ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் குடும்பத்தினர் உட்பட 16 பேர் சாய்ந்தமருதில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பின்னணியில், அப்போது உயிரிழந்ததாகக் கருதப்பட்ட புலஸ்தினி மஹேந்திரன் என அறியப்பட்ட சாரா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அதற்கு உதவிய சாராவின் உறவினர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இணைந்த பொலிஸ் பிரிவின் பிரதான ஆய்வாளர் அர்ஜுன மஹின்கந்தவே நேற்றைய தனது சாட்சியத்தின் போது இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ள அதேவேளை, தற்கொலையாளிகள் இருந்த வீட்டிலிருந்து கிடைத்த எந்தவொரு உடலத்தின் டி.என்.ஏ வும் சாராவுடைய தாயுடைய டி.என்ஏயுடன் பொருந்தவில்லையென அப்போதைய அம்பாரை பொலிஸ் பொறுப்பதிகாரியான எஸ்.எஸ்.பி சமந்த விஜேசேகர தனது சாட்சியத்தின் போதும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாராவின் உடலம் அங்கு காணப்படவில்லையென தெரிவிக்கப்படுவதோடு 2019 செப்டம்பர் அளவிலேயே குறித்த நபர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும் அதற்கு மன்னாரிலிருந்து முக்கிய நபர் ஒருவரே படகொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தற்போது தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சாராவை ஏலவே இவ்விடயத்தில் கைது செய்யப்பட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி அபுபக்கர் வாகனத்தில் ஏற்றிச் சென்றதை நேரில் கண்டதாக சாட்சியொருவர் தெரிவித்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இறுதி நேரம் வரை சாரா அங்கிருந்ததாக சம்பவத்தில் உயிர் தப்பிய சஹ்ரானின் மனைவி சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment