அண்மையில் இந்திய பத்திரிகையான "ஹிந்து" (THE HINDU) வில் சிறிய ஆங்கில பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் ஜுவைரியா முஹிதீன் என்ற புத்தள பெண்மணி.
30 வருடங்களுக்கு முன் மன்னாரில் இருந்து தன் பெற்றோர், உடன் பிறப்புக்களுடன் துப்பாக்கி முனையில் தமிழ் புலிகளினால் பூர்வீக வாழ்விடத்தை விட்டு 1990ல் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டவர் இவர். வரும் போது இவர் போன்றோருக்கு ஒரே ஒரு நம்பிக்கைதான் இருந்திருக்க வேண்டும், அதாவது நம்மை போன்றவர்கள் (முஸ்லீம்) உயிருக்கு ஆபத்து இல்லாமல் எம்மை வரவேற்று பாதுகாப்பார்கள் என்பது தான் அது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
புத்தளம் ஆதரவு சமூகம் (Host community) இருகை நீட்டி வந்தோரை வரவேற்றது, முடிந்ததை எல்லாம் புது வரவுகளோடு பகிர்ந்து கொண்டது. இருப்பினும், "தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு" என்ற உள்ளூர் முதுமொழிக் கிணங்க, காலம் செல்லச் செல்ல நிலைமைகள் சற்று மாறுதலைக் கண்டன. இதற்கு பழையவர்களாக மாறிய புது வரவுகளை முற்றும் முழுதாக எப்படி குறை கூற முடியாதோ அதே போலவே ஆதரவு சமூகத்தையும் குறை கூற முடியாதபடிக்கு நிலைமைகள் அமைந்துதிருந்தன.
நாட்டில் நிலவிய யுத்தத்தைக் காட்டி அரசாங்கமும் வேறு பல விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தமையாலும், 2009ல் முடிவுற்ற உள் நாட்டு சண்டை நிறையவே புதிய இடம்பெயர்ந்தோர்களை உருவாக்கியதாலும் பதிக்கப்பட்ட இம்மக்கள் உள்ளக இடப்பெயர்வுக்கு (Internally Displaced People) உற்பட்ட பழையவர், ( இறுதி கட்ட யுத்தத்தில்) புதிதாக இடம் பெயர்ந்தோர் என இரண்டாக பிரிக்கப்பட்டு சர்வதே அழுத்தங்களுக்கு அமைவாக பின்னவையவர்கள் முன்னுரிமை பெற்றுக் கொண்டார்கள்.
புத்தளம் என்பது மட்டுப்படுத்தப் பட்ட வளங்களை கொண்ட பிரதேசம் என்பது யாரும் அறிந்த விடயமே. கடல் வளம், தென்னை வளம், உப்பு வளம் என்ற மூன்று வட்டத்துக்குள் அவை கட்டுப்பட்டுள்ளன. கூடவே தென்னையும், உப்பும் சிறு தொகையினரின் தனியுரிமையாக காணப்பட கடல் வளம் இன்றைய நூற்றாண்டின் முன்னேற்றத்துக் கேற்ப அபிவிருத்திக் குற்படுத்தப்படவில்லை, காரணங்கள் பல. ஆகவே வளப்பகிர்வில் பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாத யதார்த்தம். கூடவே சில உள்ளுர் அரசியல்வாதிகளின், புதியவர்களின் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட அரசியல் நோக்கிய காய் நகர்த்தலகளும் சில முறுகல் நிலைமைகளை ஏற்படுத்தியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். போதாதற்கு கிராம சேவகரும், அரசசார்பற்ற தொண்டு நிறுவனமொன்றின் நிருவாகியுமான பட்டாணி ராசீக் அவர்களின் கொலையும் கூட இந்த இரு சமூகங்களின் மனநிலையில் பல இடர்களையும் தோற்றிவைத்தது.
இதில் இன்னும் முக்கியம் பெறுவது வாழ்விடப் பற்றாக்குறை. இடம் பெயர்தோரின் வருகைக்கு முன்னர் புத்தள மக்கள் தம் வாழ்விட தேர்வில் புத்தள நகர மத்தியில் இருந்து இரண்டு மைல் தூரத்தில் சென்று வாழ்வதைக் கூட தவிர்த்தே வந்தனர். ஆனால் புதியவரின் வரவுக்கு பின்னரே நகர எல்லை விரிவடைந்ததும், நகரத்துக்குள் வாழ்ந்த பூர்வீக குடியினர் வருமான நோக்கில் தம் இருப்பிடங்களை புதியவருக்கு விற்றுவிட்டு சற்று வெளி நோக்கிய நகர்வை மேற்கொண்டதும் வெளிப்படையான சம்பவங்கள். இவை தன்னிச்சையாக நடை பெற்றவையே அல்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் நடந்தாக தெரியவில்லை.
மேற்சொன்ன பத்திரிக்கை பேட்டியில் இடம் பெயர்க்கப்பட்டோரின் " அவலங்கள் இன்னும் மறைந்து விடவில்லை" என்ற பேட்டியாளரின் கூற்று இன்று சிறிய நெருடலை ஆதரவு சமூகத்தின் ஓரளவானவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதை யூடியுப் (YouTube) பதிவொன்றில் காணக்கிடைத்தது. நியாமான கவலை என்று மனதிற்குப்பட்ட பொழுதிலும், அது அப்படித்தானா என கண்டறிய அந்த ஆங்கிலப் பேட்டியை வாசித்தபோது, அதன் மொத்தமும் என்ன சொல்கிறது என்பதை உள்வாங்க அந்த செயற்பாட்டாளரின் பக்கத்தில் இருந்து யோசித்தால் என்ன என்று கேள்வியும் எழுந்தது.
அந்த வகையில் நேர்த்தியாக (articulated) சொல்லப்பட்ட விடயங்களைக் கொண்டதாக அந்த பேட்டியை என்னால் பார்க்க முடியாதுள்ளது என்பதுடன் இறந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும் தெளிபவாக விபரித்துக்காட்டும் இலக்கணம் சரியாக கையாளப்படவிலை என்பது என் அவதானிப்பு. ஆகவே " அவலங்கள் இன்னும் மறைந்துவிடவில்லை" என்ற செயற்பாட்டாளரின் இந்த கூற்று அவர் தனது 22ம் வயதில் மனதில் ஏற்பட்ட வடு கடந்து போன இந்த 30 வருடங்களில் இன்னும் மறைந்துவிடவில்லை என்று கூறுகின்றதா? அல்லது எந்த நிலையில் வந்தோமோ அதே நிலையில் தான் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றோம், இன்நிலைக்கு ஆதரவு சமூகம்தான் முற்றும் முழுதான காரணம் எனக் கூறுகின்றதா என்று என்னால் கண்டு கொள்ளமுடியாதுள்ளது. ஆனாலும் முன்னையதை சொல்லவந்த இடத்தில் பின்னையது தற்செயலாக(unintentionally) வந்துவிட்டதா என்று கண்டறிய முடியாத நிலையிலேயே இந்த பேட்டி சரியாகவும் சொல்லவந்த விடயம் அது எதுவாகினும் நேர்த்தியாகவும் சொல்லப்படவில்லை, அல்லது சொன்னது சரியாக எழுதப்படவில்லை என்ற நிலை எனக்குள் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் பயன் அவருக்கே உரியது என்ற அடிப்படையில் இதை இந்த செயற்பாட்டாளரிடமே விட்டுவிடுகிறேன்.
"இந்த பலாத்கார இடப்பெயர்வுக்கு, சிலரை தவிர, இன்று வரை யாரும் கூட்டாக பொறுப்புக் கூற முன்வரவில்லை. அரசியல்வாதிகள், மாறிமாறி வரும் அரசாங்கங்கள் எதுவுமே இந்த பிரச்சினையை சரியாக கையாளவில்லை." என்ற இந்த செயற்பாட்டாளரின் மேலதிக கூற்றானது இவர் புத்தளம் ஆதரவு சமூகத்தை விளிக்கவில்லை, மாறாக சம்பந்தப்பட்ட புலிகள் (புலிகள் சார்பாக எவரும்) அரசாங்கம், இவர்களை பிரதிநிதித்துவம் செய்த அரசியல்வாதிகளயே சாடுகிறார் என்பதும் தெளிவு.
இதைவிடவும் இன்று புத்தளம் நகரை பார்க்கும் போது பிரதான கடைத்தெரு வியாபாரம் பாதிக்கு மேலாக அல்லது அந்த அளவை நோக்கிய அளவில் இடம் பெயர்ந்து வந்தோரிடமே உள்ளது என்ற ஒரு விடயமும், இந்த செயற்பாட்டாளர் குறிப்பிடுவது போல் நிருவாக சிக்கல் காரணமாக புத்தளத்திலும், இவர்களின் பூர்வீக பிதேசங்களிலும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால் " நாங்கள் இங்கும் இல்லை அங்கும் இல்லை" என்ற ஒரு இக்கடான நிலையையும் ஒப்பிடும் போது பொதுவாக இவர்கள் புத்தளத்தில் நல்ல நிலையில் இருக்கின்றார்கள் என்ற முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது. ஆனாலும் விதிவிலக்குகளாக இரு பக்கத்திலும் பலர் இருப்பதையும் யாரும் மறுத்துரைக்க முடியாது.
இந்த செயற்பாட்டாளரின் பெண்கள் அமைப்பு, இவர் போன்ற சமூக மீளிணக்கத்தில் அக்கறை கொண்ட பல்சமூகத்தினரின் நிலைபாடுகள் என்பவையே இவருக்கு ஒரு நம்பிக்கைகையை கொடுக்கின்றது, இவை போக மற்றவை எல்லாம் ஒரே மாதிரியாகவே இருந்து கொண்டு இருக்கின்றது என்ற இவரின் இறுதிக் கூற்றானது மீண்டும் முஸ்லீம் அரசியல் கட்சிகளையும், அதனோடு சம்பந்தப்பட்டவர்களையும், அரசாங்கத்தையும் மறைமுகமாக குறை காண்கின்றார் என்பதைத்தவிர ஆதரவு சமூகத்துக்கும் புத்தளம் சமூகத்துடன் ஒன்றரக் கலந்து ஆவணங்கள் (Documentation) அடிப்படையில் இல்லாவிட்டாலும் மனத்தளவில் புத்தளம் சமூகமாக மாறிவிட்ட இவர்களால் தாங்கள் இரண்டாந்தர மக்களாகளாகவே புத்தளத்தில் இருக்கின்றோம் அல்லது நடத்தப்படுகின்றோம் என எண்ணுவதோ, மூன்றாமவரை அப்படி நம்பவைக்க முயல்வதோ அறிவூர்வமான விடயமானதாக அமையாது.
அதே போலவே இடம் பெயர்ந்து இப்போது புத்தளம் மக்களாக ஆகிவிட்ட, குடும்ப உறவுகளாக மாறிவிட்ட இவர்களில் இந்த பேட்டியாளர் போன்ற ஒரு சிலர் எதை, எதற்காக ,எங்கே சொல்கிறார்கள் என்பதில் பூர்வீக புத்தளம் மக்களுக்கு ஏதாவது நெருடல் இருக்குமாயின் அவர்களின் முதல் விசாரணை இடம் அந்த பேட்டியாளராகவே இருக்க முடியும். தவிரவும், இந்த பேட்டியின் நோக்கம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று தாங்களாகவே ஒரு முடிவுக்கு வருவது ஒரு வேளை பேட்டியாளரின் மூலமாக ஏதும் பிழை நடந்திருந்தால் அதை சீர்செய்ய இருக்கும் வாய்ப்பை இது அடைத்துவிடுவது மாத்திரமல்ல இருக்கும் நிலைமையை இன்னும் திசை திருப்பி "30 வருடங்கள் கடந்து சென்றாலும் எமது அவலங்கள் இன்னும் மாறாமலே இருக்கின்றன" என்ற பேட்டியாளரின் கூற்றை உறுதி செயவதாக அமைந்துவிட சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. ஆகவே இருபக்க சந்திப்பும், சிந்திப்பு கலந்த உரையாடலும் ஒற்றுமைக்கு இன்னும் வலு சேர்க்கும்.
- Mohamed SR. Nisthar
Co editor, Sonakar.com
No comments:
Post a Comment