கடந்த 2010ம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அரசாங்கம் பெற்ற பெரும்பான்மை இத்தேர்தலில் கிட்டாது என்றும், ஆனால் அமையவிருக்கும் பாராளுமன்றம் ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தும் பாராளுமன்றமாகவே அமையப் போகின்றது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்வு கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி ஹபீப் றிபானை ஆதரித்து கல்குடாவில், வியாழன் மாலை (09) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு உரையாற்றுகையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
அடுத்த பாராளுமன்றமானது ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தோடு சமநிலையைக் கொண்ட ஒரு பாராளுமன்றமாக திகழும். இதற்கு முன்னைய பாராளுமன்றம் போன்று அமையாது. ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் ஜனாதிபதியை கட்டுப்படுத்தி, நெறிப்படுத்துகின்ற நிலைமைக்கு கொண்டுவந்துவிடும். அத்தகைய அரசியல் சூழலை நாங்கள் இந்த தேர்தலுக்கு பின்னர் காணக் கூடியதாக இருக்கும்.
2010 ஆம் ஆண்டு யுத்தத்தை வென்றெடுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் அடைந்த பெரும்பான்மையோடு வேறு தேர்தல்களை ஒப்பிடமுடியாது. 2015இல் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய ஆதரவும் அத்தகையதே. பெரும்பான்மையை அமைப்பதற்கு 6 ஆசனங்கள் தேவைப்பட்டன. அதுதான் பாராளுமன்ற தேர்தலுடைய விசித்திரம்.
நாங்கள் நிச்சயமாக பேரம் பேசுகின்ற சக்தியாகவே இருந்துக் கொண்டிருக்கின்றோம். அது ஒரு ஆசனமாக இருந்தாலும் 10 ஆசனங்களாக இருந்தாலும் அது முஸ்லிம் காங்கிரஸின் சின்னத்தில் தான் அமையப் பெற்றுள்ளது. புத்தளத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் தராசு சின்னத்தில் தேர்தலில் களமிறங்கி ஓர் ஆசனத்தை பெற எத்தனித்துள்ளது. அடுத்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மூன்று சின்னங்களை பிரதிநிதித்துவப்படுத்தலாம் ஆனாலும் இயக்கம் ஒன்றுதான்.
நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்த வேட்பாளர் வெற்றிபெறவில்லை என்பதற்காக ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அதற்குரிய அந்தஸ்த்தை இழந்துவிடாது. இந்த முழு நாட்டினிலும் ஒரே ஒரு மாவட்டம் தான் முஸ்லிம் காங்கிரஸின் நேரடித் தேர்தல் களமாகத் திகழ்கின்றது. இதுவே எமது இயக்கத்தின் அடையாள சின்னமாகவும் விளங்குகின்றது.
அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் உருவாகியிருக்கின்ற பேரணியாக, மிகப் பெரும் புதிய அரசியல் பிரவாகமாக உருவெடுத்திருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியில் முன்னைய அரசாங்கத்தின் ஆளும் கட்சியில் அதிகப் பெரும்பான்மையானோர் இணைந்துள்ளதோடு அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒன்றாக கைகோர்த்து கடந்த தேர்தலில் களமிறங்கின.
உற்சாகமான மக்களின் பேராதரவரோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பரந்து விரிந்து நிற்கும் எமது மரச் சின்னத்தின் அடையாளத்தை ஸ்த்திரப்படுத்துவதற்காகவே இங்கு வருகையளித்துள்ளேன்.
எமது அடையாளம் இந்த நாட்டின் ஓர் இடத்தில் உயிர் வாழப்போகின்றது. அதனை உயிர்ப்பித்தெழுப்புவதற்காக அடுத்த பாராளுமன்றத்தில் கட்சி என்ற அந்தஸ்த்தை பெறுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் நாங்கள் பெறுகின்ற ஆசனம் மிக முக்கியமான ஒன்றாகும்.
தலைவர் பெறுகின்ற ஆசனத்தை விடவும் இங்கு மட்டக்களப்பில் மரச் சின்னத்தில் வென்றெடுக்கின்ற ஆசனங்கள்தான் தலைவருக்கும் அங்கு மதிப்பையும் மரியாதையையும் தரப் போகின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஏராளமானோர் இருக்க பாராளுமன்றத்தில் ஒரு தேசிய அரசாங்கமொன்றை அமையப் பெருகின்றபோது அவர் மாத்திரம் தான் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக அலி ஸாஹிர் மௌலானவினது கையொப்பத்திற்காக தேடிவந்தார்கள்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் வெற்றியில் இந்த மரச்சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் யாரோ அவர் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் தனித்துவமான அடையாளமாக இருப்பார் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அந்த அடையாளத்தை பேணுகின்ற வாய்ப்பு கல்குடாவிற்கும் கிட்டியுள்ளது.
இந்த கட்சியினுடைய அடையாளத்தை நாடுமுழுவதிலும் முன்னிறுத்தி போராடலாம் என்று பல இடங்களில் முயற்சித்து பார்த்தோம். கட்சிக்கு மிகப் பெரிய ஆதரவு தளம் இருந்தாலும் அவை கைகூடவில்லை. பல இடங்களில் நாங்கள் சேர்ந்து கேட்கின்ற நிலைமைகளும் உள்ளன. ஆனால், இந்த மாவட்டத்தில் சகோதர தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழமையாக ஒரு போனஸ் ஆசனம்; கிடைப்பதுண்டு.
இந்த கட்சியின் அடையாளத்தை வைத்துக்கொண்டு அரசியலுக்கு அறிமுகமானவர்கள் என்ற பட்டியலில் வந்து கட்சியை பாவித்து பாராளுமன்ற ஆசனத்தை அடைந்தவர்கள் வெறும் குறுநிலமன்னர்களாக தங்களுக்கு கட்சியின் தயவினால் கிடைத்த ஆசனத்தை தங்களுக்குரிய தனிப்பட்ட மரியாதையினால் கிடைக்கப்பெற்ற ஆசனம் எனக் கருதி இறுமாப்பில், ஆணவத்தில் அதனை முன்னிறுத்தி தனிவழி போனார்கள். அவ்வாறு வழிதெரியாமல் சென்ற எத்தனையோ பேர் திக்குத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸினூடாக மரச் சின்னத்தில் பாராளுமன்ற ஆசனங்களை அடைந்துகொண்டவர்கள் இன்று ஒருவர் வண்ணத்திப்பூச்சியிலும், மற்றொருவர் தொலைபேசியிலும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இருந்தபோதிலும், மரம் என்ற சின்னம் வருகின்ற போது அதற்கிருக்கின்ற மக்கள் ஆதரவு, உற்சாகம், வசீகரம் வேறு எதற்கும் இருக்கமுடியாது.
இந்ததேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவுள்ள ஆசன எண்ணிக்கையானது இதர மாவட்டங்களை பார்க்கிலும் பெறுமதிமிக்கது. அதனுடைய பெறுமானம் வித்தியாசமானது. எமது கட்சியின் சின்னத்திற்கு கிடைக்கின்ற ஓர் ஆசனமானது ஏனைய சின்னங்களுக்கு கிடைக்கும் ஆசனங்களை பார்க்கிலும் அந்தஸ்த்தில் கூடியதாகும்.
நான் மரச்சின்னத்தில் மீண்டும் அம்பாறை, கண்டி போன்ற பல இடங்களில் தேர்தலில் களமிறங்கி வெல்லக் கூடியதாகவே இருக்கின்றது. இந்த சின்னத்தில் எங்கேயாவது போட்டியிட கிடைத்தால் அதில் எனக்குள்ள சந்தோஷம் அளப்பரியது. இந்த பேரியக்கத்தை காப்பாற்றுவதற்கு பெரிய படையொன்றே நாடு முழுவதிலும் இருக்கின்றது. மேலும் உற்சாகமும், இளைஞர்களுடைய உத்வேகமும் தேவை. கட்சிப் போராளிகள் ஊரெங்கிலும் மூலை முடுக்கெங்கிலும் இருக்கின்றார்கள்.
அவர்கள் எமக்களித்துள்ள உற்சாகத்தின் வெளிப்பாடுதான் எவ்வித ஐயப்பாடும் இன்றி இந்த மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆசனம் நிச்சயப்படுத்தப்பட்டுவிட்டது எனப் பேசுகின்றார்கள். மூன்று தடவைகள் மரச் சின்னத்தில் இந்த மண்ணில் தேர்தல் வெற்றியின் மூலம் ஆசனம் கிடைத்துள்ளது. ஆனால், ஆசனத்தை எடுத்தவர்கள் கட்சிக்கு துரோகமளித்துவிட்டு போனார்கள். கட்சியினால் ஆசனம் பெறுவது இந்த தொகுதிக்கு ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. இந்ததேர்தலிலும் நான்காவது முறையாகவும் அதனை அடைந்துகொள்ள முடியும்; என்பதில் உறுதியாகவுள்ளோம்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் அடிநாதத்தை சரிவர புரிந்துக்கொண்டவர்கள் இதை மலினப்படுத்துகின்ற செயற்பாடுகளில் இறங்காமல் நாகரிகமாக இந்ததேர்தலில் தங்களுடைய பிரதேசத்தில் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்த முற்படவேண்டும். கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் இங்கு இறுதி நேரத்தில் எங்களுடைய சின்னமே இல்லாமல் நாங்கள் அங்கலாய்த்தோம்.
கடைசி தினம் கட்டுப்பணம் கட்டிவிட்டுஇ ஒரு சுயேட்சை குழுவில் அறிமுகமில்லாத ஒரு சின்னத்தில் கேட்டு இருந்த அமைச்சரையும் தோற்கடித்து மேலுமொரு ஆசனத்தை மேலதிகமாக பெற்று இந்த மண்ணில் ஒரு சாதனையை நிலைநாட்டினோம்.
எங்களுக்கு உள்ளுராட்சி சபையின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு எங்களோடு இருந்தவர்கள்; விட்ட தவறுகளினால் நாங்கள் அந்த இடத்தை அடையாமல் போனாலும், இந்தக் கட்சியானது உள்ளுராட்சி சபையின் அதிகபட்ச ஆதரவைபெற்ற ஓர் இயக்கம் என்ற ஸ்தானத்தில் இருந்துக்கொண்டுதான் நாங்கள் அந்த சாதனையை நிலைநாட்டினோம்.
இந்த மாவட்டத்தின் தேவைப்பாடுகளை சட்டத்தரணி றிபான் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத் தெளிவாக உளத்தூய்மையுடன் எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள அத்தனை விடயங்களுக்கும் தலைமையாகிய நான் உத்தரவாதமளி;க்கும் வகையில் தான் நான் இங்கு வந்துள்ளேன்.
ஏனென்றால், இக்கட்சி இப்பிரதேசத்தில் காலம் காலமாக பல பிரச்சினைகளில் தலையிட்டு இருந்தாலும், தீர்வு காணப்படாத பிரச்சினைகள் என நீண்ட பட்டியலொன்று இருக்கின்றது.
புதிய ஆட்சியாளர்களின் போக்கு வித்தியாசமானது. இந்த ஆட்சியாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் அந்த ஜனாதிபதி வெற்றிபெற்றதை வைத்துக்கொண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை கிடைத்து வெற்றி பெறலாமென்று சிலர் எண்ணலாம். அறுதிப் பெரும்பான்மையாவது கிட்டுமா என்ற கேள்வி உலவிவரும் இத் தருவாயில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிடலாம் என்றும் சிலர் வெறுமனே கதையளக்கின்றனர்.
1999ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் வென்றார். அதனையடுத்து மூன்று நான்கு மாதங்களில் வந்த பொதுத் தேர்தலில் தோற்றுப் போனார்கள். ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாமல் திண்டாடினார்கள். முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தின் 4 ஆசனங்களும் கதிரை சின்னத்தில் வெற்றிபெற்ற 7 ஆசனங்களும்; இல்லாதிருந்தால் சந்திரக்காவின் ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கமாட்டாது.
அன்று எங்களுடைய ஆதரவோடு ஜனாதிபதி தேர்தலில் வென்றவருக்கு ஆட்சியமைப்பதற்கு பெரும்;பான்மை கிடைத்தது முஸ்லிம் காங்கிரஸின் தயவிலே என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
2010 ஆம் ஆண்டு யுத்தத்தை வென்றெடுத்த காலப்பகுதியில் இடம் பெற்ற தேர்தலில் அடைந்த பெரும்பான்மையோடு வேறு தேர்தல்களை ஒப்பிட முடியாது. 2015இல் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய ஆதரவும் அத்தகையதே. பெரும்பான்மையை அமைப்பதற்கு 6 ஆசனங்கள் தேவைப்பட்டன. அதுதான் பாராளுமன்ற தேர்தலுடைய விசித்திரமாகும்.
அடுத்த பாராளுமன்றத்தில் பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் குறைந்தது 100 ஆசனங்களாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதி;ர் கட்சியாக இருந்தாலும் முஸ்லிம்களுடைய கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இந்த தேர்தலில் கிடைத்துள்ளது என்றார்.
-SLMC
No comments:
Post a Comment