சர்வாதிகாரமும் மாகாணசபைத் தேர்தல்களும் - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 October 2020

சர்வாதிகாரமும் மாகாணசபைத் தேர்தல்களும்

 



'மாகாண முறைமையை நீக்குவதற்கு உடன்படமாட்டோம்' என்பதற்கான  சர்வஜன வாக்கெடுப்பாக எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் அமைய வேண்டும்.


ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் என்னால் சாதிக்க முடியும் என்று இறுமாப்புடன் தம்பட்டமடிக்கும் அளவிற்கு  ஜனாதிபதியாகிய ஓரு தனி மனிதரிடம் அன்று 1978ல் அரசியல் அதிகாரங்கள் குவிந்திருந்தன.    


அவ்வாறான நிலமை ஆபத்தானது என்பதை உணர்ந்து, குவிக்கப்பட்ட அதிகாரங்களை ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளப் பெருமக்களால் தெரிவு செய்யப்பட்ட பாரளுமன்றத்துக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும், நீதித்துறைக்கும் பகிர்ந்தளித்து அர்த்தமுள்ள ஜனாநாயக மரபை உயிர்வாழவைப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கியே 1978 ற்குப் பின்னர் பதவிக்கு வந்த எல்லா ஜனாதிபதிகளும், தேர்தல்களில் வெற்றியீட்டினார்கள்.  


தற்போதைய பிரதமர் மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆரம்பத்தில் கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்று அங்கு ஆற்றிய தனது உரையின் மூலம் இம்மாற்றத்திற்கான உறுதிமொழியை வழங்கியிருந்தார். 


1994ல் மாண்புமிகு சந்திரிக்கா அம்மையாரும் இதனையே கூறினார். அதனால் அவரை ஒரு சமாதான தேவதையாக சிறுபாண்மை மக்கள் கருதினார்கள்.  2005ல் மீண்டும் மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷ அவர்கள் J.V.P யுடன் ஒப்பந்தம் செய்து ஆட்சிக்கு வந்த பின்னர் இதனையே கூறினார். 


பின்னர் 19வது திருத்தமானது  சென்ற நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டபோது 224 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து ஆதரித்து வாக்களித்து கடுமையான 18வது திருத்தத்தினை புதைகுழியில் தள்ளி ஆறுதல் பெருமூச்சு விட்டார்கள் என்பது வரலாறாகும். 


அதிகாரக்குவிப்பு பிரச்சினைக்கு ஒரு நிவாரணியாக இறுதியாக கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தத்தில் பல குறைகள் இருப்பதனை பலரும் இப்போது ஏற்றுக்கொள்கின்றனர். அதனால் பரஸ்பரம் கலந்தாலோசித்து ஒருமித்த நிலைப்பாட்டுடன் புதியதோர் அசசியல் மாற்றத்தை மீண்டும் 225உறுப்பினரும் கருத்தொருமித்த நிலையில் கொண்டுவருவதே ஆரோக்கியமான ஜனநாயகப் பண்பாடாகும். ஒரு தனிக்கட்சியின் நன்மைக்காகவோ அல்லது ஒரு தனி சமூகத்தின் நலனுக்காகவோ யாப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டால் அது நாட்டைக் குழப்பும் ஒரு செயலாகத்தான் காலப்போக்கில் திரிவு படும்.


இன்று ஒரு தனிக்கட்சியானது மூன்றில் இரண்டு பங்கு பலத்தை அதன் கூட்டுக் கட்சிகளுடன் சேர்ந்து பெற்றுக் கொண்டுவிட்டது என்பதற்காக, அதுவும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான இனவாத அலைகளை ஏற்படுத்தி ஒருசில சக்திகள் பெரும்தேசிய மக்களை உசுப்பேத்தி பெற்றுக்கொண்ட இந்த வெற்றியை தமக்கு சாதகமாக ஆக்கி;க்கொண்டு சிறுபான்மையினருக்கு எதிரான யாப்பு மாற்றங்களை நிறைவேற்றி அதன்மூலம் சட்டரீதியாக அவர்களை அடக்கி ஒடுக்கி ஆளத் துடிப்பது போன்ற ஒரு அச்ச நிலைமை தோற்றுவிக்கப்பட்டு வருவதை உணரக்கூடியதாக இருக்கின்றது.


மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட வெற்றியானது தோல்வி அடைந்தவர்களை துவம்சம் செய்வதற்கும் ஒத்துவராதவர்களை அடிமைப் படுத்துவதற்கும் பெரும்பான்மை சமூகம் தமக்குத் தந்த அங்கீகாரம்தான் என்பதாக ஒருசில பெரும்தேசிய கடும்போக்குவாதிகள் கருதிக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளனர். தோல்வி அடைந்தவர்களும் இந்நாட்டில் பிறப்புரிமையும் கருத்துரிமையும் கொண்ட பிரஜைகள் என்ற உண்மையை யாரும் மறுதலிக்க முடியாது. சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட அந்த உயரிய ஜனநாயகப் பண்பைப் புரிந்துகொள்ள மறுப்பவர்கள் பூகோளகிராமமாகிய நவீன உலகில் தனிமைப்பட்டு விடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.


குழப்பங்களுக்கு மத்தியிலும் அரச தரப்பிலுள்ள ஒருசில மிதவாத சக்திகள் இடையிடையே சிறுபான்மையினருக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய சமநிலையான அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. அரசாங்கத்திலுள்ள உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவமிக்க அரசியல் தலைவர்கள் நிதானமாக சமாளித்துக்கொண்டு செல்வது ஓரளவு ஆறுதலை அளித்தாலும் கடும்போக்குவாதிகளின் நெருக்குதலை எவ்வாறு அவர்கள் சமாளிப்பார்கள் என்பதை சொல்ல முடியாதுள்ளது.


அண்மையில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் 13வது திருத்தம் தொடர்பில் சிறுபான்மையினருக்கு ஆறுதல் அளிக்கக் கூடியவாறு தனது கருத்தை வெளியிட்டதனைப் பற்றி அரச தரப்பு அமைச்சர்கள் மாறுபட்ட கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 'இந்திய தலையீடு' என்ற பதத்தை இட்டுக்கட்டி இந்தியாவுக்கு சவால் விட்டுக்கொண்டு குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தம் எனப்படும் நமது நாட்டின் 13வது யாப்புத் திருத்தமானது மாகாணசபை முறைமையை இங்கு உருவாக்கியது என்பது உலகம்; அறிந்த உண்மையாகும். 


பூகோள ரீதியாக இலங்கைக்கு மிக்க அருகில் உள்ள இந்தியாவைப் புறக்கணித்து நமது நாடு ஒருபோதும் பயணிக்க முடியாது. இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம், மலாய், பரங்கிய, இந்திய வம்சாவழியினர் அனைவரும் இந்திய கலாச்சாரத்தின் படிவங்களாகும். இந்நாட்டிலுள்ள சாதி, மதம், மொழி எல்லாமே இந்திய வாழ்வியல்களுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்தவையாகும். அவ்வாறான  தொடர்புகளை இலகுவில் புறக்கணித்துவிட்டு எம்மால் தன்னிச்சையாக இயங்க முடியாது என்பது யதார்த்த நிலையாகும். காலனித்துவ ஆட்சியாளர்கள் கூட இந்தியாவில் இருந்துதான் நமது நாட்டின் நிர்வாகங்களை வழிநடாத்திக் கொண்டிருந்தார்கள் என்பது வரலாறாகும். எல்லாவற்றிற்கும் மேலாக பிராந்திய பாதுகாப்பு மிக முக்கியமான அம்சமாக இரு நாடுகளாலும் முன்னுரிமைப் படுத்தப்படவேண்டும்.


இந்த நாட்டில் மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து வந்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய அரசாங்கம் பாரிய உதவிகளை செய்திருந்தது என்ற விடயம் எமது ஆட்சியாளர்கள் ஒப்புக்கொண்ட உண்மையாகும். எனவே இந்தியா இங்குள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவாக குரல்கொடுப்பதை ஆக்கிரமிப்பாக கருத முடியாது. பிராந்தியத்தில் அர்த்தமற்ற முறுகல் நிலமைகள் கருக்கொள்வதை யாரும் விரும்பமாட்டார்கள் என்பதுதான் யதார்த்தமாகும்.


ஓருசிலர் சவால் விடுவது போன்று மாகாணசபை முறைமையில் எவ்விதமான மாற்றங்களையும் செய்வதற்கு சிறுபான்மைச் சமூகங்கள் ஒருபோதும் உடன்படமாட்டார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அவர்களது சுயநிர்ணய உரிமைகளை வெறுமனே தாரைவார்க்க மாட்டார்கள் என்பதனை திட்டவட்டமாக சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்;. சிறுபான்மைச் சமூகங்கள்களின் விருப்பங்களை உதாசீனம் செய்து பெரும்தேசிய கடும்போக்குவாதிகள் தாறுமாறாக நடந்து கொள்வதற்கு அரசாங்கத்திலுள்ள அனுபவமிக்க சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் இலகுவில் அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. 


தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள 20ஆவது யாப்புத்திருத்தமானது 1978ம் ஆண்டிலிருந்து படிமுறையாக கொண்டுவரப்பட்ட எல்லாத் திருத்தங்களையும் புறந்தள்ளிவிட்டு ஒரு முழுமையான சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான போக்காகத்தான் தென்படுகிறது. 


13வது திருத்தமாக 1987ல் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையில் வடகிழக்கு முஸ்லீம்களின் அபிலாஷைகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்ததாக தலைவர் அஷ்ரஃப் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். கிழக்கு மாகாணத்தில் காலாகாலமாக பரவலாக பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த முஸ்லீம்களைக் கலந்தாலோசிக்காது வடக்கு கிழக்கு மாகாணம்கள் ஒருதலைப் பட்சமாக ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே மாகாணமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் புதிய மாகாணத்தில் முஸ்லீம்களின் இனப்பரம்பல் 17மூ சதவீதமாகக் குறைக்கப்பட்டதனை அவர் கண்டித்திருந்தார். வடகிழக்கு இணைப்பானது பின்னர் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பிரிபடும்போது சுயநிர்ணய உரிமையுடனான தனியான ஒரு அலகு முஸ்லீம்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ் தலைவர்களுடன் பேசினார். அவர்களை அதற்கு இணங்கவும் வைத்தார்.


ஆனாலும் மாகாணசபை முறைமையை அதிகார பரவலுடனான சுய நிர்ணய உரிமையை பெற்றுக் கொள்வதற்கான ஓரு மையப்புள்ளியாக அவர் அடையாளம் கண்டார். தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணம் ஓப்பந்தத்தில் உள்ளவாறு பின்னர் இரண்டாகப் பிரிபடும்போது நிபந்தனையை முன்வைக்க அவர் காத்துக் கொண்டிருந்தார். 


ஆனால் இறைவனின் நாட்டம் அவரது ஆயுள் அதற்குள் முடிவடைந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக வடகிழக்குப் பிரிவு 2007ல் நீதிமன்றத்தால் நிகழ்ந்தேறியது. பெரும் தேசியவதிகளின் திட்டமிட்ட அந்த காய் நகர்த்தல் மூலம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மாவட்டங்கள் இரண்டும் பின்னர் திட்டமிட்ட அரச குடியேற்றங்களாலும், இடையில் நிறுவப்பட்ட எல்லை நிர்ணய சபைகளின் பக்கசார்பான தீர்மானங்களினாலும் கபளீகரம் செய்யப்பட்டன. அரச நிர்வாகங்களின் மாவட்ட தலைமைகள் நிரந்தரமாக பெரும்பான்மை இனத்தவர்களால் நிர்வகிக்கப் பட்டு வந்ததாலும், மத்தியில் ஆறில் ஐந்து பெரும்பான்மையைக் கொண்ட அரசு ஆட்சியில் இருந்ததாலும,; பாராளுமன்றத்தில் இருந்த எமது பிரதிநிதிகள் செயலிழந்து போயிருந்ததாலும், யுத்த சூழலில் வடகிழக்கு மூழ்கியிருந்ததாலும் இந்த அவல நிலை கிழக்கு முஸ்லிம்களுக்கு அன்று ஏற்பட்டது. 


இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையிலிருந்து மீண்டு கொள்ள முடியாத, எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத நிலைமையிலேயே தற்போது மீண்டும் மாகாணசபைப் பிரச்சினை முஸ்லீம்களின் மத்தியில் தலைதூக்கியுள்ளது. 


மாகாணசபை முறைமையானது நிலத்தொடர்புள்ள ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பாரம்பரியமாக   ஒன்றி வாழ்கின்ற சமூகங்களுக்கு தங்களைத் தாங்களே ஒரு சிறிய அளவிலேனும் உரிமையுடனும் உணர்வுடனும் ஆண்டு மகிழக்கூடிய ஒரு அனுபவத்தைக் கொடுக்கின்றது. அந்த விசித்திர உணர்வை அனுபவித்தவர்கள் மாகாணசபை முறைமையை விட்டுக்கொடுக்க ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அந்த உணர்வானது வட கிழக்கில் பூர்வீகமாக வாழும்   மக்களுக்கு மட்டும் ஏற்படுவதல்ல. தான் பிறந்து வாழ்ந்துவரும் மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவரும் அந்த சிறிய அளவு சுதந்திரத்தை சுவைக்கவே விரும்புவார்கள். 


அதனால்தான் வட கிழக்கிற்கு வெளியில் மாகாணங்களாகப் பிரிந்து பூர்வீகமாக வாழ்ந்துவரும் பெரும்பான்மை சமூகங்களைச் சேர்ந்த பெரும்தேசிய மக்களும், மலைநாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினரும், நிலத்தொடர்பு சார்ந்த சாதி சம்பிரதாயங்களில் பின்னிப் பிணைந்தவர்களும் இவ்வாறான சுயமான சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்ளவே விரும்புவார்கள். அரசாங்க தரப்பைச் சார்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்வதற்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்புக்களை வெளியிட்டு உள்ளதும்கூட மேற்குறிப்பிட்ட உணர்வுகள் காரணமாகத்தான். இவ்வாறான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும். 


எனவேதான் இந்நாட்டில் மக்கள் ஏற்கனவே அனுபவித்துவரும் ஜனநாயக ஆட்சி முறை அடுக்குகளான ஜனாதிபதி முறைமை, பாராளுமன்ற முறைமை, மாகாணசபை முறைமை, உள்ளுராட்சி முறைமை போன்ற உரிமைகளில் எதையாவது இல்லாமல் செய்வதாக இருந்தால் மக்களின் நேரடியான விருப்பங்களை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பெற்றுக் கொள்வது தான் அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய கௌரவமாகும். 


வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை மொழிவாரியான சமூகங்களின் இணைவுதான் இரு சமூகங்களுக்கும் ஆரோக்கியமான பாதுகாப்பாகும். தலைவர் அஷ்ரஃபும் அதனையே கூறிவந்தார். ஆனால் அவரது தம்பிமார் அமைச்சுப் பதவிகளுக்காக அரசியல்செய்து பிழைப்புத் தேடியதால் பெரும் தேசியவதிகளின் கால்களைச் சுற்றித்திரியும் பூனைக்குட்டிகளாக மாறிவிட்டனர். 


இதனைத் தட்டிக்கேட்டவர்கள்; தூரப்படுத்தப்பட்டு விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டு வெளியேறினர். 20 வருடங்களாக தமிழர்களோடு வேலிச்சண்டை பிடித்துக்கொண்டு குரங்குகளிடம் அப்பங்களைப் பங்கிடுவதற்குக் கொடுத்து ஒரு முடிவுமில்லாமல் நிர்க்கதியாகி இருந்தவற்றையும் இழந்துவிட்டு இருக்கின்றனர். மாவட்ட எல்லைகள் பறிபோவதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாது பக்கத்து வீட்டார்களுடன் உரசல்களை ஏற்படுத்திக் கொண்டு அதில் குளிர்காய்வதே அரசியலாய்ப் போய்விட்டது.


தமிழ் முஸ்லீம் உறவுகள் வலுப்படும்வரை இரு சமூகங்களுக்கும் விமோசனம் கிடைக்கமாட்டாது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களும் ஒற்றுமைப்பட வேண்டிய காலம் கனிந்து வருவதாகவே நான் உணருகின்றேன். 


தமிழ் தலைவர்களும், புத்திஜீவிகளும், ஊடகங்களும் தற்போது நேசக்கரம் நீட்டுவதை நான் வரவேற்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தை இரு சமூகங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களையும் தமிழ் பேசும் மக்கள் வென்றெடுக்க வேண்டும். சமூகங்களுக்கிடையிலான தனித்தனியான கூட்டணிகளாகவோ அல்லது இணைந்தோ வியூகங்களை அமைத்து போட்டியிட்டு நமது பூர்வீக மண்ணில் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட தமிழ் பேசும் இரு சமூகங்களும்   முன்வரவேண்டும். அதன்பின்னர் அமையப்போகும் மாகாண சபைகளில் நமது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் பேச்சுவார்த்தைகள் மூலமும், விட்டுக்கொடுப்புக்கள் மூலமும் சுமூகமான தீர்வுகளைத் தேடவேண்டும். 


வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் பூர்வீக தாயகமாகும். அதில் தமிழ், முஸ்லீம்கள் என்ற இரண்டு தேசியம்களும் பரஸ்பர உணர்வுகளுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டும் என்ற நமது தலைவர்களின் கனவுகளை நிறைவேற்ற முன்வரவேண்டும்.


வடக்கு கிழக்கில் இனி ஒரு தேர்தல்வரும்போது தமிழரா முதலமைச்சர்? முஸ்லிமா முதலமைச்சர்? என்ற போட்டி நாடகத்தைப் பெரும்பான்மையினம் முன்னின்று நடாத்த நாம் அனுமதிக்கலாகாது.   


மாகாண முறைமையை நீக்குவதற்கு உடன்படமாட்டோம் என்ற பொதுவான கோஷத்தை முன்வைத்து அதற்கான சர்வஜன தேர்தலாக எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் அமைய வேண்டும். 



மு.த. ஹஸன் அலி  (முன்னாள் இராஜாங்க அமைச்சர்)

செயலாளர் நாயகம், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு


No comments:

Post a Comment