ஆளுக்கொரு குமிழியும் ஆயிரம் குழப்பங்களும்..! - sonakar.com

Post Top Ad

Friday, 19 June 2020

ஆளுக்கொரு குமிழியும் ஆயிரம் குழப்பங்களும்..!


21ம் நூற்றாண்டின் முஸ்லிம் சமூக வரலாறு குறித்துப் பேசும் போதெல்லாம் ஞானசார என்ற பெயர் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். அந்த அளவுக்கு சமூகத் தரவுகளை அவரும் ஆராய்ந்து கொண்டேயிருக்கிறார்.

எழுந்தமேனியாக, வழமையாக முன் வைக்கப்படும் 'எம்மவர்களே போட்டுக் கொடுக்கிறார்கள்' என்ற குற்றச்சாட்டை மறுதலிக்கவில்லையாயினும், மற்றவர் ஆராய்ந்தால் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு நாங்கள் ஒன்றும் இரகசியமான சமூகமில்லையென்ற உண்மையையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

சுய விமர்சனத்தை எப்போதுமே விரும்பாத சமூகமாதலால் நாம் நம்மை எவ்வாறு காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ளத் தவறுகிறோமே தவிர, பல குழுமங்களாகப் பிரிந்து நின்று நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டுள்ள சமூகக் குமிழிகளை மற்றவர் அறிந்து கொள்வது அவ்வளவு கடினமான விடயம் ஒன்றில்லை.

பௌத்த பேரினவாதத்தை இலங்கையில் நிறுவியாக வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலுக்கு முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாகிறது என்பதை மாத்திரம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, தற்காலத்தில் கட்டு;க்கடங்காது போயிருக்கும் சமூக செயற்பாடுகள் ஏனைய சமூகங்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது என்ற இன்னொரு கோணத்தை ஏற்றுக்கொள்ளும் பிரிவினரும் கூட எமக்குள்ளே இருக்கிறார்கள்.

இவ்விரண்டையும் மறைத்து போலியாக வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் அவ்வப்போது ஞானசாரக்கள் புள்ளி விபரங்களை வெளியிடும் போது எமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த அதிர்ச்சி கூட சொற்ப நேரம் தங்கும் உணர்வலையேயன்றி வேறில்லை. ஏனெனில், எல்லோருக்கும் உண்மை தெரியும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தினை அரசியல் ரீதியாகப் பிளவு படுத்தும் கைங்கரியத்துக்குத் துணை போவதற்கு எவ்வாறு கட்சி ரீதியாக எம் மக்கள் பிரிந்திருக்கிறார்களோ அவ்வாறே மார்க்க ரீதியான சிதைவுக்குப் பலம் சேர்க்க பல கொள்கை இயக்கங்களாகப் பிரிந்து நிற்கிறோம். இங்கே ஒவ்வொரு இயக்கமும் தம்மைப் பின்பற்றுவோரைத் தாம் அழைத்துச் செல்லும் பாதையை நிர்ணயித்துக் கொண்டுள்ளது. எனவே, அதற்கு உடன்பட்டவர்கள் மாத்திரமே சார்ந்தோராகவும் ஏனையோர் எதிரிகளாகவும் பார்க்கப்படுகின்றனர்.

1400 வருடங்களுக்கு முன்பு முதற் தலைமுறை முஸ்லிம்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு இருந்த தெரிவும், தெளிவும் பாதையும் ஒன்றாகவே இருந்தது. இன்றைக்கு நிலைமை அவ்வாறில்லை. இறை பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் இஸ்லாமிய வழிமுறைகள் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு – முஸ்லிம்கள் எதிரிகளாக இருக்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலையை ஞானசாரக்கள் பயன்படுத்துவது அவர்கள் தவறா? எமது தவறா? என்பதை சிந்தித்தாலும் கூட, இக்கால கட்டத்தில் அதற்குத் தீர்வு காண முடியாது.

நீண்டகாலமாக, இலங்கை உட்பட பல்வேறு நாட்டவரின் உரிமைப் போராட்ட, மனித உரிமை விவகாரங்களுடன் தொடர்பு பட்டு இயங்கி வந்த எனது சொந்த அனுபவத்தில், 2011 அநுராதபுர சியார உடைப்பு சம்பவத்தை ஒரு தூர நோக்கிலான வெள்ளோட்டமாகவே நான் கணித்திருந்தேன். அப்போது அநுராதபுரம்..எதற்கான ஆரம்பம்? என்ற தலைப்பில் நான் இணையங்களில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைக்கு எம்மவரில் சிலர், சியாரத்தை தூக்கி;ப் பிடிக்க வேண்டிய அவசியமில்லையென்றார்கள். அங்கு அவர்களுக்கு சியாரம் என்ற தலைப்பு கண்ணில் பட்டதே தவிர அதன் உள்ளடக்கம் தென்படவில்லை. பொதுவாகவே முஸ்லிம் சமூகம் தலைப்பைப் பார்த்து செய்தியை முடிவெடுக்கும் வழக்கத்தை தற்காலத்தில் வளர்த்துக் கொண்டுள்ளதால் வாசிக்க வைப்பதும் சிரமமான காரியமே.

அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தாலும் இலங்கையில் சமூக எழுச்சிக்கான வாய்ப்பில்லையென்ற உண்மையையும் உணர்ந்திருந்தோம். எனவே, புலம் பெயர்ந்த நாடுகளில் இது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தித் தயார்படுத்துவதில் பல ஆர்வலர்கள் இணைந்து செயற்படலானார்கள். 2014 மே மாதம் அளவில் அது, இலங்கையில் இடம்பெறும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தும் அளவுக்கு வளர்ந்து வந்தது. வெளிப்படையாக இதை அவதானிக்கும் போது இது நல்ல விடயம் தானே? என்று தான் இருக்கும். ஆனால், அந்த முதலாவது ஆர்ப்பாட்டம் இங்கிலாந்தில் பாரிய சமூகப் பிரச்சினைகளையும் உருவாக்க வித்திட்டது. தாய்நாட்டில் உள்ள சமூகத்துக்காக குரல் கொடுக்க என ஒன்றிணைவதில் கூட பிளவு என்பது ஆச்சரியமாகவே இருந்தது. திரும்பிப் பார்த்த போது, தெமட்டகொட வீதியைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு கொள்கை இயக்கத்தின் ஐந்து 'அறிவாளிகளின்' ஈனச் செயலாகவே அது இருந்தது. ஒரு வகையில் அதிர்ச்சியாகவும், மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் இவர்களுக்கு என்ன பிரச்சினை? என்ற கேள்வியும் எழுந்தது.

தேடிப்பார்த்த போது, ஐக்கிய இராச்சியத்தில் வாழும் முஸ்லிம்களின் சமூகத் தலைமைத்துவம் தம்மிடமிருந்து பறிபோவதாக அந்த கொள்கை இயக்கவாதிகள் நினைத்ததே அதன் அடிப்படைக் காரணமாக இருந்தது. சிறுவர்களுக்கு சீறா கற்பிக்கிறோம், வருடத்துக்கு ஒரு முறை சான்றிதழ் கொடுக்கிறோம் என்று இருந்த அந்த அமைப்பு, ஏதோ ஒரு சமூகக் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததைக் கண்டு பொங்கியெழுந்தது. லண்டனில் உள்ள தூதரகத்துக்குச் சென்று ஏற்பாட்டாளர்கள், அவர்களுக்கு ஆதரவளிப்போரின் பெயர் விபரங்களைக் கொடுத்து மிரட்டியது, ஆர்ப்பாட்டத்துக்கு செல்வோர் இனி வாழ்நாளில் இலங்கை செல்ல முடியாது என்று அச்சுறுத்தியது, போதாததுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சிலின் இலச்சினைகளை எடிட் செய்து கடிதம் வெளியிட்டு சமூகத்தில் குழப்பத்தையும் உருவாக்கியது.

இத்தனைக்கும், அது வரை காலமும் ஒரு அமைதியான அமைப்பாகவே அது அறியப்பட்டு வந்தது. ஆனால், பிறிதொரு குழு சமூகத்தை ஒன்று கூட்டும் வல்லமை கொண்டதாக உருவெடுத்ததை, அதுவும் இலங்கை முஸ்லிம்கள் புலம் பெயர்ந்த மண்ணில் கண்ட அந்த முதலாவது எழுச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தனி நபர் தாக்குதல், கட்டுக்கதைகள் பரப்பி முன்னணியில் இயங்கியவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்குதல் என எல்லா அட்டூழியங்களையும் செய்தது. அதன் தலைவராக இருந்த டாக்டர் இப்போது இலங்கையில் இலத்திரனியல் உலகில் பிள்ளை வளர்ப்பதெப்படி? என மற்றவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். லண்டனில் நடந்ததை அறியாத மக்கள் அதை நம்பிக் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலை அனுபவங்களை மீட்டும் போது ஒவ்வொரு சமூகக் குமிழியும் தமக்கென உருவாக்கி வைத்திருக்கும் உலகுக்குள் மற்றவர்களை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதோடு எவ்வாறு முஸ்லிம்களுக்குள் முஸ்லிம்களை எதிரிகளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இலங்கையில் கூட இதற்கு பல ஆயிரம் உதாரணங்களை முன் வைக்கலாம். முஸ்லிம்களின் சமய ரீதியிலான தலைமைத்துவத்தைத் தகர்த்தாக வேண்டும் என்ற பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு வெளியில் ஆள் தேட வேண்டிய அவசியமில்லையென்பது கண்கூடு.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா எதைச் சொன்னாலும் அதற்கெதிராகப் பேசியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஒரு கூட்டம், அதிகாரம் கையில் கிடைத்ததும் மார்க்கத் தலைமைத்துவத்தைப் பலவீனப்படுத்தும் கூட்டம், கொள்கை ரீதியான பிளவுகள் ஊடாக அடுத்தவரைப் பற்றித் தகவல் வழங்கும் கூட்டம் என பல்வேறு சமூகக் குமிழிகளுக்குள் இன்றைய இலங்கை முஸ்லிம்கள் அடங்குகிறார்கள்.

பொதுவாக பழமைவாதத்தின் மீதான பிடிவாதம் அதிகமுள்ள சமூகமாதலால், 1970 களில் கண்ட மாற்று சிந்தனையை காலத்துக்கு ஏற்ப மாற்றி சிந்திக்க முடியாமலும் இன்றைய தவிப்பு தொடர்கிறது. இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை இன்றைய தலைமுறையினர் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இவர்களது தந்தை இல்லாவிடின் பாட்டன் காலம் வரையாவது மார்க்க விவகாரங்கள் ஒரு நிலையிலேயே இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்தும் விரும்புகிறவர்கள் தம்மைப் பாரம்பரிய முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறார்கள். தவறில்லை, ஏனெனில் 1000 வருடங்களுக்கு மேற்பட்ட பாரம்பரிய பழக்க வழக்கங்கள் தான் அவை.

ஆயினும், மாற்றம் காண வேண்டிய காலம் வந்தும் கூட, அறுத்து – அவித்துக் கறியாக்கி உண்டு ஏப்பம் விட்ட கோழி வயிற்றுக்குள் இருந்து கூவும் என்று இன்றும் நம்பிக் கொண்டிருப்பது நவீன காலத்தில் தம்மை எங்கு வைத்திருக்கிறது? என்று சிந்தித்தாக வேண்டும். நபிகளாருக்கு வழங்கப்படாத கராமத்துக்களை தனி நபர் மீதான மரியாதைக்குப் பகரமான மகுடமாக பேச ஆரம்பித்து இன்றும் அதிலிருந்து விடுபட முடியாதவர்கள் இருக்கிறார்கள்.

உலக உம்மத்தின் அங்கமாக இருத்தலானது தாம் சார்ந்த பாடத்திட்டத்தில், தாம் சார்ந்த அரபுக் கல்லூரிகளில் கற்பதும் அதனூடான பிறிதான சகோதரத்துவமும் என்று எண்ணிக் கொண்டிருப்பதனால் தம்மைப் படித்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கும் இதிலிருந்து விடுபட முடிவதில்லை.

இஸ்லாமிய வாழ்வியலுக்கு 'இவ்வளவும்' போதுமானது என மென்மைப் போக்கில் வாழப் பழகிக்கொண்ட இன்னொரு குழுவைப் பொறுத்தவரை அவர்களுக்கு மாற்றம், நவீனம், புதிய சிந்தனைகள் ஹராமாகவே இருக்கிறது. இன்னுமொரு குழுவோ இந்தியாவில் பேசப்படும் விடயங்களுக்கு இலங்கையில் அசைவிருந்தால் போதுமானது என்று வாழப் பழகிக் கொண்டிருக்கிறது.

எது எப்படியாயினும், இவர்கள் அனைவரிடமுமிருக்கும் பொதுப் பண்பாடு, நாம் யார், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது அடுத்தவருக்குத் தெரியாது என்ற நிலைப்பாடாகும். அதுவும் சிங்களவர்களுக்கு அது தெரியவே nதியாது என்றும் கருதிக் கொள்கிறோம். ஆனால், அவர்களோ நமக்குள் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன, எந்த அரபுப் பாடசாலை எந்த கொள்கை இயக்கத்தைச் சார்ந்தது? அங்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் எந்த நாட்டைச் சார்ந்தது? என்ற முழு விபரங்களையும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இலங்கையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் எந்தவொரு கொள்கை இயக்கத்தைக் கேட்டாலும் எங்களுக்கு வேறு எந்த நாட்டிலும் கிளைகள் இல்லை, அல்லது நாங்கள் வேறு எந்த நாட்டினது கொள்கை இயக்க அமைப்பின் கிளையுமில்லையென்றே சொல்லிக் கொள்ள விரும்புகிறார்கள். உலகம் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் உலக முஸ்லிம் உம்மத்தின் இயக்கம் எவ்வாறு நாட்டுக்கு நாடு ஒன்று படுகிறது அல்லது வேறு படுகிறது என்பது ஒன்றும் இரகசியமில்லை.

இலங்கையில் ஞானசாரவுக்கு எதிராக பொது மக்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் போது அமைதி காத்து விட்டு, எகிப்தில் முர்சியைக் கைது செய்ததும் அதற்கு எதிர்வினையாற்றுவதும் துருக்கி அதிபர் அர்துகான் நான்கு விரலைக் காட்டியதும் அதனைப் பிரதி செய்து எதிர்வினையாற்றுவதும் மறைத்து வைக்க முடியாத உணர்வுகளின் வெளிப்பாடுகள். ஏனெனில் அந்த வகை இலங்கை முஸ்லிம்களுக்கு நாட்டில் நடக்கும் விடயங்களை விட குறிப்பிட்ட சில வெளிநாடுகளில் நடைபெறும் விடயங்களிலேயே ஆர்வம் அதிகம்.

இங்கு யார் சரி அல்லது பிழை? என்ற வாதத்தை நோக்கி நகரவில்லை. மாறாக, இலங்கையெனும் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட இத்தீவில், நமது தேசிய உணர்வின் அடிப்படையும் பங்களிப்பும், செயற்பாடும் மீள் வாசிப்புக்குட்படுத்தப்பட்டாக வேண்டும் என்பதையே வலியுறுத்த விரும்புகிறேன். இதற்கு முன்னரும் பல உரைகளில் இதனை அவ்வப்போது வலியுறுத்தி வந்திருப்பதன் தொடர்ச்சியே இது.

நாட்டின் அரசியல் வேறோரு கோணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு வகையில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக முஸ்லிம்களுக்கு இருந்து வரும் அரசியல் போதை தெளிவுற வேண்டுமானால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் எதிர்க்கட்சியில் அமர்வதும் காலப் பாடமாக இருக்கும். ஆட்சியின் பங்காளிகாக இருந்து அமைச்சுப் பதவிகளில் அலங்கரித்துக் கொண்டு, தான் வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்கும் வகையில் 18ம் திருத்தச் சட்டத்தை மஹிந்த ராஜபக்ச கொண்டு வந்த போது இதே முஸ்லிம் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள்? கை தூக்கி ஆமாம் போட்டார்கள், அதன் பின் அதற்கு பெட்டிகளில் கை மாறிய மில்லியன்கள் தொடர்பில் பிரிந்து சென்றவர்கள் கதை சொன்னார்கள்.

ஆக, இம்முறை ஒரு மாற்றம் வருவதில் பலனுண்டு. எவ்வாறாயினும், அரசியல் அதிகாரம் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் இருப்பு – சலுகைகள் மற்றும் உரிமைகளில் கை வைக்கும் முழுமையான நிகழ்ச்சி நிரல் அரங்கேறப் போகிறது என்பது எதிர்பார்க்கப்படும் போது அதற்குத் துணை போவதை விட எதிரணியில் இருந்து குரல் எழுப்பி அதனூடாக சர்வதேச அவதானத்தைக் கவர்ந்திழுப்பது பயன் தரும்.

எனினும், மாகாணம், ஊர் என்ற நிலை மாறி தெருவுக்கொரு எம்.பி வேண்டுமென்ற சிந்தனைப் போக்கு ஊற்றெடுத்திருக்கும் நிலையில் நாடாளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனாலும் அது கட்டாயமாக தேவைப்படுகிறது. எனவே, யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று சிந்திப்பதோடு ஆளுங்கட்சியில் தரகர்களை உருவாக்காது மாற்று சக்தியை உருவாக்குவதும் காலக் கடமையாகிறது.

சிக்கலான இந்த போராட்டம் பற்றி சிந்திக்க இன்னும் ஆறு வாரங்களே இருக்கிறது, ஆழமாக சிந்தித்தால் ஆயிரத்தில் ஒரு குழப்பத்துக்காவது தீர்வு கிட்டும்!

jTScYcS
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment