மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர் ஒருவரையும் பிரதியதிபரையும் தாக்க முற்பட்டமைக்கும், பாடசாலை சொத்துக்களை சேதப்படுத்தியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களால் பாடசாலை நுழைவாயினை மூடி இன்று புதன்கிழமை காலை கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தரம் 2இல் கல்வி பயிலும் மாணவர்கள் இடைவேளையின் போது விளையாடிய சமயத்தில் இரண்டு மாணவர்கள் மோதியதில் ஒரு மாணவரின் தலையில் காயம் ஏற்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து காயமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாடசாலைக்கு வருகை தந்து மாணவனின் வகுப்பாசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குறித்த ஆசிரியரை தாக்க முற்பட்ட வேளையில் பிரதி அதிபர் குறித்த இடத்திற்கு வருகை தந்து நிலைமையை கேட்டறியும் வேளையில் அவரையும் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் பேசி தாக்க முற்பட்டுள்ளனர்.
பாடசாலை நிருவாகத்தினரால் நேற்று செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த நபர்களால் பாடசாலையின் விளம்பர பலகை, கடிகாரம், பூச்சட்டிகள், அதிபர் பெயர் பலகை, கதவு, தண்ணீர் பைப் என்பவற்றினை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
இதன் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த பெற்றோர் பாடசாலை சொத்துக்களை சேதப்படுத்தி ஆசிரியர்களை அவமதித்த குறித்த நபர்களை கைது செய்ய கோரி பாடசாலை நுழைவாயிலினை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை பொலிஸார் மற்றும் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.அஹ்சாப் ஆகியோர் குறித்த இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை விசாரித்ததுடன், பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை கைது செய்ததுடன், மீதமாகவுள்ளவர்களையும் கைது செய்வதாக உறுதி வழங்கியதையடுத்து பாடசாலை நுழைவாயில் பெற்றோர்களால் திறக்கப்பட்டதுடன், பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து சென்றமையால் பாடசாலை இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment