18ஐப் பாராமலிருந்து.. 19ஐப் புரியாமலிருந்து.. 20ஐப் பற்றிப் பேசாமலிருக்கும் அளவு நல்லது என மௌனம் காக்கிறார்கள் முஸ்லிம் தலைவர்கள்.
தம் இருப்பு, உரிமைகள் சம்பந்தப்பட்ட அரசியலமைப்பைப் பற்றி பேசுவதை விட அதாவுல்லாஹ்வின் ஆடையைப் பற்றி பேசுவது சுலபம் என்பதால் மக்களும் வேறு பக்கமே திரும்பியிருக்கிறார்கள். அடிப்பான் எனத் தெரிந்தும் கன்னத்தைக் கொடுக்காமலிருப்பதும் சரி தான். ஆனாலும், இந்த 18, 19, 20 எல்லாம் தம்மையும் பாதிக்கக் கூடியது என்பதை அறிந்தாவது வைத்திருப்பது அவசியமாகிறது.
1948ம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தேசம் இதுவரை மூன்று அரசியலமைப்புச் சட்டங்களைக் கண்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்னிருந்த டொனமூர் யாப்பினை சீர்திருத்தி 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோல்பரி யாப்பு இலங்கை குடியரசுப் பிரகடனத்துடன் 1972ம் ஆண்டு பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசால் மாற்றப்பட்டது.
அதன் பின்னர் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் தேர்தலை வென்ற ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியில் இலங்கை சோசலிஷ குடியரசின் தற்போதிருக்கும் அரசியலமைப்பு அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அரசியலமைப்பில் இதுவரை 19 தடவைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 20ம் திருத்தச் சட்டம் குறித்து பேசப்பட்டு வருகிறது.
1931 முதல் 1947 வரை அமுலில் இருந்த டொனமூர் யாப்பில் மாற்றங்களைக் கோரிய அக்கால தலைவர்கள் மத்தியிலும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றிய போராட்டம் காணப்பட்டிருந்தது. சிங்கள ஆதிக்கத்தை நிறுவுவதற்கே முயற்சி நடைபெறுவதாக ஜி.ஜி. பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்திருந்தார். இதற்கு பதிலளித்த டி.எஸ்;. சேனாநாயக்க, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபடும் 'சிலோனிய' சிந்தனையையே தான் நிறுவ முனைவதாகவும் சிங்கள ஆதிக்கத்தை உருவாக்கவல்ல என தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
இக்கால கட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் டி.எஸ். சேனாநாயக்கவுக்குத் தமது முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஈற்றில், சிலோனிய சிந்தனையை ஏற்காவிட்டாலும் தமிழன் என்ற சுய கௌரவத்துடன் சிங்கள தலைவர்களுடன் கூட்டிணைந்து பணியாற்றத் தயார் என பொன்னம்பலமும் தன் அரசியல் நிலைப்பாட்டை மாற்றியிருந்தார். 1945ம் ஆண்டு 'சுதந்திர இலங்கை' பிரேரணையும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது. அது பற்றி விளக்கும் ஐவர்; ஜெனிங்ஸ் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் குறித்த வெற்றியை டி.எஸ் சேனாநாயக்க மீது வைக்கப்பட்ட நம்பிக்கை என வர்ணிக்கத் தவறவில்லை.
காலனித்துவ ஆட்சிக்காலத்திலும் சிறுபான்மை சமூகங்கள் தமது உரிமைகளுக்கான போராட்டம் தொடர்பில் எத்தனை விழிப்புணர்வுடன் இருந்திருப்பார்கள் என்ற மீளாய்வுக்கு இக்கால கட்ட அரசியல் நிகழ்வுகள் உதாரணங்களாக அமைகின்றன. இச்சந்தர்ப்பத்தில் தேசிய பலம் என்பதன் அவசியம் கருதி சிங்களவாதத்தைத் தேர்வு செய்திருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவும் 1948ல் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ். சேனாநாயக்கவின் அமைச்சரவையில் பங்கேற்றிருந்தார்.
தேசிய அரசியல் பல்வேறு காரணிகளின் அடிப்படையிலேயே உருப்பெறுகிறது என்பதற்கு 1923 அளவில் இந்திய வம்சாவளி தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை ஆதரித்து வந்த அதே டி.எஸ். சேனாநாயக்க அரசியல் ரீதியாக 1949ல் மாற்று முடிவெடுத்து, பத்து வருட கட்டாய வதிவிட சட்டத்தைக் கொண்டு வந்திருந்தமையையும் மேற்கோள் காட்டலாம். இக்காலப் பகுதியில் தொழிற்சங்கவாதிகளின் ஆளுமை அதிகரித்திருந்த அதேவேளை மறுபுறத்தில் தமிழ் தேசியவாத சிந்தனையும் விருட்சமாக வளர்ந்து வந்திருந்தது.
இதன் விளைவில் இலங்கை தமிழரசுக் கட்சியும் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரு துருவங்களாக வளர்ந்து இரு இனங்கள் சார்ந்த தீவிர கருத்துக்களைப் பேசி, செயலாற்றி வந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியெனும் பேரினவாத கட்சியை உருவாக்கும் நிமித்தம் சேனாநாயக்க அரசிலிருந்து விலகிச் சென்ற பண்டாரநாயக்க அதில் ஓரளவு வெற்றி கண்டிருந்தார். ஆனால் மக்கள் மனங்களில் விதைக்கப்பட்ட பிரிவினைவாத தீ ஏதோ ஒரு வகையில் வளர்ந்து தமிழருக்கான சுயாட்சிப் பகுதி பிரகடனம் வரை சென்றது.
பண்டாரநாயக்கவின் நகர்வும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கமும் இனவாத அரசியலை நாட்டில் பலப்படுத்திய முக்கிய நகர்வாகவே கணிக்கப்பட வேண்டும். அதனையே தனது முதலீடாகக் கண்ட பண்டாரநாயக்க அடித்தட்டு சிங்கள மக்களைக் கவர்ந்ததுடன் பொதுவாகவே சிங்கள உணர்வு அதிகமிருந்த தலைவராக அடையாளங்காணப்பட்டிருந்தார். இப்பின்னணியில் சிங்களத்தோடு தமிழையும் தேசிய மொழியாக ஏற்று வந்திருந்த அவர் 50களின் நடுப்பகுதியில் தன் நிலையை மாற்றி சிங்களம் மாத்திரம் என்ற நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தலானார். அத்துடன் தன்னையும் தன் கட்சியையும் பௌத்த மக்களின் காவலர்களாக சித்தரிக்கவும் அவர் தவறவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி முதலாளித்துவ கொள்கைகளோடு ஒன்றிப் போயிருந்ததால் அடி மட்ட மக்கள் மத்தியில் பௌத்த வாத சிந்தனை எடுபட்டிருந்தது. இருப்பினும் கூட இலங்கை மக்கள் அதனையும் அங்கீகரித்திருந்தனர் என்பதை வரலாறு எடுத்தியம்புகிறது. 1956ல் இ;;டதுசாரிகளுடன் கூட்டிணைந்து ஆட்சியைக் கைப்பற்றிய பண்டாரநாயக்க கொலையானதையடுத்து 1960 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார் அவரது பாரியார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க.
எனினும் 1965 பொதுத் தேர்தலில் மீண்டும் டட்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. இந்த மாற்றத்திலிருந்து மீண்டும் தேசியவாதத்துக்கு உந்தப்பட்ட மக்கள் 1970ல் முழுமையான தேசியவாத கொள்கைகளை அறிமுகப்படுத்திய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிடமே ஆட்சியை ஒப்படைத்திருந்தனர். இம்முறை பொருளாதார தேசியமயமாக்கலை தீவிரமாக முன்னெடுத்திருந்த அவரது நடவடிக்கைகள் அடி மட்ட மக்களை வெகுவாகப் பாதித்திருந்தது. 1972ம் ஆண்டு மே மாதம் தேசத்தை 'குடியரசாகப்' பிரகடனப்படுத்தி தனது ஆட்சிக்காலத்தை நீடித்துக் கொண்ட போதிலும் 1977ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் தோல்வியைத் தழுவினார். அதனூடாக ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி உருவானது.
1972ல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆடசியில் அமுலுக்கு வந்த அரசியலமைப்பை 1978ல் மாற்றியமைத்த ஜே.ஆர், இலங்கைக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தற்போது வரை அமுலில் இருக்கும் இந்த அரசியலமைப்பில் இதுவரை 19 திருத்தச் சட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அண்மைக்காலங்களாக மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக அறியப்பட்டவை 18 மற்றும் 19. அத்துடன் தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20.
சுதந்திரத்துக்குப் பின்னரான அரசியல் மாற்றங்களுக்குள் இருக்கும் பொதுத்தன்மையையும் மேற்சொன்ன நிகழ்வுகள் ஊடாக அறிந்து கொள்ளலாம். ஆட்சியாளர்கள் பற்றிய மக்களின் சிந்தனை மாற்றத்துக்கு ஐந்து, ஏழு மற்றும் 11 வருடங்கள் வரை தேவைப்பட்டிருப்பதை ரணசிங்க பிரேமதாசவின் வரவு வரை கணக்கிட்டுப் புரிந்து கொள்ளலாம். எவ்வாறாயினும் பட்டறிதலே மக்கள் மன மாற்றத்துக்கும் சிந்தனை மாற்றத்துக்கும் வித்திட்டிருக்கிறது என்றும் இணங்கிக் கொள்ளலாம். எனவே, ஆட்சி மாற்றம் என்பது இலங்கை அரசியல் வரலாற்றில் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் சாதாரண நிகழ்வுகளாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.
1994ல் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியானதிலிருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு அல்லது நீக்கம் குறித்த பேச்சு தொடர ஆரம்பித்தது. ஆயினும், அரசியல் களத்தில் அது சாத்தியமற்றதொன்றாகவே பார்க்கப்பட்டிருந்தது. இதனை வெகுவாக சாதகமாக்கிக் கொண்ட மஹிந்த ராஜபக்ச, மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த தனது ஆட்சிக்காலத்தில் 18வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
2010 செப்டம்பர் 8ம் திகதி நிறைவேற்றப்பட்ட 18 பற்றியும் மக்களுக்குப் பெரிய அளவில் விழிப்புணர்வு இருக்கவில்லை. யுத்த வெற்றியென்ற மேக நிழலில் கொண்டுவரப்பட்ட 18ம் திருத்தச் சட்டத்தை கண்மூடித்தனமாக ஆதரவளித்துத் தமது ராஜ விசுவாசத்தை ஏட்டிக்குப் போட்டியாக விளம்பரப்படுத்தினர் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள். பின்நாளில் பிரிந்து சென்ற முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் அந்நாளில் பணப்பெட்டிகள் கைமாறப்பட்டதாகக் கூறிய கதைகளைப் புறந்தள்ளியே செல்கிறோம்.
18ம் திருத்தச் சட்டத்தின் மிக முக்கிய அம்சமாக அமைந்திருந்தது, ஒரே நபர் ஜனாதிபதி பதவி வகிப்பதற்கு இருந்த கால எல்லை நீக்கமாக இருந்தது. தெளிவாகச் சொல்வதானால் ஒரே நபர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்ற வரையறை நீக்கப்பட்டிருந்தது.
தம்மின மக்களின் வாக்குகளை வைத்து வியாபாரம் செய்வதில் வல்லவர்களான முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள், இக்காலத்தில் சர்வாதிகாரியே நாட்டையாள வேண்டும் என தெரிவித்து வந்தார்கள். அவ்வாறு தனி நபரிடம் அதிகாரம் குவிக்கப்பட்டிருந்தாலேயே தமக்குத் தேவையான 'பேரங்கள்' இலகுவாக நடக்கும் என்பது அவர்களது கணக்கு. ஆனாலும் 2015ல் மஹிந்த ராஜபக்ச தோல்வி கண்டார். முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும் 18ஐ ஆதரித்தது தவறு என ஒப்பாரி வைத்தனர். மன்னிப்பும் கேட்டனர்.
அந்த மன்னிப்பை 2013ல் கேட்டிருந்தால் கூட பரவாயில்லையென்று மக்கள் விட்டு விடலாம், ஆனால் 2014 டிசம்பரில் நாடு தழுவிய ரீதியில் எழுந்திருந்த மஹிந்த எதிர்ப்பலையைப் பார்த்த பின்னரே அவர்களுக்கு ஞானம் வந்திருந்தது. எனவே, அது அடிக்கடி சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகவும் இருக்கிறது. ஏனெனில் இடைப்பட்ட ஐந்து வருடங்களில் தவறு என்றவர்கள், இப்போது ஆரம்பித்திருக்கும் புதிய யுகத்தில் மீண்டும் அதனைச் சரி காணத் துணிந்து விட்டார்கள்.
வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறத் துடித்த தேசிய நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து பணியாற்றிய அன்றைய முஸ்லிம் தலைவர்களுக்கும், தனி மனித நலனுக்காகவும் தமது சுய இருப்புக்காகவும் ஐந்து வருடங்களுக்குள் நிலை மாறும் இன்றைய முஸ்லிம் தலைவர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது மக்களுக்கும் அவசியமாகிறது. என்றாலும், அன்றும் - இன்றும் மக்கள் இது போன்ற விடயங்களை தலைவர்களிடமே விட்டுவிடுவதால் முஸ்லிம் தலைவர்களுக்கு அந்த சுதந்திரம் தாராளமாக இருக்கிறது.
ஆகவே, 18ல் என்ன இருந்தது, 19ல் என்ன மாறியது, 20ல் எது மாறப்போகிறது என்பதை ஆழமாக அறிந்து கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. ஒரு வகையில் அடுத்த தடவை ஆட்சி மாறியதும் 21 வரும் என்று மக்களுக்கு வெறுப்புமிருக்குமோ என்றும் சிந்திக்கத் தவறவில்லை. என்றாலும், 19 ஐ நீக்கி 18ஐ அமுலுக்குக் கொண்டு வருவது அல்லது 20 ஊடாக இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் மீண்டும் நாடாளுமன்றுக்குள் வருவது தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுந்தரப்பைச் சேர்ந்த வாசுதேவ போன்றவர்களே பேசுவது குறித்தாவது கட்டாயம் கவனம் செலுத்த வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது.
அரசல் புரசலான புரிதலுக்கு அப்பால் 19ம் திருத்தச் சட்டம் ஊடாக பல்வேறு அதிகாரக் குறைப்புகள் இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. என்னதான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தாலும் பொலிஸ் மா அதிபரை நீக்க முடியாத சிக்கல், தேர்தல் ஆணைக்குழுவை ஆட்டிப்படைக்க நினைத்தாலும் ரட்ணஜீவன் ஹுலை விலக்க முடியாத சூழ்நிலையென பல சிக்கல்கள் வெளிப்படையாகத் தெரிவதால் மக்களும் சிந்திக்கிறார்கள்.
சுதந்திரத்துக்கு முன்னைய சோல்பரி யாப்பிலிருந்து ஆணைக்குழுக்கள் பற்றி பேசப்படுகிறது, இயங்கியும் வருகிறது. அதனூடாக நன்மையடையும் மக்களுக்கே சுயாதீன ஆணைக்குழுக்களின் அவசியமும் நன்மையும் புரியும். 18ம் திருத்தச் சட்டம் ஊடாகவும் அன்றைய ஜனாதிபதி, தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதானிகளின் நியமனங்களைக் கட்டுப்படுத்த முனைந்திருந்தார் என்ற வரலாற்றை ஒப்பிடுகையில் இப்போதைய – அப்போதைய எண்ணப்பாடுகளின் ஒற்றுமையையும் புரிந்து கொள்ளமுடியும்.
எவ்வாறாயினும், தமக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் இதற்கும் சேர்த்தே அங்கீகாரமளிpத்துள்ளதாக ஜனாதிபதியும் - பிரதமரும் சகாக்களும் சொல்கின்றனர். ஒருவகையில் அவர்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட, ஆட்சியில் பங்கு கிடைக்காது என்று தெரிந்தும் மக்கள் வாக்களித்துத் தெரிவு செய்த முஸ்லிம் பிரதிநிதிகள் யாரிடம் அனுமதி பெற்று 18ஐத் தழுவிய 20க்கு ஆதரவளிக்கப் படாத பாடு பட்டுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது காலத்தால் அறியப்பட வேண்டிய விடையாக இருக்கிறது.
2015 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வந்த 19ம் திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சம் 18ல் ஜனாதிபதிக்காக சுவீகரிக்கப்பட்ட அதிகாரங்களைக் குறைப்பதாகும். அதனால் தான் மைத்ரிபால சிறிசேன பல வகையில் ஒரு எல்லைக்குள் மாத்திரம் செயற்படும் நிர்ப்பந்தம் காணப்பட்டிருந்தது. அவ்வாறில்லையாயின் 2018 ஒக்டோபர் பிரளயம் போன்று பல சம்பவங்களை அவர் நடாத்திக் காட்டியிருப்பார் என்பது, பொறுப்பெடு வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன் என்று பூஜிதவுக்கு சொல்லவில்லையென்பதோடு நிறுத்தாமல் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அடிக்கடி பார்வையாளராக போகும் அவரது செயற்பாட்டிலிருந்தே புரிந்து கொள்ளக் கூடியது.
இப்படியான அரசியல் சூழ்நிலைகளின் போதும் கூட லைவ் நிகழ்ச்சியில் பார்லிமன்டில் ஏதாவது கூச்சல் சத்தம் கேட்டால் மாத்திரமே அதிகம் பேர் திரும்பிப் பார்க்கிறார்கள். தாம் சார்ந்த தேசத்தின் நிர்வாகம் எதை நோக்கிப் போகிறது? என்ன மாற்றங்கள் நடக்கிறது? என்பதை அவதானிப்பதும் மக்களுக்குக் கடமையாகிறது.
பொத்தான் போடாத அதாவுல்லாஹ்வின் வேஸ்ட் கோர்ட்டுக்குள்ளும் சங்கதியுண்டு, துருக்கித் தொப்பி போட விடாத நீதிமன்றுக்கு எதிராகப் போராடிவிட்டு இன்றளவில் கோர்ட்டு சூட்டு போட்டு சத்தமில்லாமல் அமர்ந்திருக்கும் முஸ்லிம் தலைவர்களின் கட்டாய மௌனத்திலும் சமாச்சாரம் உண்டு.
- Irfan Iqbal
Chief Editor (Sonakar.com)
No comments:
Post a Comment