கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைகுட்பட்ட ஓட்டமாவடி பொது நூலகத்தில் நிறுக்கும், அளக்கும் உபகரணங்களை சரிபார்த்து முத்திரை பதிக்கும் வேலைகள் இடம்பெற்று வருவதினால் நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்கள் பெரிதும் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக வாசகர்கள் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றினை நூலகப் பொறுப்பாளரிடம் கையளித்துள்ளனர்.
சில நாட்களாக நூலகத்தின் வாகனத் தரிப்பிடம், நுழைவாயில், வரவேற்புப் பகுதி, பத்திரிக்கை வாசிப்புப் பகுதி போன்றவற்றில் நிறுக்கும் அளக்கும் உபகரணங்களை சரிபார்த்து முத்திரை பதிக்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன இதனால் வாசகர்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டி மகஜர் ஒன்றினை நூலகரிடம் கையளித்துள்ளனர்.
இது தொடர்பாக அளவை, நிறுவை அலுவலகரிடம் நூலகப் பொறுப்பாளர் தெரியப்படுத்தி, வாசகர்களுக்கு இடையூறு இல்லாத நூலகக் கட்டிடத்தின் பொருத்தமான இடத்தை நூலகர் வழங்கிய போது அலுவலகரின் உதவியாளர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் நூலகரிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக நூலகர் தெரிவித்தார்.
வாசகர்களின் நலன்கருதி குறித்த நடவடிக்கையினை பொருத்தமான இடத்துக்கு மாற்றக் கோரி முறைப்பாடு ஒன்றினை நூலகர் பிரேதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment