள் கவனத்தில் கொண்டு எதிர் காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போதும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- SM Sabry
No comments:
Post a Comment