20க்கு ஆதரவளித்து அப்பட்டமான நம்பிக்கைத் துரோகிகளாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அனுதாபம் கொண்டவர்கள் இல்லாமலில்லை. அந்த நிலைப்பாட்டில் இருப்பவர்கள், அதில் ஏதாவது நலவு இருக்கும் தானே? முஸ்லிம்களுக்கெதிரான 'இனவாத' அச்ச சூழ்நிலை குறையும் தானே? என்ற பொது நன்மைகள் பற்றியும், மேலும் அமைச்சுப் பதவிகள் கிடைத்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும், நம்மையும் கவனிப்பார்கள், இவர்கள் எதையோ வாளிக்கணக்கில் அள்ளிக் கொண்டு வரப் போகிறார்கள் என்று கூட நம்புகிறார்கள்.
ஆனால், பெரும்பான்மையானோர் இதனைக் காறித்துப்பும் 'முனாபிக்கான' செயற்பாடாகவே பார்க்கிறார்கள். ஏன்? என்ற கேள்விக்கு உலகின் தலை சிறந்த MMA (Mixed Martial Arts) வீரராகத் தன்னை நிறுவி, 29 சண்டைகளில் எதையும் தோற்காது, தனக்கு நிகரான போட்டியாளர் இல்லையென்பதை உலகறிய நிரூபித்து - உயர்ந்து, ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்காக பல மில்லியன் அமெரிக்க டொலர்களை மிக இலகில் ஊதியமாகப் பெறக்கூடிய நிலையிலிருந்து தான் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள ஹபீப் நூர்முகமதுவை (Khabib Nurmagomadev) உதாரணமாகக் கொள்ளலாம்.
ரஷ்ய குடியரசு பகுதியான டகஸ்தான் எனும் மலைப்பிராந்தியத்தில் இன்னும் வர்த்தகமயமாக்கப்பட்ட முஸ்லிம் வாதம் அண்டாத கிராமத்தில் பிறந்து - வளர்ந்து உலகப் புகழ் பெற்று, யாரும் எதிர்பாராத வகையில் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்த 32 வயது ஹபீப் சொன்ன விடயங்கள் இன்று இன - மொழி மற்றும் பிராந்திய வேறுபாடுகளின்றி இணைய உலகில் மிகப் பெரும் பேசு பொருளாக இருக்கிறது. அப்படி என்ன அவர் சொன்னார்?
என் தந்தை விரும்பிய படி இந்த உயரத்தை அடைந்தேன். ஆனால் எனது தாயின் விருப்பப்படி விலகிக் கொள்கிறேன். நாளை என்ன நடக்கும் என்பது நிச்சயமில்லாதது. எனவே, உங்களைச் சுற்றியுள்ளவர்களை கவனித்துக் கொள்ளுங்கள். இது அனைத்தையும் விட என் தாயாரைக் கவனித்து அவருடன் நேரம் செலவழிப்பதையே நான் விரும்புகிறேன், எனவே ஓய்வு பெறுகிறேன் என்றார்.
கடந்த ஜுலை மாதமே கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னணியில் வபாத்தான ஹபீபின் தந்தை அப்துல் மனாபே அவரது பயிற்றுவிப்பாளராகவும் இருந்தார். எனவே, தன் அடைவின் மொத்தப் பெறுமதியும் தந்தையின் வழிகாட்டல் எனவும், இறைவனின் அருள் எனவும் மிகவும் தன்னடக்கமாக உலகுக்கு எடுத்துச் சொல்லியே ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவர் இன்று உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத அனைத்து மக்களாலும் போற்றப்பட்டு, புகழப்பட்டு வருகிறார்.
இந்தப் பண்பும், தன்னடக்கமும், பெற்றோர் மீதான அதீத அன்பும் மரியாதையும் அத்தனையும் இஸ்லாமிய வாழ்வியல் அவருக்கு வழங்கிய பயிற்சியென்பது அனைத்து முஸ்லிம்களும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். டகஸ்தான் பிராந்தியம் இன்னும் இஸ்லாமிய விழுமியங்களை இறுகப்பற்றி வாழும் மக்களைக் கொண்டுள்ளதெனும் அடிப்படையில் இப்பேற்பட்ட இளைஞர்களை அப்பிராந்தியம் கொண்டிருப்பது மாத்திரமல்ல, அவர்கள் தாம் வாழ்வில் பெற்ற பயிற்சியை அற்ப உலக ஆசைகளுக்கும் பணத்துக்கும் முன்னால் தூக்கியெறியவில்லையென்பதே இங்கு முக்கியம் பெறுகிறது.
அந்த வகையில், நன்நடத்தை (moral) எப்போதும் பெறுமதியானது. இங்கு தான் 20ன் போது, ராஜபக்ச குடும்பம் வந்தால் முஸ்லிம்கள் இல்லாமலே போய் விடுவார்கள் என்று உணர்வூட்டி, முஸ்லிம்களை ராஜபக்சக்களுக்கு எதிரான சக்திகளாகக் காட்டி, வாக்குகளைப் பெற்று, பின் கதவால் அதே ராஜபக்சக்களுடன் 'டீல்' பேசி, தம்மை நம்பியிருந்த சமகி ஜன பல வேகயவை பகிரங்கமாக ஏமாற்றி, தமது துர் நடத்தையை நிரூபித்துள்ளார்கள் அரபு - உருது பெயர்களைக் கொண்டுள்ள இந்த படுபாவிகள்.
அவர்களை வழி நடாத்திய ரவுப் ஹக்கீமும் - ரிசாத் பதியுதீனும் வடிகட்டிய கொள்ளைக் காரர்கள் என்பதையும் மிகத் தெளிவாக நிரூபித்துள்ளதோடு, புதிதாக நாடாளுமன்றம் சென்றுள்ள முஷரப் முதுநபீன், புதிய தலைமுறை முஸ்லிம் அரசியலும் அதே சாக்கடையில் இறங்கியுள்ளது என்பதை நிரூபித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் குறைந்த பட்ச நற்பண்பு நம்பிக்கையாயிருத்தல். ஆனாலும் கடந்த நூற்றாண்டில், முஸ்லிம்கள் என்றாலே ஏமாற்றுக்காரர்கள் என்றே எம் சமூகம் பெயர் வாங்கியுள்ளது. அதனால் பல சந்தர்ப்பங்களில் 'தொப்பி பிரட்டிகள்' என்ற பழிச்சொல்லையும் சுமக்கிறது. சமூகத் தலைவர்களின் ஒழுக்க விழுமியங்கள் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு மாத்திரமன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் நிலைத்து நிற்கக் கூடியது. இவ்வாறு சமூகத்தில் வாழ்ந்த நல்லொழுக்க சீலர்களை இதற்கு முன் எம் சமூகம் சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.
அஷ்ரப் அரசியல் தேவைகளுக்காக எடுத்த பகிரங்க முடிவுகளாகட்டும், அண்மையில் ரணில் - சஜித் சர்ச்சையில் தாம் நியாயம் என நினைத்த பக்கம் இருந்தவர்களாகட்டும், கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியாக வேண்டும், மஹிந்தவின் பெரமுன ஆட்சியமைக்க வேண்டும் என அந்தப் பக்கம் முழுமையாக நின்று அத்தனை பழிச் சொற்களையும் தாங்கிக் கொண்ட அலி சப்ரி மற்றும் பெரமுன சார்பு முஸ்லிம்களாகட்டும், அவர்கள் அனைவரிடமும் நேர்மையிருந்தது.
ஆனால், இலங்கை முஸ்லிம்களின் பெயரால் இன உணர்வைத் தூண்டி அரசியல் நடாத்தும் இரு முஸ்லிம் கட்சிகளும் அப்பட்டமான நம்பிக்கைத் துரோகிகளாகவும், சந்தர்ப்பவாதிகளாகவும் மாறியிருக்கிறார்கள். இந்த பாய்ச்சலால் சமூகத்துக்கு ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்ற எண்ணம் மிகவும் பலவீனமானதும் முரண்பாடுகள் கொண்டதும்.
இவர்கள் 20க்கு ஆதரவளித்த ஒரே காரணத்திற்காக 2010 முதல் ஊட்டி வளர்க்கப்பட்ட இன விரோத மனப்பான்மை மாறி விடும், ஞானசார முதல் அம்பிட்டியே சுமன ரத்ன மற்றும் அமித் வீரசிங்க முதல் மது மாதவ, கம்மன்பில வரை இத்தோடு ஊட்டி வளர்க்கப்பட்டவர்களால் கைவிடப்படுவார்கள், கிழக்கில் விதைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் அடங்கி விடுவார் என்பதெல்லாம் நடக்குமா என்பதை விட நடக்குற காரியமா? என கேட்பது தகும்.
முஸ்லிம்கள் இதுவரை காலம் நம்பி வந்த இன அரசியல் முழுதாக நிர்வாணப்பட்டுள்ளது. அதனூடாக இதுவரை அரசியல்வாதிகள் தனிப்பட்ட ரீதியில் இலாபமடைந்தது மாத்திரமே நடந்து வந்துள்ளது. அதுவே இந்த வார பகிரங்க நம்பிக்கைத் துரோகத்திலும் நடந்துள்ளது. கட்சி முடிவுப்படியே வாக்களித்தோம் என்று ஹரீசும் - முஷரபும் சொல்ல, கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களிடம் 'விளக்கம்' கேட்டிருக்கிறோம் என அறிக்கை விடுவது எத்தனை அப்பட்டமான மக்களை ஏமாற்றும் செயல்? என்பதைப் புரிந்து கொள்ளத் தவறுபவனுக்கு நேர்மை - அதை வலியுறுத்தும் இஸ்லாமிய வாழ்வியல் நீதியும் புரியப் போவதில்லை.
அரசியலில் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இருக்கும் பக்கத்தில் நேர்மையாக இரு!
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
2 comments:
மிகத் தெளிவான கருத்துக்கள் - தொடரட்டும் உங்கள் பணி அல்லாஹ் துணை இருப்பான்
well said...
Post a Comment