பொத்துவில் சர்ச்சையும் காலத்தின் தேவையும் - sonakar.com

Post Top Ad

Sunday, 21 June 2020

பொத்துவில் சர்ச்சையும் காலத்தின் தேவையும்

https://www.photojoiner.net/image/teRgpPWO

எவ்வளவு வாரிக் கொட்டினாலும் அவர்கள் தேவை வேறு என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது!

மே மாதம் நடுப்பகுதியில் பொத்துவில் நில அபகரிப்பு முயற்சி தொடர்பாக பல முனைகளிலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருந்தன. மெசன்ஜரில் கூட அதைப் பற்றி எழுதுங்கள் என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். அங்கு மக்கள் களமிறங்கிப் போராட வேண்டிய தேவையொன்று உருவாகி வருவதனால் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்திருந்தேன். இடையில் எஸ்.எஸ்.பி மஜீத் உட்பட ஊர்ப் பிரமுகர்கள் பலருடன் இது பற்றி பேசி பல தகவல்களைத் திரட்டியிருந்தேன். பல அரசியல்வாதிகளுடன் அதனைப் பகிர்ந்தும் கொண்டேன்.

பொத்துவில், குறிப்பாக சின்னப்புதுக்குடியிருப்பு என அறியப்பட்ட பகுதியிலிருந்து பல ஆவணங்கள் வந்து சேர்ந்தன. வழக்கம் போல அவர்களிடம் கேட்ட முதற் கேள்வி, குடியிருப்பு காணிகளுக்கு 'உறுதி' இருக்கிறதா? என்பது தான். அதற்கான ஆதன இடாப்பு பிரதிகள் உட்பட பல ஆவணங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். அதற்கு மேலதிகமாக தேவைப்பட்ட விளக்கங்களை பொத்துவில் ரம்சான், முராத் மற்றும் அவர்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற தொடர்புகள், நேரடியாக எம்மைத் தொடர்பு கொண்டவர்கள் ஊடாகவும் வாய் மூலமாக கேட்டறிந்த போது மக்களிடம் இருக்கும் ஆதங்கமும், நாம் அதைச் செய்தோம் ஆதலால் அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற பலவீனமான நம்பிக்கையும் பளிச்செனத் தெரிந்தது.

இலங்கையில் எல்லாப் பகுதிகளிலும் இந்த நம்பிக்கை, அவ்வளவு ஏன் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவைக்குச் செல்ல முன்னர் துஆ கேட்ட தம்புல்ல பள்ளிவாசலுக்கு அடுத்த சில வாரங்களிலேயே பிரச்சினை வரும் என்றும் கூட யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்படி நம்புவதும் ஏமாறுவதும் என்ற வட்டத்திலிருந்து சமூகம் வெளியேறி, உரிய முறையில் தமது இருப்பை ஆவணப்படுத்தியாகவே வேண்டும். 

வட - கிழக்கில் எல்லோரும் வந்தேறு குடிகள், ஏனைய பகுதிகளில் நாம் சொல்வதைக் கேட்டு வேண்டுமானால் இருங்கள் என்று சொல்லப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஒட்டு மொத்த தீவும் 2500 வருடங்களுக்கு முன் அயல் நாட்டிலிருந்து வந்து உருவான ஏதோ ஒரு குடிக்கு மாத்திரம் தான் சொந்தம் என்றால் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட 48,000 வருடங்களுக்கு முந்தைய கற்கால ஆயுதங்கள் எந்தக் குடிக்கு சொந்தமாக இருந்தது? அல்லது ஆதி மனிதன் இலங்கையில் வாழ்ந்ததற்குச் சான்றான பலாங்கொட மனிதனின் (Balangoda Man) சமூகம் எந்தக் குடிக்குச் சொந்தமானது? என்ற பல கேள்விகள் எழும்.

ஆனாலும், அதிகார அரசியலில் சலுகைகளைப் பெற்று அடங்கும் கூட்டமாக வாழும் வரை எதிர்கால சிக்கல்களை முன் கூட்டியே சிந்திக்கும் தேவையை எம் மக்கள் உணரப் போவதில்லை. அண்மையில் கண்டியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் சமூகப் பிரமுகர்களுடன் ஒரு சந்திப்பிருந்தது. அந்த சந்திப்பு முடிந்து விடை பெற முன்பதாக அந்தப் பள்ளித் தலைவரிடம் ... 'எல்லாம் சரி, பள்ளிவாசலுக்கு உறுதியிருக்கிறதா' என்று கேட்டேன். அவரும் அதைப் புரிந்து கொண்டு பதிலளித்திருந்தார். ஆக, இது ஏதோ ஒரு மூலையில் நடக்கும் பிரச்சினையென்று எண்ணிக் கை விடக்கூடியதன்று.

பொத்துவில் காணி விவகாரம் தொடர்பில் மக்களிடம் காணப்படும் பொது அறிவில் ஒழுங்குப் பிரச்சினை (sequence) இருக்கிறது. ஆயினும், சட்ட ரீதியாகப் போராடுபவர்களிடம் அது குறித்த தெளிவு இருப்பதாகவே தென்படுகிறது. ஆவணங்கள்,  நன்கொடைகளாகப் பெறப்பட்ட காணிகள் மற்றும் வழங்கப்பட்ட தேதிகள், கிடைக்கப் பெற்ற அங்கீகாரம் மற்றும் கிளறப்படும் இனவாதம் இடம்பெற்ற கால வரிசை போன்றன முக்கியமான அம்சங்கள். 

ஏலவே, சோனகர்.கொம் மற்றும் நவமணியில் எனது வாராந்த கட்டுரையொன்றில்  சுட்டிக்காட்டியிருந்த படி...எஸ்.எஸ்.பி மஜீத், நேர்த்தியான ஒரு கேள்வியை முன் வைத்திருந்தார். அதாவது அங்கு காணப்படுவதாகக் கூறப்படுவது தொல்லியல் எச்சங்களா அல்லது பௌத்த விகாரையின் இடிபாடுகளா? அவை தொல்லியல் எச்சங்கள் என்றால் அதனை அங்கு பாதுகாத்ததில் எங்களுக்கும் தான் பங்கிருக்கிறது. யாரும் எதையும் திட்டமிட்டு மறைக்கவில்லை. 

ஒரு காலத்தில் அங்கு மண் மேடு குவிந்திருந்தது, நான் கூட அங்கு சென்று ஹை-ஜம்ப் (high jump) பயிற்சி செய்திருக்கிறேன். பிற்காலத்தில், ஊர் மக்கள் தான் அங்கு புராதன எச்சங்கள் (ancient remains) இருப்பதை அதிகாரிகளுக்கே சொன்னார்கள் என்றும் சொன்னார்.

எதுவாயினும், ஊர் மக்களின் எழுச்சியும், நாட்டமும் ஒற்றுமையுமே இப்போராட்டத்திற்கு அவசியமான பலத்தைச் சேர்க்கும். தற்போது அது நடந்தேறி வருகிறது. பிரதேச வேறுபாடின்றி அங்குள்ள மக்களின் நியாயத்துக்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும், சேர்ந்து போராட வேண்டும்.

புல்மோட்டை அரசிமலையிலிருந்து பொத்துவில் ஊடாக..... பாதைகள் பல விதம்!

jTScYcS

Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment