சாய்ந்தமருதில் வீடொன்றில் தற்கொலை செய்து கொண்டவர்களுள் புலஸ்தினி அல்லது சாரா ஜஸ்மின் என அறியப்பட்ட பெண் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது தாயார் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்துள்ளார்.
தாக்குதலின் பின் குறித்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளைத் தம்மிடம் காட்டிய அம்பாறை பொலிசார் அதில் புலஸ்தினியின் நகைகள் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்தக் கேட்டதாகவும், அதனைப் பரிசோதித்த போது அவ்வாறு எதுவும் காணப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். தாயாரான கவிதாவின் டி.என்.ஏ அன்றைய தினம் வீட்டில் இறந்த யாருடயை டி.என்.ஏயுடனும் பொருந்தவில்லையெனவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் புலஸ்தினி தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது.
எனினும் சி.ஐ.டி விசாரணைக்காக கொழும்பு சென்றிருந்த போது சஹ்ரானின் மனைவியைக் கண்டதாகவும, புலஸ்தினி தம்மோடு சாய்ந்தமருது வீட்டில் இருந்ததாக அவர் சொன்னதாகவும் கவிதா மேலும் தெரிவித்துள்ளார். ஆயினும், புலஸ்தினி தப்பிச் சென்றதை நேரில் கண்டதாக சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வருடம் செப்டம்பரில் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தாக்குதல் பற்றிய துல்லியமான தகவல்களை இந்திய உளவுத் துறை புலஸ்தினி ஊடாகவே பெற்றுக்கொண்டுள்ளதாகவும், தமது உளவாளியை இறுதி நேரத்தில் காப்பாற்றி நாட்டை விட்டுத் தப்புவதற்கும் உதவியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment