தெரிந்த பிசாசா? தெரியாத பேயா? - sonakar.com

Post Top Ad

Friday, 31 July 2020

தெரிந்த பிசாசா? தெரியாத பேயா?


மனிதன் உயிர்வாழ மூன்று வேளை உணவும், மானம் காக்கத் துணியும், தனக்கென ஒரு வீடும் இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்த சமூக நிலை மாறி இன்றைய கலாச்சாரம் பல விடயங்களை வேண்டி நிற்கிறது.

நவீன வாழ்க்கை முறைகள் பல்வேறு தேவைகளை உருவாக்கி வைத்துள்ளது. ஒரு தசாப்த காலத்துக்கு முன் இன்டர்நெட் அத்தியாவசிய விடயமில்லை. ஆனால் இப்போது உலகமே அதில் தங்கியிருக்கிறது. இதனூடாக மனித சமூகம் ஒரு வலைப்பின்னலுக்குள் வாழப் பழகிக் கொண்டுள்ளது. 

இப்படித்தான் உலகம் இயங்கிக் கொண்டிருந்தாலும் தெற்காசிய பிராந்திய நாடுகளின் நிலையும் - கதையும் சற்றே வித்தியாசமானது. குறிப்பாக இந்தியாவை அண்டி வாழும் இலங்கையின் அரசியல் சூழல் அரை நூற்றாண்டாகச் சுழன்று கொண்டிருக்கும் வட்டத்தை இன்னும் தாண்டவி;ல்லை. சகல வளமும் உள்ள ஒரு தீவு இந்த எல்லையைத் தாண்ட முடியாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று அரசியல், மற்றது நாட்டின் மக்கள். 500 வருட கால அந்நிய ஆக்கிரமிப்பின் பின் சுதந்திரம் பெற்ற தேசத்தை நிர்வகிக்க அக்காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகள் பெருமளவில் இன்றும் காலத்திற்குப் பொருந்தக் கூடியவையாகவே இருக்கின்ற போதிலும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு அவ்வப்போது திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று வரை அவ்வாறு எத்தனை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அல்லது நாடாளுமன்றில் அது பற்றி என்னதான் பேசப்படுகிறது? போன்ற விடயங்களை சாதாரண மக்கள் அறிந்து கொள்ள விரும்புவதில்லையென்பது குறைபாடு.

அதையும் தாண்டி, இவ்வாறான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை மக்களுக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஊடகங்கள் தாம் சார்ந்திருக்கும் பக்கத்துக்குப் பங்கம் விளைவிக்காமலேயே அது பற்றி செய்தி வெளியிடுகின்றன. எனவே, நாட்டு நிர்வாகம், அபிவிருத்தி தொடர்பில் மக்கள் அறிந்து கொள்வது பெரும்பாலும் பக்க சார்பான செய்திகளே. 2014 இறுதியில் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிக்கக் கிளம்பிய வேளையில், தாம் முன்னர் தவறிழைத்து விட்டோம் என ரவுப் ஹக்கீம் தன்நிலை பிரகடனம் செய்த பின்னரே முஸ்லிம் பெருமக்களில் பலர் 18ம் திருத்தச் சட்டம் என்றால் என்னவென்றே திரும்பிப் பார்த்தார்கள்.

எனவே, இனியொரு 20ம் திருத்தச் சட்டம் வந்தால் கூட அதற்கடுத்த தேர்தல் காலத்தில் எங்காவது மேடைகளில் கேட்டால் போதும் என்ற மன நிலையில் தம் அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க மக்களும் பழகிக் கொண்டுள்ளார்கள். நாடாளுமன்றம் செல்லும் அசகாய சூரர்கள் கைகளைத் தூக்குவதும் - இறக்குவதும் எதற்காக என்றே தெரியாமல் தான் அதையும் செய்து கொண்டிருக்கிறார்கள். 

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு பிரித்தானியாவின் ஆளுங்கட்சி ஏற்றுக் கொள்ளக்கூடிய மக்கள் நலத் திட்டம் ஒன்றை முன் வைக்கும் வரை அதனை எதிர்த்துத் தோல்வியடையச் செய்வதில் ஆளுங்கட்சியினருக்கும் பங்கிருந்த வரலாற்றை சர்வதேச விவகாரங்களில் ஆர்வமுள்ளவர்கள் அறிந்திருப்பர். இதுவரை அறியவில்லையென்றால் BREXIT - UK என இணையத்தில் தேடினால் பல விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஆயினும், இலங்கையில் அவ்வாறான ஒரு சூழலைக் காண முடியாது. போதாததுக்கு எதிர்க்கட்சியிலிருந்தாலும் பெட்டிகளைக் கை மாற்றி விட்டு கை தூக்குவதற்கு ஆளுண்டு என்பதால் பெரும்பாலான அரசியல் முடிவுகளில் மக்கள் நலன் இரண்டாம் பட்சமே என்பது தெளிவாகிறது. தனிப்பெரும்பான்மையுள்ள ஒரு அரசமைவதன் பாரிய ஆபத்து இதுவென்பதை கடந்த காலங்களில் உணராவிட்டாலும் தற்போதாவது உணர்வது மக்கள் கடமையாகிறது. ஏனெனில், 2020 நாடாளுமன்ற தேர்தலில் தனியொரு கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவது, இருக்கும் அற்ப சொற்ப ஜனநாயகத்தின் முடிவின் ஆரம்பமாகவே அமையும்.

இதையெல்லாம் தேடிப் பார்த்து, அலசி – ஆராய்ந்து தம் பிரதிநிதியைத் தெரிந்தெடுக்குமளவுக்கு மக்களுக்கு நேரமுமில்லை, அதற்கான சூழலும் இல்லையென்பதும் ஓரளவு உண்மையே. ஜனரஞ்சக அரசியலுக்குப் பழகிப் போயுள்ளதால் வெற்றி பெறும் ஆளுக்கு மாலையிட்டு, வாழ்த்துப் பாடி, அவர் சகாக்களுக்குத் தெரிய வாக்களித்து விட்டு, அவர் வென்றதும் தொழில்வாய்ப்பு, வீட்டுப் பிரச்சினை மற்றும் இன்ன பிற அரசாங்க அலுவல்களுக்கான ஒத்துழைப்பு போன்ற 'வெகுமதிகளுக்காக' தன் வாக்குரிமையை விற்று விடுகிறான் அடிமட்ட குடிமகன்.

தனது தனி மனித வாழ்க்கைக்குப் பங்கம் வரும் தருணத்திலேயே அவன் சிந்திக்கிறான், கோபப்படுகிறான். அந்த மூதேவிக்குத் தானே வாக்களித்தோம் என்று சமூக வலைத்தளங்களில் குமுறுகிறான் பின் பதுவா செய்து விட்டு வேறு பிரச்சினைகளை சிந்திக்க ஆரம்பிக்கிறான். ஆக, நிலையான பிரச்சினை எது? தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவை? தானும் தன் குடும்பமும், ஊரும் சமூகமும் அச்சமின்றி சமவுரிமையுடனும் சுய கௌரவத்துடனும் வாழ்வதற்கான சூழலைத் தரக்கூடிய அரசியலை உருவாக்க எவ்வாறு பங்களிப்பது? போன்ற அடுத்த கட்ட பிரச்சினைகள் அவனுக்கு அவசியமற்றது.

21ம் நூற்றாண்டின் இக்காலப் பகுதியிலும் இலங்கையின் அரசியல் இன்னும் பிராந்திய மட்டத்திலேயே சிந்திக்கப்படுகிறது. அதைத் தாண்டிய தேசிய சிந்தனை யாருக்கு வருகிறதோ இல்லையோ கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களிடம் புகுத்தப்பட்டு விட்டது. அவர்களது தேசிய சிந்தனை தமக்கான ஒரே நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றாகி விட்டது. தம் இனமே இத்தீவை ஆள வேண்டும், என்ற அடிப்படையில் ஏனைய இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டு விட்டது.

ஆதலால், அனைவருக்கும் பொதுவான இலங்கை பற்றிப் பேசும் முற்போக்கு அரசியல்வாதிகள் பௌத்த சமயத் தலைவர்களாலேயே தாக்கப்படுகிறார்கள். அது மாத்திரமன்றி, ஆட்சியாளர்கள் இடித்துப் போட்டால் புராதன சான்றுகள் கூட 1800 களில் யாரோ தனி மனிதன் கட்டிய கட்டிடம் என மக்களுக்கு விளக்கமளித்து சமாளிக்கவும் சங்க சபாக்கள் முன் நிற்கின்றன. எனினும், பொத்துவிலில் புராதன சின்னம் காணப்படும் இ;டங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு இடம்பெறும்.

ஆக, இங்கு சட்டங்களும் சம்பிரதாயங்களும் அரசியல் தேவைகளுக்காக மாற்று வடிவம் பெறுகின்றனவே தவிர, நிலையான போக்கில் இல்லை. நிலையான போக்கும் - தெளிவான பாதையும் எது என்பதில் மக்களுக்கும் உடன்பாடு இல்லையென்பதால் அவை ஒவ்வொருவர் கோணத்தில் வேறுபடுகிறது. 

மஹிந்த அரசின் பங்காளிகளாக இருக்கும் போது அவர் வாழ்நாள் முழுவதும், ஆகக்குறைந்தது நாமல் தயாராகும் வரையாவது ஜனாதிபதியாக இருப்பதற்கேற்ப 18ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார், அதற்கு முஸ்லிம் கட்சிகள் முண்டியடித்து வாக்களித்து அவரது பேரவாவை நிறைவேற்றி வைத்தன.

பின்னர், மக்கள் அலையினால் அவரைக் கை விட்டு மைத்ரியின் பக்கம் வந்த போது தாம் 18ஐ ஆதரித்துத் தவறிழைத்து விட்டதாகக் கூறின. இப்போது குருநாகலில் புவனேகபாகுவின் அரச மண்டபம் என இதுவரை காலம் நம்பப்பட்ட கட்டித்தை இடித்து விட்டார்கள் என்றவுடன், அந்த மன்னனுக்கு முஸ்லிம் மனைவியொருவரும் இருந்தாராம் என்று பேச்சோடு பேச்சாக மஹிந்த சொல்ல, அப்படியேதும் மஹிந்த சொல்லி நான் இதுவரை கேட்கவில்லையென அப்பட்டமாக மறுத்தூதுகிறார் அலி சப்ரி.

எனவே, முன்னவர்க்கும் பின்னவர்க்கும் எதுவித வித்தியாசமும் இருக்கப் போவதில்லையென்பது கண்கூடு. யாராக இருந்தாலும் காதே இல்லாமல் மகுடிக்கு ஆடுவதாய்த் தோன்றும் பாம்பு போலவே கதை. நிலைமை அவ்வாறிருக்க, பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு வாக்காளனுக்கும் இருக்கிறது. இலங்கையின் அரசியலமைப்பு பௌத்தர்கள் தவிர ஏனைய மக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை தக்க வைத்துக் கொள்ளும் பொறுப்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.

எனவே தான், வேட்பாளர்களின் கொள்கையும் அது தொடாபிலான செயற்பாடும் முக்கியம் பெறுகிறது. அதற்காகத்தான் தேர்தல் விஞ்ஞாபனம் என்று ஒவ்வொரு கட்சியும் தமது நிலைப்பாடு தொடர்பில் எழுத்து மூல தெளிவைத் தருகிறது. இந்த தேர்தல் கால கட்டத்தில், மேடைகளில் உணர்வு பொங்கப் பேசும் எந்தப் பேச்சாளரும் ஆக்கபூர்வமாக தேச நலத் திட்டம் பற்றிப் பேசுவதை நான் காணவில்லை.கட்சி மற்றும் தனி மனித வசைபாடல்களும், பொய் வாக்குறுதிகளுமே அதிகமாகப் பேசப்படுகிறது.

ஓரளவுக்காவது நியாயமான அளவில் தேச அபிவிருத்தி மற்றும் முற்போக்கு செயற்பாடு பற்றி மக்கள் விடுதலை முன்னணி பேசினாலும் கூட, மக்கள் விரும்பும் போலியான ஜனரஞ்சக விளிம்பில் கூட அவர்கள் இல்லையென்பதால் அந்தப் பேச்சுக்களை கேட்டு இரசித்து விட்டு மக்கள் மறந்து விடுகிறார்கள். 2019 நவம்பரில் முற்போக்கு சக்திகள் மௌனித்துப் போன மர்மம் இன்னும் துலங்கவில்லை. ஆயினும், ஏதோ ஒரு வகையில் ஜே.வி.பியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறிப்பாக அரசியலமைப்பு சட்டங்கள் மீதான வாத – விவாதங்களின் போதாவது நன்மை பயக்கும்.

அடுத்து இருக்கும் முக்கிய பிரச்சினை தெரிந்த பிசாசா? தெரியாத பேயா? என்பதாகும். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தெரிந்த பிசாசுகளை நாடாளுமன்றம் அனுப்புவது மக்களுக்கு இலகுவான வழி. கண்டி மக்களுக்கு தெரியாத பேய் கூடுதல் பிரச்சினையாக இருக்கிறது. இந்த ஜனரஞ்சக பிரச்சினைக்கு மத்தியில் தற்போது சூடாக நடந்து கொண்டிருக்கும் ஈஸ்டர் தாக்குதல் மீதான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையையும் சற்று உன்னிப்பாக அவதானித்தால், இவ்வாரம் சாட்சியமளித்த முன்னாள் தேசிய புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, முக்கிய விடயம் ஒன்றை அங்கு தெரிவித்திருந்தார்.

இலங்கையில் ஒவ்வொரு சமயத்தினருக்கும் தனித்தனி அமைச்சுகள் இருந்ததும், அந்தந்த சமய விவகார அமைச்சுகள் அவர்களது சமயங்களையே முற்படுத்தி செயற்பட்டு வந்ததும் பாரிய சமூக சிக்கல்களை உருவாகியிருந்தது என்பது அவரது அனுபவ ரீதியான சாட்சியமாக பதிவாகியுள்ளது. அதற்காக பௌத்த சமய விவகார அமைச்சின் கீழ் ஏனைய சமய விவகாரங்களைக் கொண்டு வருவது எத்தனை தூரம் நியாயமானது? என்ற கேள்வியை பிராந்திய மட்டத்தில் தனித்தனியாக பேசியாவது தேசிய ரீதியாக சிந்தித்தாக வேண்டும். 

தவிரவும், அவ்வாறே ஒரு அமைச்சின் கீழ் திணைக்களமாக மாத்திரம் இயங்கி வரும் போது, அந்த திணைக்களத்துக்கு பரிந்துரையில் பணிப்பாளராகும் நபர், அல்லது ஆளுங்கட்சிக் காரர் தன்னை நிரூபிப்பதற்காக எந்தளவு கடுமையாக சமூக விவகாரங்களில் தலையிட்டுத் தகராறுகள் உருவாகிறது என்பதையும் தற்போது இலங்கை முஸ்லிம் சமூகம் கண்டு – கேட்டு உணர்ந்திருக்க வேண்டும். அதற்காக இதற்கு முன்னர் முஸ்லிம்களின் விவகாரத்துக்கு இப்படியும் ஒரு அமைச்சர் தேவை தானா? என்ற அளவில் நாற்காலியை சூடாக்கியவர்களும் அவசியமற்றவர்களே.

எனவே, சமூக விவகாரம் என்று வரும் போது அதனை சமப்படுத்துவதற்கான தெளிவுக்காகவாவது தேசிய நிகழ்வுகள் மீதான கவனம் தேவைப்படுகிறது. இன்னும் சில நாட்களில் அடுத்த ஐந்து வருடங்களுக்கான ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கப் போகும் மக்களுக்கு உணர்வு மேலோங்கலைத் தாண்டிய சிந்தனையும் கள யதார்த்தமான தீர்வும் அவசியப்படுகிறது. மாற்றுத் தலைமையை வேண்டுவது ஒரு புறம், மாற விரும்பாத முகங்கள் இன்னொரு புறம். இரண்டுக்குமிடையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கொரு முறை புதுமை செய்து கொண்டதாக மக்களும் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள்.

இதுவரை தீர்மானிக்கவில்லையென்றால் ஏற்கனவே இருந்தவர்களே ஒரே வழி. இம்முறை தேர்தலில் இரண்டு தெரிவுதான் இருக்கிறது. ஒன்று மஹிந்தவை ஏற்று – ஆதரித்தல். மற்றது, மீண்டும் அந்த யுகத்துக்குச் செல்ல விரும்பாமை. இந்த இரு விடயங்களை மையமாகக் கொண்டதே 2020 பொதுத் தேர்தல். மஹிந்த ராஜபக்ச என்பவர் தனி மனிதரில்லை. அவரைச் சூழ உள்ளவர்களே அவரது அரசியல் கொள்கையைத் தீர்மானிக்கிறார்கள். அது போலவே சஜித்தோ, ரணிலுமோ கூட தனி மனிதர்கள் இல்லை. ஆயினும், சிறுபான்மை சமூக நலன் என்ற விடயத்தில் இதில் யாரைத் தெரிவு செய்வது சிறந்தது என்பதை அனுபவப் பாடம் கொண்டு அளவிட முடியும்.

கடந்த 8 வருடங்களாக இலங்கை முஸ்லிம்கள் தமது சமய உரிமைகளில் கை வைக்கிறார்கள் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்தவ சமூகமும் அது போலவே திணிப்புக்குள்ளாகியிருக்கிறது. தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் சமயத்துக்கு அப்பாலான சமூக நிலையில் அரசியலை சிந்திக்கப் பழகிக் கொண்டுள்ளார்கள். எனவே, அவர்களுக்கு இருக்கும் தெரிவுப் பிரச்சினையும் முஸ்லிம்களுக்கு இருக்கும் தெரிவுப் பிரச்சினையும் சமனன்று.

ஆயினும், இரு சமூகங்களும் எதிர்நோக்கக் கூடிய உரிமைப் பிரச்சினைகள் ஒரே வடிவத்தையே கொண்டிருக்கும். அந்த வகையில் சிறுபான்மை சமூகமாக கூட்டியங்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அதற்கான வாய்ப்பும் அமைந்தாக வேண்டும். சிங்கள பௌத்த பெரும்பான்மையை ஆதரிப்பதும் அதற்குள் அடங்கிக் கொள்வதும் அதற்குத் தீர்வாகாது என்பதால் மக்கள் இன்னும் விரிவாக சிந்திக்கக் கடமைப்படுகிறார்கள்.

ஜனாதிபதியைத் தெரியும், பிரதமர் என் நண்பர் என்ற கோசங்களைத் தாண்டி யார் ஜனாதிபதியாக இருந்தாலும், எவர் பிரதமராக இருந்தாலும் மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், சுய கௌரவத்துடன் வாழும் சூழல் உருவாக வேண்டும் என்ற சிந்தனை முற்படுத்தப்பட வேண்டும்.

விட்டுக் கொடுப்புக்காக தெரிந்த பிசாசுகளையே மீண்டும் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டி வந்தாலும், இன்றைய தேவை முடிந்த பின் ஆரம்பிக்கும் நாளைய போராட்டங்கள் பற்றிய சிந்தனைத் தெளிவுடன் முடிவெடுப்பது கட்டாயமாகும்;. தமக்கு புதிய தலைமை வேண்டுமென்றால் அதனை மக்கள் முடிவெடுக்க வேண்டுமே தவிர, பொம்மைகள் திணிக்கப்பட இடங்கொடுக்கக் கூடாது!

jTScYcS
-Irfan Iqbal
Chief editor, Sonakar.com

No comments:

Post a Comment