அ'சேனை: ஹெரோயினுடன் கைதான ஐவருக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 July 2020

அ'சேனை: ஹெரோயினுடன் கைதான ஐவருக்கு விளக்கமறியல்


ஹெரோயின் போதைப்பொருளை  தம்வசம் வைத்திருந்த  ஐவரை எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  அக்கரைப்பற்று  நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகம் மற்றும் பாவனை  தொடர்பாக   அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரனிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் தொடர்பில் அவரது   வழிகாட்டலில்  சென்ற கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் மற்றும் அம்பாறை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா   தலைமையிலான  குழுவினர் இணைந்து  திங்கட்கிழமை(6)  மாலை கல்முனை பிராந்தியத்திற்கு உட்பட்ட  அட்டாளைச்சேனை பகுதியில் திடீர் தேடுதலை மேற்கொண்டு ஐவரை கைது செய்ததுடன் அவர்களின் வசம் இருந்த ஹெரோயின் போதைப்பொருட்களையும் மீட்டுள்ளது.

இதன் பின்னர் கைதான 5 சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இரவு  ஆஜர்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் ஜுலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.குறித்த தேடுதல் நடவடிக்கையில்   கைதானவர்கள் அனைவரும் 25, 22 ,33 ,29 ,27 வயதினை உடையவர்களாவர்.

இதில் அட்டாளைச்சேனை பகுதிக்கு அம்பாறை பரகாகல பகுதியில் இருந்து இருவர் ஹெரோயினை விற்பதற்கு வருகை தந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர்களின் நடமாட்டங்கள் தொடர்புள்ளவர்கள் சம்பந்தமாக அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் தலைமையில் புலனாய்வு விசாரணை முன்னெடுக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment