கொரோனா, ஜனாஸா எரிப்பு, இனவாதம் உட்பட இன்னபிற அத்தனை துன்பியல் சரித்திரங்களையும் முஸ்லிம் சமூகம் தற்காலிகமாக மறந்து விட்டது. ஓகஸ்ட் 6ம் திகதிக்குப் பின் மெல்ல மெல்ல மீண்டும் நினைவுக்கு வந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு அந்த ஓலம் தொடரும். ஆனாலும், தற்போது தற்காலிக விடுமுறை.
காரணம் தேர்தல்! இப்போதிருக்கும் தலையாய பிரச்சினை அதுவன்று. ஊருக்கு, தெருவுக்கொரு எம்.பி வேண்டும். மக்களின் இந்த அவாவைப் புரிந்து கொண்டுள்ளதால் வேட்பாளர்களும் படையெடுத்துக் கிளம்பியிருக்கிறார்கள். எல்லோரும் சமூகத்துக்கு விடுதலை பெற்றுத் தரப் போவதாகவே சொல்கிறார்கள். எந்த வகையான சமூக விடுதலையென்றால் ஒருவரிடமும் தெளிவான விடையில்லை.
இப்போதிருக்கும் தேர்தல் பிரச்சார மேடையில் ஆளுங்கட்சியூடான அடைவை எதிர்பார்த்துக் களமிறங்கித் தீவிர பிரச்சாரம் செய்து வருவோர் முன் வைக்கும் பிரதான வாதம், அடுத்து ஐந்து வருடங்களுக்கு கோட்டாபே ராஜபக்ச தான் ஜனாதிபதியாக இருக்கப் போகிறார், சிங்கள மக்கள் பெருமளவி;ல் வாக்களிக்கப் போகிறார்கள், ஆகவே பெரமுன அரசாங்கம் அமைவதும் உறுதி. அந்த அரசில் நாமும் பங்குதாரராக இருக்க வேண்டும் என்பதாகும்.
இணக்கப்பாட்டு அரசியல் என்கிற பெயரில் பதவிகளையும் சலுகைகளையும் அனுபவிப்பதில் ருசி கண்டு போன இலங்கை அரசியல் பெருந்தகைகளின் கூட்டத்தில் தாமும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற கனவு மலிந்து போயுள்ள அளவுக்கு சமூக அக்கறை இருப்பதாக எங்குமே தெரியவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு சுய அடைவுக்காக பேசுகிறார்களே தவிர சமூகம் எதையும் அடையப் போவதில்லை.
முதலில், இலங்கையின் அரசியல் சூழ்நிலை அவ்வாறான தளத்தில் இயங்கவும் இல்லை. பொதுப் பார்வையில் மைத்ரிபால சிறிசேனவுக்கும் கோட்டாபே ராஜபக்சவுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்களை நான் காணவுமில்லை. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய மைத்ரிபால சிறிசேன போன்றே செஞ்சோற்றுக் கடனாளியாகவே கோட்டாபே ராஜபக்சவும் தற்போது ஆட்சியதிகாரத்தி;ல் இருக்கிறார்.
மைத்ரியோடு ஒப்பிடும் போது செயற்பாட்டு ரீதியில் நல்ல சிந்தனைத் தெளிவுகளை கோட்டாபே ராஜபக்ச கொண்டிருந்தாலும் நடைமுறைச் சிக்கல்கள் அவரை முடக்கிப் போட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றி அதனை இன்னும் சிக்கலாக்குமே தவிர இலகுவாக்கப் போவதில்லை. ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை அது கோட்டாபே ராஜபக்ச எனும் தனி நபரின் வெற்றி. அது மாத்திரமன்றி, சிங்கள மக்களிடம் கடந்த நவம்பரில் முன் வைக்கப்பட்ட அனைத்து கோசங்களும் இம்முறை எடுபடப் போவதில்லை.
அதேவேளை, இலங்கை எனும் சிங்கள நாட்டை நவீன நூற்றாண்டில் நிலைப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என்ற பௌத்த துறவிகள் ஊடான சங்க சபாவின் பிரச்சாரம் இன்னும் வலியதாகவே இருக்கிறது. ஆயினும், அது மூன்றிலிரண்டு தனிப்பெரும்பான்மையைப் பெற்றுத் தர போதுமானதாக இருக்குமா? என்பது கேள்விக் குறியே.
