உலக வரலாற்றில் போற்றப்படும் உயர்ந்த மனிதர்களின் சரிதைகள் யாவற்றிற்குமிடையில் பொதுவான ஒற்றுமையொன்று இருக்கும். அது தான், அவர்களது சுயநலமற்ற (selfless) செயற்பாடு. தம்மை விடவும் தாம் சார்ந்த சமூகத்தை அதிகம் நேசித்ததன் விளைவாகவே இவ்வாறான குணத்தால் உயர்ந்த மனிதர்கள் உலகில் அடையாளங் காணப்படுகிறார்கள்.
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் கவலை கூட அதிகமாக உம்மத்தை நோக்கியதாகவே இருந்தது. அன்னாரின் பிரார்த்தனையின் பெரும் பங்கு நமக்காகவே இருந்தது. இவற்றைப் பெருமையாகப் பேசுவதில் நமக்கிருக்கும் அலாதிப் பிரியம், நடைமுறை; வாழ்வில் அவ்வாறே இருப்பதில்லை.
எல்லோருக்கும் எல்லாமே முடியாது என்பது உண்மை. அதற்காக யார் எக்கேடு கெட்டால் என்னவென்று வாழ்வது இயற்கையுமன்று. ஏனெனில் எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்கும், அடுத்தவருக்காக கவலைப்படும் நல்லெண்ணமும் இருக்கவே செய்கிறது. ஆயினும், பல சந்தர்ப்பங்களில் அவை சூழ்நிலை மற்றும் சுயநல சிந்தனையால் கட்டுப்படுத்தப்படுகிறது.
நமது நாட்டில் வேண்டாம், உலகில் ஏதோ ஒரு மூலையில் அப்பாவி மனித உயிர் ஒன்றுக்குத் தீங்கிழைக்கப்படுவதை சமூக வலைத்தளத்திலோ அல்லது வானொலி, தொலைக்காட்சியிலோ, பத்திரிகையிலோ பார்த்தால், கேட்டால் அல்லது கேட்டறிந்தால் கூட நம்மையறியாமலே நம் உள்ளத்தில் சிறு கவலை தோன்றும். சில வேளைகளில் நம்மையறியாமலே இறைவனிடம் பிரார்த்திக்கவும் கூடும்.
இவ்வாறு இயல்பாகவே இளகிய மனம் படைத்த மனிதன் அறிந்தும் அறியாமலும் சுயநலவாதியாகவும் வாழ்கிறான். பல சந்தர்ப்பங்களில் நியாயம் பேசப் போய் நமக்கேதும் ஆகிவிடுமோ என்ற அச்சம் மேலோங்குவதும் கூட அதற்கான காரணமாக இருக்கும். சமூகக் கட்டமைப்பில் இதுவும் சாதாரணமாக இருப்பதால் யாரையும் குறை சொல்லவும் முடியாது.
எனினும், ஒவ்வொரு தனி மனிதனும் தம் வாழ்நாளில் தம்மை சுய மதிப்பீடு (self-assessment) செய்து கொள்ள வேண்டிய பல கட்டங்கள் வரும். அப்போது, தன்னைத் தானே எடை போடுவதன் ஊடாக இஸ்லாமிய வழிகாட்டல்கள் நம் வாழ்வில் எந்த அளவுக்கு தாக்கம் செலுத்துகின்றன அல்லது அவற்றிலிருந்து நாம் எந்த அளவு தூரமாக இருக்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
அது போலவே, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தாம் சார்ந்த மற்றும் தம் சமூகம் சார்ந்த சுய பொறுப்பும் (self-accountability) இருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் இன்றைய சமூகக் கட்டமைப்பு சுய பொறுப்பை சிந்திப்பதற்குக் கூட பல வரையறைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. வழமை போல அரசியலும் சமயமும் இதில் பங்களிக்கின்றன.
அரசியல் ரீதியில் இச் சிந்தனை கட்சி சார்ந்ததாகவும் சமய ரீதியாக அது ஜமாத்து சார்ந்ததாகவும் இருப்பதால் கூட்டுப் பொறுப்பு (collective responsibility) தற்காலத்தில் செல்லாக் காசாகியுள்ளது. அது மாத்திரமன்றி சமூகம் எதிர் நோக்கும் பொதுப் பிரச்சினைகளின் நீதி – அநீதி கூட தாம் சார்ந்த கோணத்திலிருந்தே சிந்திக்கப்படுகிறது.
21ம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் மிகப்பெரும் சவால், பேரினவாத அரசியலால் நியாயப்படுத்தப்படும் முஸ்லிம் விரோதமாகும். அதற்கு அரசியல் வடிவம் ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சியூடாக வழங்கப்பட்டு வித்திடப்பட்ட அதேவேளை சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில, அத்துராலியே ரதன ஹிமி போன்றோர் நீரூற்றி வளர்த்தனர்.
அதனை விரிவடையச் செய்ததன் செயற்பாட்டுப் பங்கினை கலகொடஅத்தே ஞானசார தனதாக்கிக் கொள்ள மேலும் பல கடும்போக்குவாதிகள் பங்காளிகளாகினர். நாளடைவில் அரசியல் தேவைகளுக்காக தமது கையாட்களையும் அரசியல் கட்சிகள் களமிறக்கின. அதன் பின்னணியில் டான் பிரியசாத், அமித் வீரசிங்க போன்ற நபர்கள் தம்மால் முடிந்த உச்ச கட்ட சேதத்தை வன்முறைகளைத் தூண்டுவதன் ஊடாக ஏற்படுத்தினர்.
எனினும், பின்னணியில் இருக்கும் அரசியல் சக்திகளும் தொடர்ந்து மௌனித்திருக்காது, அவ்வப்போது தலை காட்டியுள்ளன. மது மாதவ போன்றோர் அதற்கு உதாரணமாக இருக்கிறார்கள், அது போக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தனது லண்டன் விஜயத்தின் போது திகன வன்முறையின் சூத்திரதாரிகள் திலும் அமுனுகம மற்றும் லொஹான் ரத்வத்தை எனவும் பெயர் குறிப்பிட்டுச் சொன்னார்.
இவை கடந்த கால கதைகளாக இருக்க, தற்சமயம் எதிர்வரும் மாதம் 5ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சேவையோ – சுயநலமோ, அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. ஒன்று, பிரதான கட்சியொன்றுடன் சேர்ந்து அதனூடாக போட்டியிடுதல் அல்லது சுயாதீனமாக போட்டியிடுதல். பிரதான கட்சியெனும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்சமயம் ஒதுக்கப்பட்டிருப்பதால் ஒன்றில் பெரமுன அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது அதன் இன்னொரு பிரிவான சமகி பல வேகயவோ தான் தெரிவாக வேண்டும்.
நாட்டில் சமூகத்துக்கு நடக்கும் நியாய – அநியாயங்களுக்கு அப்பால் ஒவ்வொரு தனி நபரும் ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவாளர் என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்ச, சஜித் அல்லது ரணிலின் தலைமையை விரும்புகிறார்கள். ஆதலால், அந்தந்த கட்சிகளில் வாய்ப்புக்கிடைத்தவர்கள் இம்முறை அக்கட்சி சார்பாக போட்டியிடுகிறார்கள். எந்தவொரு தொகுதியைப் பொறுத்தவரையும் வாக்கு வங்கியைச் சிதைப்பதே எதிர்க்கட்சியின் தந்திரமாக இருக்கும். ஆதலால், எண்ணற்ற சுயாதீன குழுக்கள் அதற்கான பணியில் களமிறங்கியிருக்கின்றன. அவை ஆயிரங்களில் அல்லது நூறுகளில் சிதைத்தாலும், அதன் ஒட்டுமொத்த விளைவே அவசியம் என்பதால் அரசியலின் கணக்கு இவ்வாறும் அமைகிறது.
அளுத்கம வன்முறை இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பார்வையைப் புரட்டிப் போட்டது என்றால் மிகையாகாது. இத்தனைக்கும், அக்காலத்தில் நீதியமைச்சரும் ஒரு முஸ்லிமாகவே இருந்தார். அச்சம்பவம் இலங்கை வாழ் ஜனநாயக விரும்பிகளையும் உசுப்பிவிட்டு, அரசியல் ரீதியாக மக்களை ஒரு முடிவை நோக்கி உந்தியது. அதன் முழுப்பயனையடைந்த போதிலும் மக்கள் விரும்பிய ஜனநாயக சூழலை உருவாக்க முடியாது தோல்வி கண்டது ரணில் - மைத்ரி கூட்டரசு.
ஜனநாயக மற்றும் சமத்துவ பாதையென்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், மங்கள சமரவீர போன்ற முக்கிய புள்ளிகளின் வெளிப்படையான, முற்போக்கான பேச்சுகள், ரஞ்சன் ராமநாயக்க போன்றோரின் அதிரடி நடவடிக்கைகளால் யுத்த நிறைவின் பின் இலங்கையில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான செயற்திட்டம் ஆட்டம் கண்டு விட்டது என்று அச்சங் கொண்ட மகா சங்கம் முழு மூச்சாக இறங்கி, விகாரை வலையமைப்புகளைப் (network) பயன்படுத்தி சிங்கள தேசத்துக்கு – சிங்கள தலைவர் என்ற அடிப்படையிலும், நாட்டைக் காப்பாற்ற இதுவே இறுதி வாய்ப்பு என்ற பிரச்சாரத்தின் மூலமும் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் வெற்றிக்குப் பங்களித்தது.
உலகம் ஒரு கிராமமாக (global village) சுருங்கியுள்ள இன்றைய நூற்றாண்டிலும், தொழிநுட்ப அறிவும் மேலைத்தேய சமூகக் கட்டமைப்புகளின் அறிவும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினால் மேலை நாடுகள் கண்டுள்ள அபிவிருத்தி பற்றிய தெளிவும் இருந்தும் கூட, கோட்டாபே ராஜபக்சவை வெற்றி பெறச் செய்ய இவ்வாறான வாதம் ஒன்று அதுவும் இன்றிலிருந்து 9 மாதங்களுக்கு முன் அவருக்கும் தேவைப்பட்டது என்ற உண்மையை நிதானித்துச் சிந்திக்கும் போது இலங்கையின் இன-மைய (ethno-centric) அரசியல் மக்கள் வாழ்வில் எத்தனை ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சரி, மைத்ரியோடு ஒப்பிடும் போது இவர் ஒரு உறுதியான, நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் தூர நோக்கு கொண்ட தலைவர் என்பதை ஏற்றுக்கொண்டாலும் கூட, அவரை அவராக சிந்திக்க விட முடியாதபடியே இலங்கையின் அரசியலமைப்பு இருக்கிறது. முன்னைய ஆட்சியாளர்கள் தாம் பதவிக்கு வந்ததும் தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்கிய சலுகைகளுக்கும், பதவிகளுக்கும் கொஞ்சமும் குறைவில்லாது காபந்து அரசும் அதனை செய்து காட்டியுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் அரசியல் முற்செல்ல முடியாத சூழலே நிலவுகிறது. என்னதான் ஜனாதிபதியாக இருந்தாலும், நாடாளுமன்ற செயற்பாட்டுக்கு அப்பால் ஓரிரவிலோ அல்லது ஐந்து வருட காலத்திலோ தேசத்தின் போக்கை மாற்ற முடியாது. ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியின் பயன் மற்றும் கடந்த ஆட்சி மீதான வெறுப்பின் பயனால் அதிக ஆசனங்களைக் கைப்பற்றினாலும், அல்லது பெரும்பான்மையையே பெற்றாலும் கூட அமைச்சு மற்றும் ஏனைய பதவிகளைப் பகிர்ந்தளிப்பதில் பாரிய சிக்கல்கள் உண்டு. அதனையும் தாண்டி பெரமுன தனிப்பெரும்பான்மையைப் பெற்று, நிறைவேற்று அதிகார பிரதமருக்கான (executive prime minister) சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து விட்டால் அதன் பின் ஜனாதிபதியின் பதவி சம்பிரதாயபூர்வமானதாக (ceremonial) மாறிவிடும்.
எனினும், இன்றைய அரசியல் சூழல் அவ்வாறு ஆழமாக ஆராயப்படுவதாக தெரியவில்லை. மாறாக, சந்தர்ப்ப சூழலுக்கான எதிர் விளைவே இடம்பெறுகிறது. ஆதலால், பெரமுன தான் வெல்லும், வெற்றி பெறும் பக்கம் நாமும் இருந்தாக வேண்டும் என்ற கோசம் முன் வைக்கப்படுகிறது. தவறில்லை, ஆனாலும் அந்தப் பக்கம் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேட்பாளர்கள் எமது சமூகத்திலிருந்து களமிறக்கப்பட்டிருக்கிறார்களா? என்ற கேள்வி கேட்கப்பட வேண்டும்.
ஏனெனில், இலங்கை மக்கள் ஜனரஞ்சக (populist) அரசியலுக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பழகியிருக்கிறார்கள். இந்த வரையறையை உடைத்து யாரை வேண்டுமானாலும் களமிறக்கி வெல்லலாம் என்பது தற்போதைய சூழ்நிலையில் அசாத்தியமான விடயமாகும். இறுதி நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருந்தவர்களுள் பெரும்பாலானோரும் தொடர்ச்சியாக பல தசாப்தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களே. மஹிந்த ராஜபக்சவோ, ரணில் விக்கிரமசிங்கவோ, வாசுதேவ நாணாயக்காரவோ, தினேஷ் குணவர்தனவோ கூட இன்னும் ஓய்வெடுக்கத் தயாரில்லை. பெரமுன என்ற கட்சியே இன்று மஹிந்த ராஜபக்சவின் ஜனரஞ்சகத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது.
அவ்வாறிருக்க, முஸ்லிம் வேட்பாளர்கள் என்ற பெயரில் பெரமுன தரப்பில் களமிறக்கப்பட்டுள்ளவர்கள் ஜனரஞ்சக அரசியல்வாதிகள் இல்லையெனுமிடத்து, அவர்கள் தேர்தலில் தோல்வியுற்றால் அதனை மக்கள் மீது பழி சுமத்தும் ஆயுதமாக மாற்றக் கூடாது. ஆயினும், கொரோனா ஜனாஸா எரிப்பைத் தடுக்க முடியாமல் போன பெரமுன காரர்கள் மிக இலகுவாக, கோட்டாபே ராஜபக்சவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை, ஆதலால் அந்த விடயத்தில் போராட முடியவில்லையென்று நழுவிக் கொண்ட ஈரம் இன்னும் காயவில்லை.
கிழக்கு மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாத்திரம் உள்ள ஜனரஞ்சகத்தைக் கொண்டு அதாவுல்லாவால் நாடாளுமன்றில் இடம் பிடிக்க முடியுமா? என்பது சந்தேகம். ஆனால், காத்தான்குடியைத் தாண்டி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பிரபலமான ஹிஸ்புல்லாவுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. இதேவேளை, ஓட்டமாவடி – வாழைச்சேனை பகுதிகளில் பிரபல அரசியல்வாதிகளுக்கிடையில் தான் போட்டி நிலவப் போகிறது. திருகோணமலை - மூதூர் பிரதேசங்களிலும் இதே நிலைதான்.
கள யதார்த்தம் இவ்வாறிருக்க, ஜனாதிபதி தேர்தல் போன்றன்றி பொதுத் தேர்தலில் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள மக்களால் விரும்பப்படுபவர் தேவையென்கிற உண்மை உணரப்பட வேண்டும். எனவே, பெரமுன தரப்பால் சொல்லப்பட்டிருப்பது போல் தேசியப் பட்டியல் (national list) வழங்கப்பட்டால், அதனூடாக ஓரிரு உறுப்பினர்களுக்கு இடம் கிடைத்தால் சந்தோசப்படலாம். அதில் ஒருவருக்கு அமைச்சுப் பதவி கிடைத்தால் போனஸ். ஆனால், அதனால் சமூகம் என்ன நன்மையடையும்? என்பது எப்போதும் பேல கேள்விக்குறியே.
ஏனெனில், இன்றைய இலங்கை அரசியலில் சமூகத்துக்குத் தேவை ஒரு முஸ்லிம் அமைச்சுப் பதவியில் இருப்பதில்லை. அவ்வாறெனின் அளுத்கம வன்முறை நடந்திருக்கவே கூடாது. ரணில் - மைத்ரி கூட்டாட்சியில் வருடா வருடம் இடம்பெற்ற வன்முறைகள் நடக்க முன்பே தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதலால், இந்தப் பதவிகள் யார் எக்கேடு கெட்டாலும் நமக்கொரு பதவியோ தொழில் வாய்ப்போ கிடைத்தால் போதும் என்றிருப்பவர்களுக்கே பயனளிக்கும்.
ஆனால், நடைமுறையில் மேலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதுதான், எந்த வழியிலாவது அடிபணிந்து அன்றி, கூட்டிணைந்து செயற்படக்கூடிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்துவது. சரி – பிழை மற்றும் விமர்சனங்களுக்கு அப்பால், ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து வெளியான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை தேசிய – சர்வதேச அரசியலில் முக்கியம் பெற்றது.
அந்த வகையில், சுயநலத்துக்கு அப்பால் இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் இருப்பைப் பிரதிபலிக்கும் வகையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவும் மக்களுக்குக் கடமையாகிறது. அது எந்தக் கட்சியிலிருந்து என்பதை விட, எதிர்காலத்தில் கட்டாயம் எதிர்பார்க்கப்படும் முஸ்லிம் விரோத மசோதாக்களை எதிர்த்து நிற்கக் கூடிய கூடடுக் குரலாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமாகும்.
ஜனரஞ்சக மாயை விலக்கி, நிதானித்துச் சிந்தித்தல் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்.
Irfan Iqbal
Chief editor, Sonakar.com
No comments:
Post a Comment