![](https://i.imgur.com/MtswXsk.png?1)
கொவிட் 19 வைரஸுக்கு எதிரான பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினாலும் பல்வேறு நிறுவனங்களினாலும் நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பங்களிப்பாக “கொவிட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டம்” என்ற தொணிப் பொருளின் கீழ் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் வைரஸ் கிருமித் தொற்று நீக்கி, சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்று 10.06.2020 ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் மத்திய கொழும்புப் பிரதேச மாளிகாவத்தைப் பகுதியில் உள்ள விகாரைகள், தேவாலயங்கள், இந்துக் கோவில்கள், பள்ளிவாசல்கள், வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் கொழும்பு பிரதேசச் செயலகம் என்பனவற்றிற்கு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வின் முதற்கட்டமாக உலமா சபையின் அங்கத்தவர்களினால் மாளிகாவத்தைப் பிரதேசத்தில் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் கலீல், அஷ்-ஷைக் எஸ்.எல்.நௌபர், அஷ்-ஷைக் தாஸிம், அஷ்-ஷைக் அர்க்கம் நூராமித் ஆகியோரும் சமாதி தர்மாயத்தன விஹாரையின் விஹாராதிபதி தங்கல்லே சாரத தேரர், மாளிகாவத்தை இந்துக்கோவிலின் பிரதம குருக்கள் இரா நீதிராஜ குருக்கள், மாளிகாவத்தை வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் ருச்சிர சமனபால, வைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தர் திருமதி மெனிக்கே, கொழும்பு பிரதேசச் செயலகத்தின் அதிகாரி அஜித் சமந்த குமார, மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் பிரஜா பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.டபிள்யு.எம்.விஜயகோன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
-ACJU
No comments:
Post a Comment