நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு கட்சி இருபத்தி எட்டாயிரம் வாக்குகளைப் பெறுமானால் அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கும் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப் பெறுவது உறுதியாகிவிட்டது. மிகுதியாக உள்ள இரண்டு ஆசனங்களில் ஒன்றை இன்றைய நிகழ்வுகளின் படி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொள்ளக்கூடிய அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
எஞ்சியுள்ள ஐந்தாவது ஆசனத்துக்கு போட்டி நிலவுகிறது அது எனக்கும் அமீர் அலி, பிள்ளையான், ஆகிய மூன்று பேருக்கும்தான் போட்டி நிலவுகிறது.
இப்போட்டியில் நான் நிச்சயமாக வெற்றி கொள்வேன் ஏனென்றால் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது காத்தான்குடியில் பதினெட்டாயிரத்து ஐந்நூறு வாக்குகள் கிடைத்தது. அதில் போட்டியிட்ட பதின்மூன்று வட்டாரத்தையும் நான் வென்றுள்ளேன்.
ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பிறகு அங்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் காரணமாக காத்தான்குடி பகுதியில் வாக்குகள் எனக்கு கூடியுள்ளது. எனவே காத்தான்குடியில் மாத்திரம் இருபத்தி இரண்டாயிரம் வாக்குகளை நான் பெற்றுக்கொள்வேன்.
அத்தோடு ஏறாவூர், கல்குடா ஆகிய இடங்களில் எனக்கு வாக்குகள் உள்ளது அந்தவகையில் இருபத்தி எட்டாயிரம் வாக்குகளை பெறுவது என்பது எனக்கு கஷ்டமில்லை என்றார்.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment