யுத்த வெற்றியின் பின் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவ என்னவெல்லாம் நடக்கிறதென்று கடந்த ஒன்பது வருடங்களாக எழுதுபவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், பேசுபவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அரசியல் மேடைகளில், தொலைக்காட்சிகளில், செய்தியாளர் சந்திப்புகளிலும் குரல்கள் ஓங்கியொலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும், யார் யாருக்கு அது இதுவரை புரிந்துள்ளது? புரிந்ததும் எது வரை தெரிந்துள்ளது என பல கேள்விகள் உண்டு. உலகத்துக்கே ஜனநாயக பாடம் எடுத்து, விரும்பிய நாடுகளில் எல்லாம் ஆடசியைக் கவிழ்த்து, மனித உரிமை என்ற போர்வையில் பலஸ்தீன மண்ணில் இஸ்ரேலிய ஆதிக்கத்துக்கு அங்கீகாரமளித்து அடாவடி செய்து கொண்டிருந்த உலக பொலிஸ்காரன் அமெரிக்கா இன்று நிலை குலைந்து போயுள்ளது.
கருப்பின மக்கள் மீதான அடக்குமுறை அங்கு சக மனிதரை மதிக்கும் சகல உள்ளங்களையும் தட்டியெழுப்பியுள்ளது. உலகமெங்கும் அதற்கான ஆதரவு பெருகிக் கொண்டே செல்ல, வெள்ளையின மேலாதிக்கம் கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனித்தும் தொடர்ந்தும் தன் செயல்களால் அசி;ங்கப்பட்டும் வருகிறார்.
கருப்பின மக்கள் மீதான அடக்குமுறை அமெரிக்காவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அமெரிக்க வரலாற்றில் பராக் ஒபாமா என்றொரு கருப்பின ஜனாதிபதி பதவியில் இருந்திருக்கலாம், ஆனாலும் அடிப்படைச் சிந்தனை மாற்றம் வரவில்லை. அண்மையில் பொலிஸ்காரர்களின் அடாவடியால் அநியாயமாகப் பலியான ஜோர்ஜ் ப்ளொய்டின் மரணம் பலரைத் தட்டியெழுப்பியுள்ளது. 21ம் நூற்றாண்டில் மனிதம் குறித்த அமெரிக்காவின் போலிப் பேச்சுக்களை துகிலுரித்து நீதி வேண்டி மக்கள் குரல் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். அரேபியர்களைக் கொலை செய்து விட்டு அமைதி காப்பது போல் எங்களையும் கொலை செய்து உலகை வாய் மூடச் செய்யப் போகிறீர்களா? என்றும் போராட்டத்தில் பதாதை பிடித்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
தனது சொந்த மக்களுக்கு எதிராகவே இராணுவத்தினரை இறக்கப் போவதாக சொன்னதோடு ட்ரம்பின் போலி ஜனநாயக சாயம் வெளுத்து விட்டது. ஆதலால், அங்கு இதுவரை மேலாதிக்க சிந்தனையில் இருந்த மக்கள் கூட மாறறம் கண்டுள்ளார்கள். போராட்டம் தொடர்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரை யுத்த காலம் வரை கூறப்பட்ட ஒரே நாடு என்ற கோசம் எல்லோரையும் இணைத்திருந்தது. சமாதானத்தை விரும்பிய சிங்கள - முஸ்லிம் - தமிழ் மக்கள் ஓரணியிலேயே இருந்தார்கள். குறிப்பாக முஸ்லிம் சமூகம் நாட்டின் பிரிவினையை விரும்பவில்லை, அதே போன்று அநியாயமாக தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடாவடிகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
இடையில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் தேவைப்பட்ட அரசியல் பிரிவினையை கிழக்கில் அதுவும் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறிக் கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பூடாகவே விதைத்ததில் மூன்றாம் சக்தியொன்றுக்குப் பலனிருந்தது. அந்த மூன்றாம் சக்தி எதற்காக இனப் பிரிவினைகளை வளர்த்தாலும் அதைக் கட்டுப்படுத்தி நாட்டின் ஐக்கியத்தைப் பேண வேண்டியது அரசின் கடமையாகவே இருந்தது.
ஏனைய மாகாணங்களில் யுத்த முடிவுக்கு முன்னதாக அந்த நிலை இருந்தாலும் கூட வட – கிழக்கில் அரசும் அதில் இலாபமடைந்தது. குறிப்பாக, கிழக்கில் முஸ்லிம் சமூகத்தோடான நட்பை தமிழ் சமூகத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாடாகக் காட்டிக் கொள்வதில் அரசு முனைப்பாக இருந்தது. அக்கால அரசுகள் அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தன என்றால் மிகையில்லை.
காலம் மாறி, யுத்தம் முடிவுற்று, அதுவும் பலம் வாய்ந்த போராட்டக் குழுவாக இருந்த அமைப்பிலிருந்து விநாயக மூர்த்தி முரளிதரனைப் பிரித்தெடுத்து, கிழக்கில் அவரூடாக விதைத்த அடுத்த கட்ட பிரிவினை அரசியலுக்கு முஸ்லிம் சமூகம் பலியாகப் போகிறது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிந்தது. ஆயினும், முஸ்லிம் அரசியல் அதன் தீவிரத்தன்மையை இன்னும் புரிந்து கொண்டதாகத் தெரியிவில்லை.
மையத்து வீட்டில் ஒருவர் மாத்திரம் ஓங்கிச் சிரித்தால் எப்படியானதெரு சலனம் ஏற்படுமோ அவ்வாறே முஸ்லிம் விரோத அரசியலை முஸ்லிம் அரசியல்வாதிகளே நியாயப்படுத்தும் போது அதிர்ச்சியாக இருக்கும்.
கடந்த காலங்களிலும், தற்போதைய கொரோனா மையத்து விவகாரங்களிலும் இதை வெளிப்படையாகக் காண்கிறோம். இருந்தாலும் எதுவுமே நடக்காதது போல் அபிவிருத்தி மற்றும் இணக்கப்பாட்டு அரசியல் எனும் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெருந்தேசியக் கட்சிகளை ஆதரிக்கும் எல்லா குறுங்கட்சி சார்பு முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதையே செய்கிறார்கள். ஆகவே, அதற்கு அக்கரைப்பற்று, கண்டி, கொழும்பு என்ற பேதமில்லை. ஒவ்வொருவரின் ஜால்ரா ஓசையின் அளவைப் பொறுத்து அவர்கள் திரும்பிப் பார்க்கப்படுகிறார்கள். என்ன சொன்னாலும், ஒரு கள யதார்த்தம் இங்கு புரியப்பட்டே ஆக வேண்டும்.. அதுதான், பேரினவாதிகளின் அடக்குமுறை நிகழ்ச்சித் திட்டம் கிழக்கை வந்தடைந்து விட்டது.
கிழக்கு ஏன் முக்கியம் பெறுகிறது? என்ற கேள்வியின் விடை மிகவும் இலகுவானது. அங்கு முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள், முஸ்லிம் தனித்துவ அரசியல், முஸ்லிம் பெரும்பான்மை, தனி நிர்வாக அலகு என கடந்த காலங்களில் பல கோசங்கள் கிழக்கை மையமாக வைத்தே பேசப்பட்டு வந்தன.
வட புலத்தில் இருந்த முஸ்லிம் சமூகக் கட்டமைப்பு சிதைந்து கால் நூற்றாண்டாகி விட்டது. இன்னும் அங்கு மீள் குடியேற்றம் பற்றிப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, மீளக் குடியேறியவர்களிலும் பலர் முழுமையாகத் தம் வாழ்வியலை அங்கு அமைத்துக் கொள்வது பற்றி சந்தேகத்துடனேயே இருக்கிறார்கள். யுத்த காலத்திலும், பாரிய விலை கொடுத்தாலும் கூட கிழக்கில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் தாக்குப் பிடித்தன. பல பாரம்பரிய குடியிருப்புகளில் இன்னும் மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆயினும், இலங்கைத் தீவு பௌத்த பாரம்பரியத்தை மாத்திரமே கொண்டதென நிறுவும் நிகழ்ச்சித் திட்டம் தற்போது வேறு நிலையை அடைந்துள்ளது. புல்மோட்டை அரசிமலையில் ஆரம்பித்த இவ்வாக்கிரமிப்பு, கிழக்கு மாகாணத்திலேயே திருகோணமலை தாண்டி வாழும் முஸ்லிம்களுக்குப் பிரச்சினையாகப் படவில்லை. அது போலவே, மாயக்கல்லியையும் மறந்து தற்போது பொத்துவில் விவகாரத்திலும் எதுவுமே நடக்காதது போல் மௌனித்து இருப்பதை விரும்புகிறது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம்.
வழமை போல, முஸ்லிம் பெயரில் அரசியல் செய்து கொண்டிருக்கும் கட்சிகள் நாங்கள் பேசினால் அது இனவாதமாகி விடும் என்று ஒதுங்குகிறார்கள். இப்போது ஆட்சியில் இல்லாதவர்கள், ஜனாதிபதியோடு நெருக்கமான 'அவர்களைக்' கேளுங்கள் என்று கை நீட்டுகிறார்கள். நாங்களும் கோட்டாவின் ஆட்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களோ, தேர்தலில் வாக்களிக்கவில்லையென்று சொல்லி நழுவிக் கொள்ள விளைகிறார்கள்.
ஆளாளப்பட்ட ஜனாதிபதியின் தோழர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்று அலட்சியம் செய்து, அரச நல வழக்குகளுக்காக மாத்திரம் உச்ச நீதிமன்றம் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மரபுரிமை, பாரம்பரியம், சமவுரிமை, சுயகௌரவம் என எல்லாமே சந்தர்ப்பவாத பேச்சாகவும் விரைவில் மறக்கப்பட வேண்டிய விடயங்களாகவும் மாறிக் கொண்டு வருகிறது.
இதற்கிடையில் கிழக்கில் தொல்லியல் பாரம்பரிய முகாமைத்துவத்துக்கான விசேட செயலணியொன்று அதுவும் தொடர்ச்சியாக நாட்டின் இனவாதத்தை கொழுந்து விட்டு எரியச் செய்து கொண்டிருக்கும் ஊடகம் ஒன்றின் உரிமையாளரும் உள்ளடங்கலாக உருவாக்கியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
இந்த நியமனங்களையும் அமைப்பையும் கண்ணை மூடி ஏற்றுக் கொள்தல் அல்லது அதனை அலசி ஆராய்தல் என்ற இரு தெரிவுகள் இருந்தாலும், இறுதித் தீர்வு மௌனமாகவே இருக்கப் போகிறது. தற்போது நாடாளுமன்றம் ஒன்றும் இல்லாத நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் இந்நடவடிக்கையை கேள்விக்குட்படுத்தக் கூடிய சபையொன்று இல்லை. அதையும் தாண்டி பொது வெளியில் இது பற்றப் பேசுவதற்கு, குறிப்பாக தேர்தல் எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் பேசுவதற்கு யாருமே தயாராக இல்லை.
வட – கிழக்கு நிலப்பகுதிகள் நீண்டகாலமாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் பிராந்தியங்களாகவே இருந்து வருகிறது. எனினும், சிங்கள மக்களும், குறிப்பாக கிழக்கில், யுத்த காலத்துக்கு முன்பு ஓரளவு வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்கள் இருக்கிறது. ஆயினும், அவை மிகக் குறைந்த அளவாகவும், அரச தொழில், ஏனைய தனியார் தொழிற்துறை போன்ற காரணங்கள் நிமித்தமாகவுமே கடந்த அரை நூற்றாண்டுக்குள் அறியப்பட்டு வந்துள்ளது. எனினும், அம்பாறை மற்றும் அண்டிய பிரதேசங்களில் அதற்கு முன்பும் சிங்கள மக்கள் ஓரளவு செறிவாக வாழ்ந்து வந்த நிலையில் காலப் போக்கில் உருவான குடியிருப்புகளும் இல்லாமலில்லை.
பொத்துவில் நிலப் பிரச்சினை தொடர்பாக தேடி அலசிய போது, 1952க்கு முன்பாக தற்போதைய முஸ்லிம் குடியிருப்புகள் அமைந்துள்ள காணிப்பகுதியொன்றின் உரிமையாளர் சிங்கள மனிதராகவே இருந்ததாகவும் பலரால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போன்று, இன்று மலை நாட்டில் உள்ள கல்ஹின்னை என்ற ஊரை எடுத்துக் கொண்டாலும் அங்கு முஸ்லிம் குடியேற்றத்தின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்குட்பட்டதாகவே இருக்கிறது.
இப்படியான பலவீனங்கள் ஒரு புறமிருக்க, தம்புல்லயிலிருந்து பரவி, புல்மோட்டையில் பல காலங்களாக சர்ச்சையாக உள்ள அரசிமலை புனித பூமி, மாயக்கல்லி, பொத்துவில் என வித்திடப்பட்டு வரும் ஆதிக்கம் எச்சரிக்கையைத் தோற்றுவித்துள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டம் அதன் வெளித்தோற்றத்துக்கு அப்பால் ஆழமான செயற்பாட்டை நோக்கிச் செல்கின்றது என்ற சந்தேகம் தற்போது ஐக்கிய இலங்கையை விரும்பும் சிங்கள மக்களாலும் வெளியிடப்பட்டு வருகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அவ்வப்போது கிழக்கு மக்களை உணர்ச்சியூட்டுவதற்காகப் பயன்படுத்தி வந்த தென்கிழக்கு அலகு 2014ம் ஆண்டு சுவாரஸ்யமான விடயமாக மாறியது. மஹிந்த ராஜபக்சவை விட்டு வர முடியாமல் தவித்த அக்கட்சியின் தலைமைத்துவம், மக்கள் அலை பொது வேட்பாளர் பக்கம் திரும்பி விட்டது, இனி ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் மீண்டும் உப்பு சப்பில்லாத இந்த தென்கிழக்கு அலகு என்ற நிபந்தனையை முன் வைத்தது.
மஹிந்த ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று தெரியும். ஆனால், அது மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறும் போது அதனை மறுத்த மஹிந்த சிங்கள தேசத்தைக் காப்பாற்றிய வீரனாவார் என்ற கணிப்பும் சட்டத்தரணி ரவுப் ஹக்கீமிடம் இருந்திருக்கும். இருந்தாலும் அவ்வாறு ஒரு நிபந்தனையை முன் வைத்து விட்டு, அது கிடைக்கவில்லையென்று கூறி விட்டு பொது வேட்பாளர் பக்கம் வந்திருந்தார்.
எதிர்பார்த்தது போன்று, அந்த விடயத்தை மஹிந்த தரப்பு பேசு பொருளாக்கிய போது, அதிஷ்டவசமாக பாட்டாளி சம்பிக்க ரணவக்கவும், அத்துராலியே ரதன தேரரும் பொது வேட்பாளர் பக்கம் நின்றதால் அவர்கள் அடி மட்ட சிங்கள மக்கள் மத்தியில் அதை வேறு விதமாகத் தெளிவுபடுத்தி அங்கு அவர்கள் தமிழ் பேசும் அதிகாரிகளைத் தான் கேட்கிறார்கள், அந்த அலகுக்குள் தமிழ் பேசும் மக்களே செறிந்து வாழ்வதால் அவ்வாறு கேட்கப்படுகிறது, மற்றும்படி தனி நாடு கேட்கப்படவில்லையென பிரச்சாரம் செய்து ஆசுவாசப்படுத்தினார்கள்.
அதுவே, உண்மையானாலும் கூட இன்று கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் மரபுரிமை முகாமைத்துவத்துக்கான ஒரு விசேட செயலணி உருவாக்கப்பட்டு அதில் ஒருவரேனும் தமிழ் பேசும் சமூகங்களிலிருந்து இல்லாத நிலையில் எல்லோரும் மௌனம் காக்கிறார்கள். ஜனாதிபதியின் பங்காளிகள் என தம்மைக் கூறிக் கொள்ளும் முஸ்லிம் - தமிழ் தலைமைகள் தமது அரசியல் நலன்களுக்காக மௌனித்திருக்கின்றன.
எதிர்த்தரப்பு தலைமைகளோ, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, அதுவும் பாதுகாப்பு செயலாளரும் உள்ளடங்கியுள்ள குழு என்பதாலோ என்னவோ மௌனித்திருத்தல் நலம் என இருக்கின்றன. எது எவ்வாறாயினும், ஐக்கிய இலங்கை என்று பேசிக்கொள்வதற்கும் இலங்கையில் ஏனைய குடிகள் என்ற நிலை மாற்றம் உருவாவதற்குமிடையில் உள்ள வித்தியாசம் உணரப்பட்டேயாக வேண்டும்.
எங்கெங்கு இனி தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படும் என்ற செய்திகள் பல கதைகள் சொல்லும்!
- Irfan Iqbal
Chief Editor (Sonakar.com)
No comments:
Post a Comment