ம'களப்பு: மீண்டும் பணியில் இணைக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 June 2020

ம'களப்பு: மீண்டும் பணியில் இணைக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்


கடந்த அரசாங்க காலத்தில் நியமனம் பெற்று இந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் சார்பில் தம்மை மீண்டும் பணியில் இணைக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவிடம் இன்று(10) கையளித்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் P.கமல்ராஜ், தங்களுடைய வேலையானது முறைப்படியாக இரண்டு நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டது எனவும் கடந்த ஜனாதிபதத்தேர்தல் காலத்திற்கு முன்னதாக திகதியிடப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் தேர்தல் முடியும் வரை பதவிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் தங்களுக்கான வேலையினை இன்னும் வழங்காது இடைநிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்தார். தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அவர்களும் குறித்த பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்களை பணிக்கு இணத்துக்கொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த போதிலும் இதுவரையிலும் அரசாங்கம் இது தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

எனவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களும் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி தம்மை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாத பட்சத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலினை இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் புறக்கணிக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த அரசாங்க காலத்தில் இவ்வாறு 6547 பேர் குறித்த பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்களாக நியமனம் செய்யப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

-ஆதிப் அஹமட்

No comments:

Post a Comment