அந்த சந்தேகத்துக்கு வலுச் சேர்க்கும் விதமாக கொரோனாவுக்குப் பிந்திய சூழ்நிலையில் பெரமுன முன்னெடுக்கும் தேர்தல் பிரச்சாரங்களும் சாட்சி பகர்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்வதற்கான முயற்சி இன்னும் ஒரு எடுத்துக் காட்டாகும். ஜனாதிபதி தேர்தலையடுத்து இருந்த ஆர்ப்பாட்டம் 5000 ரூபா சீரழிவு மற்றும் துகிலுரியப்பட்டுள்ள இனவாதம், தொண்டமானின் இறப்புக்கொரு நீதி முஸ்லிம்களுக்கும் ஏழைகளுக்கும் வேறு நீதி, கருணா அம்மானின் பேச்சும் அதைக் காப்பாற்ற மஹிந்த தரப்பும் அவர்களது ஆஸ்தான ஊடகங்களும் எடுத்து வரும் முயற்சியென பல காரணங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
எனவே, மூன்றிலிரண்டு தனிப்பெரும்பான்மையென்பது தற்சமயம் கேள்விக்குறியான விடயமாகவே இருக்கிறது. என்னதான் ஈஸ்டர் பிரச்சினையைத் தூண்ட முயற்சி செய்தாலும் எதிர்பார்த்த விளைவுகள் இதுவரை ஏற்படவில்லை. எனவே, புத்திசாலித்தனமாக சிந்திக்கும் சிங்கள மக்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலின் போது இந்த முற்போக்கு சக்திகள் ஒரேயடியாக அடங்கிப் போயிருந்தமை ஆச்சரியத்தைத் தந்தது. ஆனாலும், பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை கணிசமான சிங்கள மக்களிடம் சிந்தனை மாற்றம் ஏற்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
மறுபுறத்தில், ரணிலும் சஜித்தும் மோதிக் கொண்டதில் இரு அணிகளாகப் பிரிந்து போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி, தமது நிரந்தர வாக்கு வங்கியைப் பிரித்துக் கொள்வதைத் தவிர வேறு எதையாவது புதிதாகச் செய்யக் கூடிய செயற்திறனுடன் காணப்படுகிறதா? என்று பார்த்தால் அதுவும் இல்லையென்றே கூற வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவின் பிடியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்க வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனினும், அதனை ஈடு செய்யும் கவர்ச்சி சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் கூட கடந்த நாடாளுமன்றில் அங்கம் வகித்த அதிகமானோர் சஜித்துடன் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் சமகி ஜன பலவேகய ஐக்கிய தேசியக் கட்சி வாக்கு வங்கியில் பெருந்தொகையைக் கைப்பற்ற வாய்ப்புண்டு. ஆயினும் கூட அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் துண்டாடி மஹிந்த ராஜபக்ச பெரமுனவை உருவாக்கியது போன்று அமையப் போவதில்லையென்பது திண்ணம்.
மைத்ரிக்கு எதிரான மஹிந்தவுக்காக ஏற்பட்ட அனுதாபமும் கொந்தளிப்பும் சஜித் பிரேமதாசவுக்கு இல்லையென்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். விமல் வீரவன்ச, கம்மன்பில, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன போன்ற பெரமுனவின் பேச்சாளர் சக்தி சஜித் அணியில் காண்பதற்கில்லை. அத்துடன் மறுபுறம் முன் வைக்கும் பௌத்த இன எழுச்சிக் கோசத்துக்கு முன்னால் நின்று பிடிக்கும் அளவுக்கு சமத்துவ போதனைகளில் சஜித் தரப்பு நிலைபெறவும் இல்லை.
இதேவேளை, மஹிந்த என்ற தனி நபர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது என்ற சிந்தனைப் போக்குக்கும் குறைவில்லை. 2010 – 2015 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை குறித்து மக்கள் மனதில் நிலைகொண்டுள்ள நினைவுகளை குறைத்து மதி;ப்பிடவும் முடியாது.
இவ்வாறான இரு தரப்பு பின்னணியில் முஸ்லிம் சமூகத்துக்கு மேலும் ஒரு கடமையிருக்கிறது. சரி – பிழைகளுக்கு அப்பால், கடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஏற்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக 'தற்காலிக' இராஜினாமா செய்து கொண்டமை தேசிய அரசியலில் ஒரு அதிர்வலையை உருவாக்கியது மாத்திரமன்றி சர்வதேச கவனத்தையும் பெற்றிருந்தது.
