மைத்ரிபால சிறிசேன தூபமிட்டார் ஆனாலும் எடுபடவில்லை, மஹிந்த ராஜபக்ச ஒற்றை இரவில் 'மாட்டு' அரசியலை பேசு பொருளாக்கி விட்டார். வழமை போல, முஸ்லிம் சமூகமே முண்டியடித்துக் கொண்டு தமக்குத் துரோகமிழைக்கப்படுவதாகக் கருதுகிறது. ஆங்காங்கு கோபக் கொந்தளிப்பில் கருத்துக் கூறுகிறது. யோசனையை தற்போது ஒரு மாதம் தள்ளிப் போட்டிருப்பினும் கூட, மொட்டை ஆதரித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட, என்னப்பா இவனுகள் போற வழி வேற மாதிரியிருக்கே? என்று முணக ஆரம்பித்துள்ளார்கள்.
வழக்கம் போல இவை யாவும் உணர்ச்சிப்பெருக்கு என்றாலும், புதன்கிழமை மாலை மஹிந்த ராஜபக்ச முன்மொழிந்த மாடறுப்புத் தடையெனும் திட்டத்துக்கு அஸ்கிரிய சங்க சபா ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளது. ஆக, இலங்கையில் மாடறுப்புத் தடையென்ற விவகாரத்தை அரசியல் மாத்திரமன்றி சமயம் கலந்த விடயமாகவும் பார்க்க வேண்டியுள்ளது.
இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கு இருக்கும் பிரதான பிரச்சினையை இரு பகுதிகளாகக் கணிக்கலாம். ஒன்று, மாட்டிறைச்சி முஸ்லிம் சமூகத்தின் உணவுக் கலாச்சாரத்தில் செலுத்தும் தாக்கம். இரண்டாவது முஸ்லிம்களின் வர்த்தக – வியாபாரத்தில் வகிக்கும் பங்கு.
நாட்டில் இருக்கும் இறைச்சிக் கடைகளில் பெரும்பாலானவை முஸ்லிம்களாலேயே நடாத்தப்படுகிறது என்பது பெருவாரியான நம்பிக்கை. ஆகவே தான் முற்காலங்களில் பெரும்பாலும் ஹலால் சான்றிதழ் அவசியம் என்ற பிரச்சினையும் இருக்கவில்லை. நமது கருத்தாய்வுக்காக அந்த நிலை தொடர்வதாகவே கொள்வோம். மறு புறத்தில் உணவுப்பழக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் மாட்டிறைச்சியைப் பெறுவதற்கு உருவாகப் போகும் சவாலை சமூகம் இரு வேறு வகையில் பார்க்கிறது. ஒன்று, இது அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் தொடர் திட்டத்தின் ஒரு பகுதி, இன்னொன்று இந்திய அரசியல் வழிமுறையினைத் தழுவிய அடக்குமுறைக்கான ஆரம்பம்.
மஹிந்த ராஜபக்ச இலங்கையில் மாடறுப்பைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னாரா? அல்லது வரையறுக்க வேண்டும் என்று சொல்ல வருகிறாரா? அவர் மாட்டைச் சொன்னாரா? பசுவைச் சொன்னாரா? என பல தொழிநுட்பரீதியிலான வாதங்களுக்கு களம் திறந்தே கிடக்கிறது. எனினும், சிங்கள மொழி ஊடகங்களில் தொடர்ச்சியாக 'கவ (ගව) ' என்ற சொல் பயன்படுத்தப்படுவதனால் அது மாடும் உள்ளடங்கலான திட்டம் என்று புரியப்பட்டே தற்போதைய சூழல் அணுகப்படுகிறது.
எவ்வாறாயினும், மஹிந்தவின் மாடறுப்புத் தடைத் திட்டத்தை ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழு மாத்திரமே அங்கீகரித்திருக்கிறது. அது இன்னும் சட்டமாக்கப்படவோ, நாடாளுமன்றில் விவாதப் பொருளாகவோ உருவாகவில்லை. எனவே, அதற்கான கால அவகாசத்தில் இவ்விடயம் குறித்த மேலதிக விளக்கங்கள் வெளிவரலாம். ஆயினும், இந்தத் திட்டத்தினை மஹிந்த ராஜபக்ச முன் வைக்கிறார் என்ற அடிப்படையிலேயே இது முக்கியம் பெறுகிறது.
சரி, அவ்வாறாயின் முதலில் இது சமயரீதியில் எந்த வகையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்பதைப் பார்ப்போமாயின், முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் மத்தியில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கவழக்கம் குறைவின்றி காணப்படுகிறது. எனவே, இவ்விரண்டு சமூகத்தையும் புறந்தள்ளினால், இந்துக்கள் - பௌத்தர்களின் சமய ரீதியிலான அணுகுமுறை அவதானிக்கப்பட வேண்டியதாகிறது.
புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட பௌத்த தர்மத்தில் உயிரினங்களைத் துன்புறுத்துவது, கொடுமைப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதனடிப்படையில் பசுக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. காரணம், பசுவொன்றை பராமரித்துப் பார்த்துக் கொள்வது அனைத்து உயிரினங்களையும் பார்த்துக்கொள்வது போன்றாகும் என்றும் விளக்கவுரைகள் உள்ளன.
அத்துடன், மறுபிறப்பில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் என்ற அடிப்படையில் மாடுகளும் முந்தைய பிறப்புகளில் மனிதர்களாக இருந்திருப்பார்கள் என்ற எண்ணப்பாடும் உள்ளது. இதே நம்பிக்கை இந்து சமயத்தவர் மத்தியிலும் உள்ளது. மஹாயான பௌத்த நூல்கள் இதனைக் கடைப்பிடிப்பதை வலியுறுத்திக் கூறுகின்றன. எனினும், இலங்கையில் தேரவாத பௌத்தமே அதிகம் பின்பற்றப்படுகிறது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இருப்பினும் கூட, பண்டைய கால பழக்கவழக்கங்கள் பிராகிருத புராணங்கள் ஊடாக பசுவைக் கொல்வது அரக்கத்தனம் எனவும் காப்பாற்றுவது மனிதநேயம் எனவும் அறிவூட்டப்பட்டே வந்துள்ளது எனும் அடிப்படையில் குறித்த சமய போதனைகளைப் பின்பற்றுகிறவர்கள் இதனை மதிக்கிறார்கள். எனினும், தற்காலத்தில் இவ்விரண்டு சமய வழிமுறைகளைப் பிற்பன்றுபவர்கள் மத்தியிலும் பெருமளவான அசைவ உணவு விரும்பிகள் இருப்பதோடு அது தேசிய உணவுப்பழக்கத்தின் பகுதியாகவும் இருக்கிறது.
எனவே, இந்த இடத்தில் சமயத்துக்கு அடுத்தபடியாக தேசத்தின் கலாச்சாரம் என்ற விடயம் முன் நிறுத்தப்பட வேண்டியுள்ளது. நவீன கால இலங்கை வரலாற்றில் இதற்கு முன்பதாக மாடறுப்பு தடை செய்யப்பட்;டதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. ஆயினும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் தேசம் எனும் அடிப்படையில் பௌத்தர்கள் புனிதமாகக் கருதும் முக்கிய தினங்களில் மாடறுப்பு தவிர்க்கப்பட்டு வந்துள்ளது, அதற்கான பொது நியதியும் இருக்கிறது. 95 வீதமான மக்கள் இந்நியதிக்கு மதிப்பளித்தே வாழ்கிறார்கள். அதேவேளை, ஆங்காங்கு விதி மீறல்கள் இடம்பெறாமலும் இல்லை. அவ்வப்போது போயா தினங்களில் இறைச்சிக் கடையை திறந்து வியாபாரம் செய்த 'நானா' மார்களை தேரர்கள் சுற்றி வளைத்த சம்பவங்களையும் மறப்பதற்கில்லை.
இந்நிலையில்;, இனி இதை ஒரு சட்டமாக்க வேண்டும் மாடுகளை அல்லது பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற இந்த திடீர் அரசியல் எழுச்சி நிச்சயமாக பலருக்கு ஆச்சரியமான விடயமே. சிங்கள சமூகத்திலேயே அதற்கான எதிர்க் கேள்விகள் எழுப்பப்பட்டு இது வாதப் பொருளாக மாறியுள்ளது. முஸ்லிம் நாடுகளில் பன்றியிறைச்சிக்குத் தடை அது போல இலங்கையில் மாட்டிறைச்சிக்குத் தடையென்கிற அரசியல் மாயைக்காகவே இந்த முயற்சி நடக்கிறது என்றும், முஸ்லிம்களுக்கு மன உளைச்சலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு திட்டமிடப்படுகிறது என்றும் பின்னணியில் வேறு எதையோ திட்டமிடுகிறார்கள், இங்கிருந்து மாடுகளை ஏற்றுமதி செய்யப் போகிறார்கள், வேறு எங்கிருந்தோ இறக்குமதி செய்யப் போகிறார்கள் என பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டு வாத விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.
இதனை இன்னும் ஆழமாக, பொருளாதார ரீதியிலும் புரிந்து கொள்ளும் தேவை நமக்கிருக்கிறது. அந்த வகையில் கால்நடைகள் உற்பத்தி தேசிய பொருளாதாரத்தில் வகிக்கும் பங்கையும் அண்மைக்கால மாமிச உணவுப் பழக்க வழக்கம் குறித்தும் சற்று அவதானிப்போம். இலங்கை கால்நடை உற்பத்தி – சுகாதார திணைக்களத்தின் (Department of Animal Production and Health) உத்தியோகபூர்வ புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இதனை ஆராய்வதே தகும் எனக் கருதுகிறேன். அந்த வகையில் இறுதியாக 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்நடைகள் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இலங்கையில் அவ்வாண்டில் கால்நடைகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வருடங்களை விட 3.9 வீதம் அதிகரித்துள்ளது. இதனூடாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 (GDP) வீத பங்களிப்பை இத்துறை வழங்குகிறது. மத்திய வங்கியின் ஆண்டறிக்கையும் இதனையே உறுதிப்படுத்துகிறது.
இதேவேளை, இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 30 வீதமே விவசாய நிலமாகக் கணிக்கப்படுகிறது. அந்த 30 வீதத்தின் 70 வீதம் பயிர்களுக்கான விவசாய நிலமாக, எஞ்சியிருக்கும் பகுதியே கால்நடை வளர்ப்பில் பங்கேற்கிறது. இதேவேளை, 2017 அளவில் ஒரு வருடத்தில் தனி நபர் உட்கொள்ளும் கோழி இறைச்சியின் அளவு 7.3 கிலோ கிராமாக உயர்ந்துள்ளதுடன் அதற்கு முந்தைய வருடத்தில் 6.9 கிலோ கிராமாக இருந்துள்ளது. அந்த வகையில் நாட்டில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்து வருகிறது. மேற்கத்தேய பாணியிலான நவீன உணவகங்களின் வருகையும் இதில் பங்களிக்கிறது.
பண்டைய காலந்தொட்டு இலங்கை மக்களின் வாழ்வியலில் கால்நடை வளர்ப்பு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதுடன் தொழில்சார் வழியாகவும் இருந்துள்ளது. பசுவிலிருந்து பால் கறக்கப்பட்ட அதேவேளை மாடுகள் போக்குவரத்துக்கும் சாணியைக் கொண்டு உரமும் என மக்கள் வாழ்வியலோடு கால்நடை உற்பத்தி பின்னிப்பிணைந்தே இருந்து வந்துள்ளது. ஏனைய மதத்தவர்களின் பண்டிகைக் காலத்தை இலக்காக வைத்து மாடு வளர்ப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சிங்கள விவசாய குடும்பங்கள் இ;ன்னும் இருக்கின்றன.
