மாற்றம் ஒன்றே மாறாதது..! - sonakar.com

Post Top Ad

Friday, 14 August 2020

demo-image

மாற்றம் ஒன்றே மாறாதது..!

pWu07aQ

2015 மக்கள் எழுச்சியைத் தம் சுயநல அரசியலுக்காகத் தூக்கிச் சாப்பிட்ட முன்னைய ஆட்சியாளர்கள் இருந்த தடமில்லாமல் போய் விட்டார்கள். இதைவிடத் தெளிவாக மக்கள் தீர்ப்பளிக்க முடியாது.


2010 – 2015 வரையான ஆட்சி திசை மாறிப் பயணித்த போதும் மக்கள் இவ்வாறே முடிவெடுத்தார்கள், யுத்த வடுக்களைத் தாண்டிய அபிவிருத்தியின் பால் சென்றிருக்க வேண்டிய அரசியல் பயணம், அதற்கடுத்த தடவை அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக திசை மாறியது. அங்கு தான் மக்கள் விரக்தியடைந்தார்கள், தம் அதிருப்தியை வெளியிட்டார்கள்.


அங்கு வீழ்ந்த ராஜபக்ச சகோதரர்கள் திரும்பவும் புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இம்முறை பழைய வழி எவ்விதத்திலும் அவசியமில்லையென்பது எதிர்பார்ப்பு. தமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனவாத நடவடிக்கைகள், குறிப்பாக முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் யாவும் 'சதி'யென மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கிறார். இறுதியாக பாதிக்கப்பட்ட திகனயிலும் மக்கள் அதை நம்ப ஆரம்பித்து விட்டார்கள், கண்டி சமூகப் பெருந்தகைகள் முழுமையாக நம்பி பொதுத் தேர்தலில் களமிறங்கிப் பணியாற்றினார்கள். ஆதலால், நாட்டின் ஏனைய பிரதேச மக்களும் அதனை நம்ப வேண்டும்.


இவ்வாறு கடந்த காலத்தை மறந்தாலும், புதிய எதிர்காலம் எது? என்பதன் பின்னணியில் பல கேள்விகள் - பதில்கள் உண்டு. மிக முக்கியமாக, தென்னிலங்கை ஆட்சியாளர்கள் விரும்பும் முஸ்லிம் சமூகத் தலைமை எவ்வாறான பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு ராஜபக்ச சகோதரர்கள் தெளிவான விடையை முன் வைத்திருக்கிறார்கள். அலி சப்ரி!


எதிர்பார்க்கப்பட்டது போன்றே அவருக்கு நீதியமைச்சை வழங்கி கௌரவித்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். வெறுமனே நன்றிக்கடன் என்பதற்கு அப்பால், ஆட்சியாளர்களுக்குப் பிடித்த பல பண்புகள் அலி சப்ரியிடம் இருக்கின்றன. பௌத்த பேரினவாதம் என்ற எல்லைக்கப்பால் மஹிந்த சகோதரர்களுடைய 'தேசிய' பார்வையுடன் அலி சப்ரி முழுமையாக ஒத்துப் போகிறார்;. கொரோனா ஜனாஸா எரிப்பு விடயத்தைக் கூட முஸ்லிம் சமூகம் தமக்கான பிரத்யேக பிரச்சினையாக எடுத்து உணர்வுகளைக் கொட்டி வந்த வேளையில் ஏனைய சமூகங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அவ்வாறே பார்க்க வேண்டும் எனவும் அலி சப்ரி கூறியிருந்தார்.


இன்னும் கூட, அதிகாரிகள், அறிவாளிகள் எல்லாம் சென்று பேசிப் பார்த்தாலும் கூட ஈற்றில் முடிவெடுக்க வேண்டியவர்கள் என்ன முடிவை எடுத்தார்களோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியது கடமையெனவும் விளக்கமளித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் நீதியமைச்சர் என்கிற பதவி முன்னர் ரவுப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டதை விட எவ்வகையில் வித்தியாசமானது? என்ற ஒரு கேள்வியும் தோன்றும். எவ்வாறாயினும் அலி சப்ரிக்கு வழங்கப்பட்ட இப்பதவி சமூகத்தால் பார்க்கப்படும், பேசப்படும் அளவுக்கு ரவுப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட போது பேசப்படவில்லை. ஏனெனில் இருவரும் வௌ;வேறு அரசியல் தளங்களிலிருந்தும் சிந்தனை வட்டத்திலுருந்தும் வருகிறார்கள்.


ஆக, தனக்குக் கிடைத்த கல்வியமைச்சர் பதவியைப் பயன்படுத்தி சிறுபான்மை சமூகங்களுக்கு நல்லது செய்த பதியுதீன் மஹ்மூத் போன்று, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து தேசத்துக்கு அளப்பரிய சேவையாற்றிய ஏ.சி.எஸ் ஹமீத் போன்று அலி சப்ரியும் இப்பதவியூடாக நீதித்துறைக்குத் தம்மாலான நல்லதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஒவ்வொரு வழக்கும் சாதாரண நீதிமன்றிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை எவ்வகையில் கையாளப்படுகிறது, அங்கு ஏற்பட வேண்டிய மாற்றங்கள் போன்றவை குறித்தும் அறிவும் அனுபவமும் உள்ளவர் என்ற ரீதியில் அதனை அவரிடம் எதிர்பார்க்கலாம்.


தற்சமயம், ராஜபக்ச அரசின் மீள் ஆரம்பத்தினை நேர் கொண்ட பார்வையில் எதிர்கால நோக்கோடு பார்ப்பதே முஸ்லிம் சமூகத்துக்கு அவசியமாகிறது. சரணாகதி அரசியலின் சாயம் முழுமையாக வெளுக்கவில்லையென்ற போதிலும் தேசிய சிந்தனைப் பார்வையில் நாடு தழுவிய மாற்றங்கள் உருவாகும் என்பது என் கணிப்பு.


2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியான பின் ஏற்பட்ட சில அடிப்படைக் கொள்கை மாற்றங்கள் அதற்கு முன்பு இலங்கை அரசியலில் எதிர்பார்க்கப்படாதவையாகவே இருந்தது. குறிப்பாக வெளி நாட்டு உறவு வரையறையை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் திருப்பி சீனாவுடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்ட நட்;பு யுத்த நிறைவுக்கும் அதன் பின் நாடு கண்ட அபிவிருத்திக்கும் மிக அடிப்படையாக அமைந்திருந்தது.


பிரேமதாச முதல் ரணில் விக்கிரமசிங்க வரை திரும்பத் திரும்ப மாட்டிக் கொண்டு தவித்த வட்டத்திலிருந்து வெளியேறிய ராஜபக்ச சகோதரர்கள் மாற்று வழியில் நாட்டில் ஓரளவு சுதந்திரத்தை ஏற்படுத்தினார்கள் என்பது மறுக்க முடியாதது. அதேவேளை, கொஞ்சம் கூட எதிர்பாராத வகையில் முஸ்லிம் சமூகம் வதைக்கப்பட்ட அந்தக் கால கட்டம் தற்போது கடந்து விட்டது என்பதால் அதனைக் கெட்ட கனவாக நினைத்து மறப்பதிலும் தவறில்லை. 2014 அளுத்கம வன்முறையை அண்மித்த காலத்திலேயே பேருவளையில் அதனை மறந்து அந்நாளில் ஆதரவளித்த மர்ஜான் கூட தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார். தேர்தலில் போட்டியிட்டு வென்றதை விட அதிகமாக மக்கள் அதனைக் கொண்டாடுகிறார்கள் என்ற அடிப்படையில் இவ்வாறு கடந்தவற்றை மறந்து புதிய எதிர்காலத்துக்குத் தயாராவது காலத்தின் கட்டாயமாகிறது.


ஆனாலும், எமது சமூகத்தின் மத்தியில் பல்வேறு அடிப்படை மாற்றங்கள் அவசியப்படுகிறது. முதலில், 30 வருடங்களுக்கு முன் காலத்தின் தேவை மற்றும் பிராந்திய சூழ்நிலைகளினால் உந்தப்பட்டு உருவாகி, வளர்ந்த முஸ்லிம் தனித்துவ அரசியல் அங்கிருந்து இன்றுவரை எந்த இலக்கை அடைந்திருக்கிறது? அல்லது பழக்கப்பட்டிருக்கிறது என்கிற கேள்வியை ஒவ்வொரு முஸ்லிமும், குறிப்பாக கிழக்கு வாழ் முஸ்லிம்கள்; தம்மைத்தாமே கேட்டு அலசி ஆராய்ந்து பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.


பதவிகளை இலக்கு வைத்த அந்த சரணாகதி அரசியலில் பழக்கப்பட்டு வந்த தலைவர்கள் இன்றளவும் கூட உங்களை வைத்து அரசியல் வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இணக்கப்பாட்டு அரசியல் என்ற மாயைக்கு வெளியில்; எதிர்ப்பு அரசியலுக்கும் மக்கள  தயாராகியே இம்முறை தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆக, அமைச்சுப் பதவிகளோ அல்லது அதனால் கிடைக்கும் பிராந்திய நலன்களோ இம்முறை மக்களின் எதிர்பார்ப்பில் இருக்கவில்லை. மாறாகத் தமது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாட்டு அரசியலை எதிர்பார்க்கிறார்கள். அதன் விளைவே பொத்துவில் ஊடகவியவாளர் முஷரபின் வெற்றியாக இருக்கிறது.


இதேவேளை, கடந்த தடவை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாது போனதால் தாம் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த அம்பாறை மக்களின் ஒரு பகுதியினர், பகிரங்கமாகவே மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளராகத் தம்மை பிரகடனப்படுத்தி அரசியல் செய்து வரும் அதாவுல்லாஹ்வைத் தெரிவு செய்ததிலும் தவறில்லை, அமைச்சரவை நியமனத்தில் நடக்காத அந்த நல்லது வேறு வழியில் நடந்தால் சந்தோசமே. இதேவேளை, சம்மாந்துறையின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது பேரிழப்பு என இப்போதே அப்பகுதி மக்கள் அங்கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். மாவட்டத்துக்கு நான்கு முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தும் இவ்வாறு தனித்தனி பிரதேச எதிர்பார்ப்புகள் வேறுபட்டிருக்கின்றமைக்கான அடிப்படைக் காரணம் என்னவென ஆராய வேண்டிய தேவையிருக்கிறது.


கடந்த மூன்று தசாப்தத்தில் இவ்வாறே பல்வேறு பதவிகளை வகித்த முஸ்லிம் பிரதிநிதிகளால் சமூகத்தின் எத்தனை விகிதத்தினர் நன்மையடைந்தனர் என்ற தெளிவான ஆய்வும் அவசியப்படுகிறது. இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியுற்ற முன்னாள் அரசியல்வாதிகள் பற்றிய 'கொமிசன்' முறைப்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பலமாக உலா வருகிறது. இப்போது வென்றிருப்பவர் குறித்த விமர்சனமும் இல்லாமலில்லை. ஆனாலும், தென் பகுதி அரசியல் இந்த வட்டங்களையும் வரையறைகளையும் தாண்டிச் சென்று விட்டது என்பதை அமைச்சரவை நியமனமும் எடுத்தியம்புகிறது.


ராஜபக்ச சகோதரர்கள் பல அமைச்சுக்களைத் தம் வசம் வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆயினும், ஏனைய அமைச்சுப் பதவிகள் பிராந்திய நலனை விட தேசிய நலனை முன்நிறுத்தியதாகவே அவதானிக்கப்படுகிறது. இவ்வாறு தேசிய நலன் என்று வரும் போது பிராந்திய அரசியல் தலைமைகளின் கடமைகளும் மாற்றம் பெற வேண்டிய தேவையிருக்கிறது. கோட்டாபே ராஜபக்சவின் திட்டம் எதுவாக இருந்தாலும் ஒரேயிரவில் திடீர் மாற்றங்கள் வரப் போவதில்லையென்பதும் உண்மை.


ஆனால், மெல்லக் கவ்வி வரும் சிந்தனை மாற்றத்திற்கு முஸ்லிம் சமூகமும் தயாராக வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. 2012 முதல் சொல்லொணாத் துன்பங்களை எதிர் நோக்கி வந்த சமூகம் எந்த வகையிலும் எதிர்பார்க்காத பேரிடி கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்றது. அது தான் உச்ச கட்ட பிரச்சினையென்று சிந்தித்து, நமக்குள் வர வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாக வேண்டும்.


உள்நாட்டு யுத்தம் விரிந்திருந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் முழுமையாகக் கட்டிழந்து போனது என்கிற உண்மையை இனியும் மறைத்துப் பயனில்லை. கொள்கை இயக்கங்கள் தமக்குத் தேவையான வகையில் இந்த சமூகத்தைப் பல கூறுகளாகப் பிரித்து விட்டன. அதை எவரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் தாம் செய்வது சரியென்ற நினைப்பிலேயே இதுவரை அனைத்து பிரிவினைகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. அவ்வளவு ஏன்? 2012ல் அநுராதபுர சியார உடைப்பு சம்பவத்தின் போது அப்போது மஹிந்த அரசின் அமைச்சராக இருந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதி அது தூக்கிப்பிடிக்க வேண்டிய பிரச்சினையே இல்லை, நாட்டில் தேசிய வானொலியில் கூட பாங்கு சத்தம் கேட்கிறது, அந்தளவுக்கு மதச் சுதந்திரம் இருக்கிறதென்று கூறியிருந்தார்.


எனினும், காலம் ஒவ்வொருவரிடமும் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. ஆயினும், இவை யாவும் அரசியல் நலன் அடிப்படையில் மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்பதை மக்கள் உணர்ந்தாக வேண்டும். சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய எதிர்க்கட்சியில் தான் இருக்கப் போகிறது என்றாலும் தமக்கும் தலா ஒரு தேசியப் பட்டியல் தரப்பட வேண்டும் என்று இரு முஸ்லிம் கட்சிகளும் 12ம் திகதி இரவு வரையிலும் செய்து கொண்டிருந்த பேரம் மக்களின் பேராலேயே நடந்தது. அடுத்த தேர்தலில் எம் மக்கள் வாக்களிக்க வேண்டுமானால் தேசியப் பட்டியலைத் தாருங்கள் என்றே அச்சுறுத்தப்பட்டது.


சரி, அவ்வாறே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற்றுக்கொண்டால் அதனூடாக இந்த முஸ்லிம் கட்சிகள் எதைத்தான் சாதிக்கப் போகின்றன? ராஜபக்ச அரசாங்கம் எவ்வித கஷ்டமுமின்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அவ்வாறான ஒரு சபையில் ரவுப் ஹக்கீம் பேசுவார், ரிசாத் பதியுதீன் பேசுவார் என்றே எடுத்துக் கொண்டாலும் தேசியப்பட்டியலில் சென்று எதைப் பேசக்கூடிய எந்த வல்லமை படைத்தவருக்காக இந்தப் பேரமும் போராட்டமும், அதுவும் மக்கள் பேரால் நடக்கிறது? பழக்க தோஷம். 


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அவரது பதவிக்காலத்தில் மூன்று தடவைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்த மூன்று தடவைகளிலும் முஸ்லிம்களுக்குத் தான் செய்த அளவு;ககு எந்த ஆட்சியாளரும் சேவை செய்ததில்லையென்று அவர் அடித்துக் கூறினார். அவர் அவ்வாறு கூறியதெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பதவிகளையும் அதனூடாக அவர்கள் பெற்றுக்கொண்ட இலாபங்களையுமே தவிர வேறெதுவுமில்லை. கேட்டதெல்லாம், கேட்ட போதெல்லாம் கொடுத்தேன் என்று இறுதியாக 2017ல் அவர் அங்கலாய்தததை நினைத்த போது பரிதாபமாக இருந்தது.


இப்படிப் பதவி – பதவியென பேரம் பேசிப் பேசி வாழ்க்கை நடாத்திக் கொண்டிருந்தவர்களால் பொத்துவில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடிந்ததா? மாயக்கல்லி பிரச்சினைக்குத் தான் தீர்வு காண முடிந்ததா? இல்லை இன்று தமது பிரதேசம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாமல் அனாதையாகி விட்டதாக சில பிரதேச மக்கள் கருதுகிறார்களே அவர்களுக்குத்தான் அவ்வாறொரு நினைப்பு வராமல் சேவை செய்தார்களா? இருக்கும் 225 நாடாளுமன்ற ஆசனங்களில் 15 முதல் 20 முஸ்லிம்கள் அமர்ந்து கொள்வது ஒரு வகையில் சமூகப் பிரதிநிதித்துவம் என்றே வைத்துக் கொண்டாலும் அதனை சமூகத்துக்காகப் பயன்படுத்திய செயல் வீரர்கள் அதில் எத்தனை பேர்? 


முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஒருவர் ஆறாவது தடவையாக இம்முறை நாடாளுமன்றம் செல்கிறார் என்பதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. பலருக்கு 2015க்கு முன் அவர் யார்? என்பதே தெரிந்திருக்கவில்லை. இவ்வாறு திசைகளாலும் பிராந்தியங்களாலும் பிரிந்து குறுகிய சிந்தனை வட்டத்துக்குள்ளேயே அரசியலை முடக்கிக் கொண்டுள்ள சமூகம் அந்த வரையறையிலிருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும். அது வெறுமனே சிங்கள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தவன்று, மாறாக சமூகம் நவீன மயப்பட வேண்டிய கட்டாயத் தேவையின் நிமித்தம்.


எல்லை மீறிய சிந்தனைத் திணிப்பின் ஊடாக இல்ஙகை முஸ்லிம்களை தேசத்திலிருந்து அந்நியப்பட்டு சிந்திக்க வைக்கும் மார்க்க அறிஞர்களும் அடக்கப்பட வேண்டிய தேவையிருக்கிறது. அவர்களால் அன்னியப்பட்டிருக்கும் பல நூறு பேருக்கு உலகில் வேறு எந்த நாடும் அபயமளிக்கப் போவதில்லை. தூண்டும் அவர்களுக்கும் வேறெங்கும் புகலிடம் கிடைக்கப் போவதில்லை. ஆக, தூண்டப்பட முன்பாக மக்கள் தாமாக சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். பெற்றோர் தம் பிள்ளைகள் குறித்து கவனத்துடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும். சமய விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பாதாகக் கூறி பல ஆயிரம் இளைஞர்களை நாத்திகர்களாக்கி தினசரி செய்திப் பத்திரிகைகளில் பெயர் மாற்ற விளம்பரங்கள் வருவதற்கும் இவர்கள் அடிப்படைக் காரணிகளாக இருக்கிறார்கள்.


உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையில் முன் - பின் காலத் தேவைகளை உணர்ந்து வாழ்வியல் மற்றும் அரசியலில் மாற்றங்களைக் காண்பது மக்கள் கடமையாகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது.

jTScYcS

-Irfan Iqbal

Chief editor, Sonakar.com


No comments:

Post a Comment