ஜமாஅத் தொழுகைகளில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்: ACJU - sonakar.com

Post Top Ad

Sunday, 14 June 2020

ஜமாஅத் தொழுகைகளில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்: ACJU


நாட்டில் கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் நோய் பரவியதன் காரணமாக மக்கள் ஒன்று கூடும் நிலைமைகளைத் தவிர்ப்பதற்காக மஸ்ஜித்களை மூடிவிட தீர்மானிக்கப்பட்டது. தற்போது சில கட்டுப்பாடுகளுடன் மஸ்ஜித்களை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்களுடைய வழிகாட்டலில் 50 நபர்களை விட அதிகமாக ஒரு இடத்தில் ஒன்று சேரக் கூடாது என்பது மிக முக்கியமானதாகும்.

ஆகவே, மஸ்ஜித்களில் தொழுகைகாக ஒன்று சேறும் பொழுது பின்வரும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களையும் மஸ்ஜித் நிருவாகிகளையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

மஸ்ஜிதுக்கு செல்லும் போது வீட்டிலிருந்தே வுழூ செய்து கொண்டு செல்லல்.

யார் தமது வீட்டிலேயே வுழூ செய்துவிட்டு இறைக் கட்டளைகளான தொழுகைகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, அவர் எடுத்துவைக்கும் இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது மற்றொன்று அவருடைய அந்தஸ்த்தை உயர்த்தி விடுகிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : 666)

ஸப்புகளில் நிற்கும் போது சமூக இடைவெளி 1 மீற்றர் தூரத்தைப் பேணுதல். நிர்ப்பந்த நிலையில் இவ்வாறு செய்யும் போது அதற்கான பரிபூரண கூலி கிடைக்கும்.

சுகாதார அமைச்சினால் ஒரு இடத்தில் 50 பேர்கள் மாத்திரம் ஒன்று சேர்வதற்கு அனுமதியளித்திருப்பதால், அந்த எண்ணிக்கையை மாத்திரம் மஸ்ஜிதுக்குள் அனுமதித்தல்.

ஐம்பது நபர்களை விட அதிகமானவர்கள் தொழுகைக்காக ஒன்று சேரக்கூடிய இடங்களில் பல ஜமாஅத்துக்களை நடாத்தலாம். ஒவ்வொரு ஜமாஅத் தொழுகைக்கும் நேரத்தைக் குறிப்பிட்டு மக்களுக்கு அறிவித்தல். முதலாவது ஜமாஅத் முடிந்து மக்கள் வெளியே சென்றதன் பின் அடுத்த ஜமாஅத்தை நடாத்துதல்.

குறிப்பாக பஜ்ர் மற்றும் மஃரிப் தொழுகையுடைய நேரங்கள் சுருக்கமாக இருப்பதனால் அதிகமாக மக்கள் ஒன்று சேரக்கூடிய மஸ்ஜித்களில், ஆரம்ப நேரத்திலே முதலாவது ஜமாஅத்தை நடாத்தி அதனைத் தொடர்ந்து தேவைக்கேற்ப பல ஜமாஅத்துக்களை நடாத்திக் கொள்ளலாம். இதற்காக மஸ்ஜித்களில் கடமை புரியும் இமாம்களுடன், மஹல்லாவில் இருக்கும் இமாமத்துக்குத் தகுதியானவர்களை நியமித்துக் கொள்ளலாம்.

முன், பின் சுன்னத்தான தொழுகைகளை தத்தமது வீடுகளிலே தொழுது கொள்ளல்.

சிறு பிள்ளைகள் மற்றும் நோயாளிகள் தற்போதைக்கு மஸ்ஜிதுக்கு சமுகமளிக்காமல், வீடுகளிலே தொழுது கொள்வது சிறந்தது. அதற்கான பரிபூரண கூலியை அல்லாஹ் வழங்குவான்.


வஸ்ஸலாம்

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்      
செயலாளர் - பத்வாக் குழு        
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா     

No comments:

Post a Comment