இலங்கையில் முஸ்லிம் சமூகமும் வாழ்கிறது என்பதை எடுத்தியம்ப நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் அங்கு காணப்படும் விகிதாசாரமும் முக்கியம் பெறுகிறது. அந்த வகையில் 225 ஆசனங்கள் கொண்ட இலங்கையின் நாடாளுமன்றில் ஆகக்குறைந்தது 20 ஆசனங்களையாவது முஸ்லிம் சமூகம் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அலி சப்ரி, மர்ஜான் மற்றும் இன்னும் எத்தனை பேருக்கு பெரமுன தரப்பால் தேசியப் பட்டியல் கிடைத்தாலும் அவை போனஸ் என்று வைத்துக் கொள்ளலாம்.
மஹிந்த ராஜபக்சவின் பக்கம் இருந்த வரை மர்ஹும் அஸ்வர் எதைச் செய்தாரோ அதைத் தவிர வேறு எதையும் அலி சப்ரியாலும் செய்ய முடியாது என்கிற அடிப்படை உண்மையை இங்கு ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தேசிய அரசியலுக்கான சுருக்கமான பார்வை. இதேவேளை, பிராந்திய அரசியல் தேவைகளை தூக்கியெறியவும் முடியாது. எனவே, குதிரையில், வண்ணாத்தியில் போட்டியிட்டு மொட்டில் ஏறுவதற்குக் காத்திருப்போர் தொடர்பில் மக்கள் முடிவெடுக்க வேண்டும்.
ஆயினும், தனிப்பெரும்பான்மையுள்ள ஒரு அரசு உருவாகுமிடத்து, பொத்துவில் போன்று பல எதிர்பாராத அதிர்ச்சிகள் மாத்திரமன்றி, கடந்த காலம் போன்றே தமது சுய நலன்களுக்காக ஜனநாயக நீரோட்டத்தைத் திசை திருப்பும் செயற்பாடுகளுக்கும் எம்மவர் கட்டாயம் துணை போகப் போகிறார்கள். தம்மை அரசியல் மற்றும் சட்ட மேதைகளாகச் சொல்லிக் கொள்ளும் ரவுப் ஹக்கீமும் ரிசாத் பதியுதீனும் 18ம் திருத்தச் சட்டத்துக்குக் கூண்டோடு கை தூக்கி இதைத்தான் நிரூபித்தார்கள்.
தமக்கெனவொரு கட்சி, அந்தக் கட்சிக்கு இரண்டு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல பிரதேச, நகர சபை உறுப்பினர்களையும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களையும் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சித் தலைவர்களே இவ்வாறு கை தூக்கினார்கள் எனும் போது, கோட்டாபே ராஜபக்சவின் தோழர் அல்லது சட்டத்தரணி என்ற அடிப்படை தகைமையில் மாத்திரம் தேசியப் பட்டியல்களைப் பெறுவோரைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற போர்வையில் நாடாளுமன்றுக்கு வரப்போகும் மசோதாக்களைப் படித்துப் பார்க்கவாவது அங்கு உருப்படியான ஆட்கள் அதுவும் எதிரணியில் தேவைப்படுகிறது.
மர்ஹும் அஷ்ரப் மூலம் விரிவடைந்த தனித்துவ அரசியல் என்ற விதையினால் இதுவரையில் நாம் கண்ட உச்ச கட்ட அடைவு தொழில்வாய்ப்புகள் மற்றும் தொழில்சார் சலுகைகளே. இதைத் தவிர சமூக உரிமை என்ற பொது விடயத்தில் இதுவரை நாம் கண்ட அடைவு என்ன? என்று ஒவ்வொரு முஸ்லிமும் தம் மனச்சாட்சியைத் தொட்டுக் கேள்வி கேட்பது கடமையாகிறது.
சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கென சவுதி அனுசரணையில் கட்டப்பட்ட நுரைச்சோலை வீடுகளை அதுவும் பங்கீடு அடிப்படையிலாவது கடந்த 16 வருடங்களாக பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதா? இல்லை, 2012 இலிருந்து தலைவிரித்தாடும் முஸ்லிம் இனவிரோத செயற்பாடுகளுக்கு நீதியமைச்சர் பதவியிலிருந்து தான் எதையாவது சாதிக்க முடிந்ததா? ஆட்சி மாறி மீண்டும் அமைச்சுப் பதவிகளில் இருந்த போதிலும் கூட நாட்டின் பொதுச் சட்டத்தை அமுல்படுத்தி நீதி காண முடியுமாக இருந்ததா? அல்லது சமூகப் போராட்டங்களை களத்தில் நின்று முன்னெடுக்கத் தான் முடிந்ததா?
எதுவுமே இல்லை.
இது வரை எம் அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஆட்சியிலும் அமர்ந்து சாதித்ததெல்லாம் சொந்தப் பொருளாதாரத்தை வளர்த்ததும், அண்டி வாழ்பவர்களுக்கும் அதில் பங்கு கொடுத்ததும் தானே தவிர பொது சமூகத்துக்கென செய்தது எதுவும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி அரசில் பங்களித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட, ஏதோ வேறு யாருடையதோ ஆட்சியில் நடந்த விடயங்கள் போன்று கண்டனம் பேசிக் கொண்டு காலம் கடத்தினார்களே தவிர சமூகத்துக்கென கண்ட பொதுத் தீர்வு ஒன்றுமில்லை.
அண்மைய ஜனாஸா எரிப்பு விடயத்துக்காகக் கூட அரசியல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவோ ஆகக்குறைந்தது நீதிமன்றில் பேராசிரியர் மெத்திக்கா முன் வைத்த நில சார்பு அறிக்கைக்கு எதிர் அறிக்கை ஒன்றைப் பெறவோ கூட இதுவரை முயற்சி செய்யாத இந்த அரசியல் தலைமைகள் தமது பெயர்களையும் சேர்த்துக் கொள்வதற்காக ஆளுக்கொரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
இப்பேற்பட்ட செம்மல்களுக்கு சமூகத்தைப் மையப்படுத்திய அரசியலைப் புரிய வைக்க வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்தது. அதற்கு இம்முறை நல்ல வாய்ப்பும் அமைந்திருக்கிறது. எனவே, முடியுமான வரை இந்தத் தடவை எதிர்க்கட்சியில் எம் அரசியல் பிரதிநிதிகளை அமர வைப்பதற்கு மக்கள் முயற்சிக்க வேண்டு;ம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
அதனால் அவர்களுக்கு மேலதிக கிம்பளங்களில் பாதிப்பு வந்தாலும் உத்தியோகபூர்வ சம்பளத்தில் எதுவித பாதிப்பும் வராது. நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான அடிப்படைச் சம்பளம் 54,285 ரூபா போக ஒரு நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்றால் மேலதிகமாக 2500 ரூபா கிடைக்கும். எனவே சமூகப் பிரச்சினையைப் பேசுவதற்கும் மேலதிகமாக மக்கள் பணத்திலிருந்து பங்கு கிடைக்கிறது. இது தவிர அலுவலகம் நடாத்த, போக்குவரத்து, தொலைபேசி கட்டணம் என ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கிடைக்கக் கூடிய ஏனைய சலுகைகள், கொடுப்பனவுகளையும் மக்கள் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது, இவ்வளவையும் எடுத்துக் கொண்டு எமது பிரச்சினைகளைப் பேச இவர்களுக்கு என்ன கேடு? என கேள்வி கேட்க வேண்டும்.
அத்துடன், நின்று விடாது, இந்த எல்லைகளைத் தாண்டிய சமூக சிந்தனையுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புதியவரோ பழையவரோ சமூக செயற்பாட்டை முற்படுத்தும் நிபந்தனையுடன் வாக்களிக்க ஒத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஆதரவளிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் முன்பாக அவர் எம்.பியானால் நமக்கொரு தொழில் கிடைக்கும் என்ற குறுகிய சிந்தனையைக் கை விட வேண்டும்.
சமவுரிமை, சமத்துவத்துடனான அரசியல் சூழ்நிலை உருவானால் மக்களுக்கு இப்பேற்பட்ட சிந்தனைகள் வர வேண்டிய அவசியமோ, அன்றாட வாழ்வுக்கும் அரசியல் ஆளுமையின் அவசியமோ இல்லை.
மாற்றம் நம்மிலிருந்து உருவாகட்டும்!
Irfan Iqbal
Chief editor, Sonakar.com
No comments:
Post a Comment