நீதி கேட்டு ரியாஜ் பதியுதீன் ஜனாதிபதிக்கு கடிதம் - sonakar.com

Post Top Ad

Monday, 12 October 2020

நீதி கேட்டு ரியாஜ் பதியுதீன் ஜனாதிபதிக்கு கடிதம்



அரசியல் மற்றும் சமூகவாத காரணங்களால் தனக்கெதிராக உருவாகியுள்ள சூழ்நிலையிலிருந்து தன்னை பாதுகாக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் அண்மையில் விடுதலையான ரியாஜ் பதியுதீன்.


அவர் அனுப்பி வைத்த கடிதத்தின் உள்ளடக்கத்தினை கீழ்க்காணலாம்:


மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே,


கொழும்பு வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த முஹம்மது இப்ராஹிமின் மகனான இன்ஷாப் அஹமதுடன் நான் தொலைபேசி தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், கடந்த 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தளத்தில் உள்ள எங்கள் இல்லத்தில் வைத்து குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் (சி.ஐ.டி) கைது செய்யப்பட்டிருந்தேன் என்பது, ஜனாதிபதியாகிய உங்களுக்கு  நன்கு தெரியும்.


இன்ஷாப் அஹமட் என்பவர், எனது சொந்த ஊரான மன்னாரைச் சேர்ந்த மற்றொரு முக்கிய தொழிலதிபரான எஸ்.கே.பி.அலாவுதினின் மகளை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, நான், சி.ஐ.டியினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தேன். நான் கைது செய்யப்பட்ட அதே நாளில், இன்ஷாப் அஹமதுடன் தொலைபேசி உரையாடல்கள் நடாத்தினார்கள் என்ற அடிப்படையில், மேலும் 06 பேரும் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.


2020 ஏப்ரல் 14 ஆம் திகதி நான் உட்பட கைது செய்யப்பட்ட 07 பேரில் 03 பேர் எனக்கு முன் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் திரு. முபீன் மற்றும் திரு. அமானுல்லா ஆகியோரை விடுவிக்குமாறு கோரி, 01.06.2020 தினத்தன்று சி.ஐ.டி.யினர் நீதிமன்ற உத்தரவையும்  கோரியிருந்தனர். இதன்போது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எவராவது ஒருவர், விசாரணையின் பின்னர், அவர் மீது குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்படாவிட்டால், அவரை விடுவிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்ற காரணத்தினால், அவர் நிரபராதியாக இருந்தால், கைது செய்த சி.ஐ.டி யினர் அவரை விடுவித்துவிட்டு, நீதிமன்றத்துக்கு அந்த விடயத்தை தெரியப்படுத்தினால் போதுமானது என்று நீதவான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.


அனைத்து விசாரணைகளின் முடிவுகளையும் தொடர்ந்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று சி.ஐ.டி. யினர் பரிந்துரைத்ததின் பேரில், மேற்கண்ட நீதிமன்ற உத்தரவின்படி 29.09.2020 தினத்தன்று நான் விடுவிக்கப்பட்டிருந்தேன்.


நான் தடுப்புக்காவலில் இருந்த காலப்பகுதியில், எனது தொலைபேசிகள், கணனிகள், வியாபாரத் தளங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடர்பான முழுமையான விசாரணையை சி.ஐ.டி.யினர் மேற்கொண்டிருந்தனர்.  மேலும், கொழும்பில் உள்ள எனது வீடு, புத்தளத்தில் உள்ள எனது மனைவியின் பெற்றோருக்கு சொந்தமான வீடு இன்னும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எனது நண்பர்களின் வீடுகள் மற்றும் மன்னாரில் உள்ள எனது தாய்க்கு சொந்தமான வீடு போன்றவற்றிலும் சி.ஐ.டி. யினர் தேடுதல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பில் எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் என்னுடன் வணிக தொடர்புகளில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டிருந்தமையும், எனது விடுவிப்பின் பின்னர் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது


எனது சகோதரர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அரசியல்வாதி என்பதனால், எனது பிரச்சினையை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள், அவர்களது அரசியல் நலனுக்காக எனது விடுதலையை பயன்படுத்திக்கொள்கின்றார்கள்என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இது நான் உட்பட எனது குடும்பத்தினரது பொது வாழ்க்கைக்கு மிகப் பெரியதொரு தடையாக உள்ளத்து. 


இரண்டு தினங்களுக்கு முன்னர், ஆளுங்கட்சியின் நூறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் என்னை மீண்டும் கைது செய்து விசாரிக்குமாரும் கோரியுள்ளனர்.


எவ்வாறாயினும் அரசியல் மற்றும் குரோத உணர்வுடைய மதவாதிகள், இனவாதிகள்  தமது சொந்த நலன்களை அடைந்துகொள்ள மேற்கொள்ளும் முயற்சியாகவே இது உள்ளது. அத்துடன், சி.ஐ.டி யினரது நடத்தையை சந்தேகத்துக்குரியதாக சித்தரிக்கவும், எந்த அடிப்படையும் இல்லாமல் என்னை ஒரு பயங்கரவாதியாக இழிவுபடுத்தவும் இந்த முயற்சியை நான் கருதுகிறேன்.


இங்கு ஏமாற்றமளிக்கும் உண்மை யாதெனில், நான் ஒரு குற்றமும் இழைக்காமல், 169 நாட்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் இருந்த காலப்பகுதியில் அனுபவித்த பேரழிவுகரமானதொரு  வாழ்க்கைக்குப் பிறகும், குற்றமற்றவனாக உறுதிப்படுத்தப்பட்டு நான் விடுவிக்கப்பட்டேன். அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், எனது விடுதலையை அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பது கவலையானதொரு விடயமாகும்.


ஆகையால், எனது விடயத்தில் நீங்கள் தலையிட்டு, நான் எப்போதும் அரசியல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகிச் செல்லும் உறுதியுடன் இருக்கும் ஒரு நபர் என்பதால், எனக்குக் கிடைக்க வேண்டிய நீதியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.


அரசியல் மற்றும் சமூகவாத காரணங்களால் என்னை மீண்டும் கைது செய்வதற்கான கோரிக்கைகள் திட்டமிடப்பட்டு, அரங்கேற்றப்படுகின்றன என்பதையும் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.


நன்றி!

இப்படிக்கு,

என்றும் உண்மையுள்ள,

பதியுதீன் மொஹமட் ரியாஜ் 

No comments:

Post a Comment