இதனை சுருக்கமாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள ஏதுவாக மீண்டும் அதே அறிக்கையை நோக்கின் 2017ம் ஆண்டில், இலங்கையின் 9 மாகாணங்களிலும் மொத்தமாக 332,335 பதிவு செய்யப்பட்ட இடங்களில் மாடு வளர்ப்பு இடம்பெற்றுள்ளதுடன் 27,520 இடங்களில் எருமை மற்றும் 79,675 இடங்களில் ஆடு வளர்ப்பும் இடம்பெற்றுள்ளது. இதற்கு மேலதிகமாக கோழி, வாத்து போன்ற பறவை வளர்ப்பு வர்த்தக ரீதியாக 32,802 இடங்களிலும் வீடுகளின் பின்புறங்களில் 155,455 இடங்களிலும் இடம்பெற்றுள்ளது. அதற்கு முந்தைய மூன்று வருடங்களில் இத்துறையின் வளர்ச்சி சம அளவில் இருந்தது எனும் அடிப்படையில் 2017 – 2020 வரையான காலப்பகுதியின் மேலதிக வளர்ச்சியைப் புறந்தள்ளினாலும் 2017 அளவில் கால்நடை உற்பத்தி இலங்கை மக்களின் வாழ்வியலில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.
மாடு வளர்ப்பைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்திலேயே அதிக இடங்களில் தொழில்ரீதியான முக்கியத்துவம் இருக்கிறது. இரண்டாவது இடத்தை வட மாகாணமும் மூன்றாவது இடம் வட மேல் மாகாணத்துக்கும் இருக்கிறது. எனினும், அனைத்து மாகாணங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இத்துறையி;ல் ஈடுபட்டு வந்துள்ளார்கள் எனும் அடிப்படையில் இலங்கையில் திடீரென மாடறுப்புக்குத் தடை விதிப்பதாயின் இம்மக்களுக்கு மாற்று வழியொன்றைத் தர வேண்டியதும் அரசின் கடமையாகிறது.
2017 புள்ளிவிபரத்தின் அடிப்படையில் அவ்வாண்டில் மாடுகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வருடத்தை விட 2 வீதத்தால் அதிகரித்துள்ளது. எருமைகளின் எண்ணிக்கை 4 வீதத்தால் அதிகரித்துள்ள அதேவேளை பால் தயாரிப்பு 6 வீதத்தால் உயர்ந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலை இரண்டு வருடங்களுக்குள் திடீர் மாற்றம் காணக்கூடிய வாய்ப்போ அல்லது சரிந்து வீழ்ந்ததற்கான ஆதாரங்களோ இல்லை. மாறாக 2018ல் 1,462,988 ஆக இருந்த மாடுகளின் எண்ணிக்கை 2019ல் 1,527,649 ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பொருளாதார ரீதியாக இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கையிலெடுத்துள்ளார் என்ற ரீதியில் அதனூடாக தேசம் கண்டுகொள்ளப் போகும் அடைவும் இழப்பும் கணிப்பிடப்பட்டாக வேண்டும். அதைச் செய்யக் கூடிய மிகத் திறமையானவர்கள் புடை சூழவே நடைமுறை அரசு இயங்குகிறது எனும் அடிப்படையில் பொருளாதார தாக்கத்தினை விடவும் முக்கியமான தேவை கட்டாயம் இருக்க வேண்டும்.
முஸ்லிம்களால் இலங்கையில் பௌத்த கலாச்சாரம் சிதைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு 2012 முதல் முன் வைக்கப்பட்டு வந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை இனவாதத் தூண்டல்களுக்காகவே பேசப்பட்டு வந்துள்ளன. அவற்றில் பல அடிப்படை ஆதாரங்கள் அற்றவை. ஆயினும், தன்னை பௌத்த தர்மத்தின் காவலனாக நிறுவ வேண்டும் என்ற எண்ணப்பாடு மஹிந்த ராஜபக்சவின் நீண்ட கால பிரயத்தனம். அதனைத் தவறாக முன்னெடுத்ததன் விளைவிலேயே 2015ல் அவரது ஆட்சி முடிவுக்கு வந்ததே தவிர, ஏனைய பெரும்பாலான விடயங்களில் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் அவரை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில், மஹிந்த ராஜபக்ச தவிர வேறு யார் இவ்வாறு ஒரு யோசனையை முன் வைத்தாலும் அது அரசியல் தளத்தில் உடனடி சலசலப்பை உருவாக்கியிருக்கும். ஆயினும், தற்போது அது அடக்கி வாசிக்கப்படுகிறது. ஏனெனில், ஏலவே சிங்கள தேசியத்தின் மீளெழுச்சியை வித்திட்டவர்கள் என்ற தளத்தில் இருக்கும் ராஜபக்ச குடும்பத்தினர் மீதான பௌத்த அனுதாபத்தை எதிர்ப்பது அரசியல் ரீதியில் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித பலனையும் தராது. இன மையக் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் தேச அரசியலில் பொதுவுடமை அரசியல் எடுபடுவதற்கான வாய்ப்புகளும் அரிதாகிக் கொண்டே சொல்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஊடாக பொதுவுடைமை. முற்போக்கு அரசியல் தளங்கள் கண்டுள்ள பாரிய சரிவு விரைவில் நிமிரக்கூடியதா? என்பது உடனடியாக விடை சொல்ல முடியாத கேள்வியாகும். அதேவேளை, உரிமைகளையும் சலுகைகளையும் குழப்பிக் கொண்டு, ஆட்சியாளர்களின் நெகிழ்வுப் போக்கில் பல தசாப்தங்களாக வாழ்ந்து பழகிய தற்கால முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இவ்வாறான அதிர்ச்சிகள் பல இன்னும் எதிர்பார்க்கப்பட வேண்டியுள்ளது.
மாட்டிறைச்சி என்பது மாற்றீடு காணக்கூடிய உணவே. ஆனாலும், அடுத்தடுத்து வரக்கூடிய விடயங்களை எதிர்கொள்ளும் மன தைரியம் அவசியப்படுகிறது. அதில் சில நாமே இழுத்துப் போட்டுக் கொண்ட சாபங்களாக இருக்க, இன்னும் சில நமது அரசியல் தலைமைகள் வலிந்து வாங்கித் தரும் துன்பங்களாகவும் இருக்கப் போகிறது. எவ்வாறாயினும், முஸ்லிம் சமூகத்தைக் காயப்படுத்துவது சிங்கள மக்களின் உணர்வுத்தூண்டலுக்கு அரசியல் ரீதியாக அவசியப்படுகிறது என்ற நிலை இன்னும் மாறவில்லை அல்லது அதனை மாற்றுவதற்கு அதை விரும்பும் அரசியல்வாதிகள் விரும்பவில்லை.
இந்நிலையில், தேசத்தின் முன்னேற்றத்தையும் அவசியப்படும் சிந்தனை மாற்றங்களையும், அரசியல் அனுகூலங்களையும், சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் ஆக்கபூர்வமான திட்டங்களையும் கொண்ட செயற்திறன் மிக்க சமூக நகர்வு கட்டாயப்படுத்தப்படுகிறது.
அது வெறுமனே மாட்டிறைச்சி மீதான காதலுக்காகவல்ல, மாடே சிரிக்குமளவுக்கு தாழ்ந்து போயுள்ள நமது அரசியலின் அடிப்படையைத் திருத்துவதற்காக.
-Irfan Iqbal
Chief editor, Sonakar.com
1 comment:
ஆழமான கருத்துக்கள்.நன்றாக ஆய்வு செயது கருத்துரைத்துள்ளீர்கள்.சிந்திக்க நிறைய விடயங்களை உள்ளடக்கி உள்ளீர்கள்.இருப்பினும் ஒருமாத கால அவகாசம் முடிவெடுக்க நேரம் ஒதுக்கி இருப்பது திடீர் திருப்பமாக கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.அதைப்பற்றியும் கொஞ்சம் ஆய்வுக்குற்டுத்தி எழுதி இருக்கலாமே எ சிறு ஆதங்கமும் வருகிறது.எனது கருத்து பிழையாக இருப்பின் மன்னிக்கவும்.ஜனநாயகத்தின் 3தூண்களும் ஒருவரிடம் சிறைப்பட்டு விட்டது..இதில் Sltj வழக்குப் போட நினைத்திருப்பது வெற்றி அளிக்குமா எஎன்பது சந்தேகத்துக்க்குரிய விடயமே.சில வேளை இந்தக்கருத்து வாபஸ் ஆகலாம் என்பது எனது எதிர்பார்ப்பு. ஏனெனில் இன்னும் சட்டமாக்கப்படவும் அவசரப்படவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம்.
Post a Comment