கொவிட் 19 வைரஸின் தாக்கம் மற்றும் நாட்டின் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இவ்வருட ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.
துல் ஹிஜ்ஜஹ் மாத முதல் பத்து நாட்களும் மிக சிறப்புப் பொருந்திய நாட்கள் என்பதால் எஞ்சியுள்ள நாட்களில் நல்லமல் செய்ய அனைவரும் ஆர்வங்காட்டுவதுடன், அதன் ஒன்பதாவது நாளில் (வெள்ளிக் கிழமை) அரபாவுடைய நோன்பை நோற்க ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.
உலகளாவிய ரீதியில் கொவிட் 19 வைரஸின் தாக்கம் தொடர்ந்தும் இருப்பதனால், சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களையும் உரிய முறையில் பேணி நடந்துக் கொள்வதுடன், பெருநாள் தொழுகையின் போது சமூக இடை வெளிப் பேணுதல், முகக்கவசம் அணிதல், வீட்டிலிருந்தே வுழூ செய்துக் கொண்டு வருதல் போன்ற விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
சமூக இடைவெளிப் பேணி பெருநாள் தொழுகை நடாத்தப்படவேண்டும் என்பதால், ஆண், பெண் அனைவரும் ஓர் இடத்தில், மார்க்க வரையறைகளைப் பேணிய நிலையில், PHI உடைய அனுமதியுடன் தொழுகைக்காக ஒன்று சேர்வது பொருத்தமா என்பதை மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள் கலந்தாலோசித்து தமது பிரதேசத்திற்கு பொருத்தமான வழிமுறையைச் செயற்படுத்த வேண்டும்.
நோயாளிகள் மற்றும் சிறுவர்கள் பெருநாள் தொழுகை நடாத்தப்படும் இடத்திற்கு வருகைத் தருவதைத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
துல் ஹிஜ்ஜஹ் மாதம் பிறை ஒன்பது ஸுப்ஹுத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் உடைய மூன்றாவது நாள் பிறை 13 (04.08.2020 செவ்வாய் கிழமை)அஸ்ர் வரை தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.
இத்தினங்களில் முஸாபஹா, முஆனகா போன்ற செயல்களை தவிர்ந்து ஸலாம் கூறுவதுடன் போதுமாக்கிக் கொள்ளவேண்டும்.
பெருநாள் தினங்களில் ஏழை எளியவர்கள் மீது கருணை காட்டுவதுதோடு, அவர்களுக்கு தம்மாலான உதவிகளை செய்ய வேண்டும்.
உழ்ஹிய்யாவுடைய அமலை நிறைவேற்றுபவர்கள், ஜம்இய்யா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அது தொடர்பாக ஏலவே வெளியிட்டுள்ள வழிகாட்டல்களைப் பேணி அவ்வமலை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.
பெருநாள் தினங்களில் பிறமத சகோதரர்களின் உணர்வுகள் தூண்டப்படும் விதத்தில் எமது செயற்பாடுகள் அமையக்கூடாது.
தற்போதைய சூழ் நிலையில் சுற்றுலாக்கள், பயணங்கள் மேற்கொள்வதை குறைத்துக் கொள்வது, வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கு காரணமாக அமையும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்புனித தினத்தில் உலகளாவிய ரீதியில், குறிப்பாக எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து நெருக்கடிகளும் நீங்கி எல்லா இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments:
Post a Comment