பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டாம், தேசியப் பட்டியல் ஊடாக உங்களை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வது ரணசிங்க பிரேமதாசவின் மகனான எனது பொறுப்பு எனக் கூறி நம்ப வைத்து ஏமாற்றியுள்ள சஜித் பிரேமதாசவுக்கு எதிராக Letter of demand (கேள்விக் கடதாசி) அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கிறார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி.
இது தொடர்பில் சோனகர்.கொம்முடன் உரையாடிய அவர், எழுத்து மூலமான ஒப்பந்தம் ஒன்றைச் செய்யாததன் காரணம் பற்றி விளக்குகையில், ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் தந்த ஒப்பந்தத்தை மீறினார் நான் அப்படியல்ல, ரணசிங்க பிரேமதாசவின் மகன் என சஜித் தன்னை நம்ப வைத்ததாகவும் அக்குடும்பத்தின் மீதிருந்த நம்பிக்கையில் தானும் ஒப்பந்தம் பற்றி கவலைப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
இதேவேளை, சிறுபான்மை சமூகங்களோடு ஒன்றிப் பயணிக்கும் என எதிர்பார்த்த சமகி ஜன பலவேகய இன்று பௌத்த வாக்குகளைக் குறி வைத்து, பெரமுனவை விட மோசமான வகையில் சிறுபான்மையினருக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அசாத் சாலி மேலும் தெரிவிக்கிறார். அண்மையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடை விவகாரங்களுக்கு எதிரான கூச்சல்கள் இதனையே எடுத்தியம்புவதாக தெரவிக்கின்ற அவர், தனது சட்டத்தரணி ஊடாக குறித்த கடிதத்தினை அனுப்பவுள்ளதாகவும் 14 நாட்களுக்குள் பதில் கிடைக்காதவிடத்து 'வாக்குறுதியை மீறிய' தன் பின்னணியில் நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
முஸ்லிம் சமூகத்துக்கான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு கண்டி பௌத்த பீடம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக போலிக் காரணங்கள் சொல்லப் படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment